Features அரசியல்

இலங்கையின் ஈஸ்டர் தாக்குதல் புலனாய்வுகளில் வளர்ந்துவரும் “குறைபாடுகள்” தொடர்பான அவதானங்கள்

Written by Administrator
  • மீரா சிறீநிவாசன்

2019 ஏப்ரல் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான புலனாய்வாளர்கள் தமது ஆய்வின் “இறுதிக்கட்டத்தை” அடைந்துள்ள நிலையில், செயன்முறைகளின் வெளிப்படைத்தன்மையின் போதாமை குறித்து பல்வேறு தரப்புக்களில் இருந்தும் அவதானங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

279 உயிர்களைப் பலியெடுத்த கடந்த வருடத்தின் பயங்கர குண்டுவெடிப்பின் புலனாய்வுகள் முடிவடையப் போவதாகவும், இது தொடர்பில் 200 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும், சட்டத்தைப் பின்பற்றாமல் வெளிப்படைத்தன்மையின்றி சட்டத்தரணிகளும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் உரிமைப் போராட்டக் குழுக்களும் கைது செய்யப்படுவது செய்தித் தலைப்புக்களாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஏப்ரல் 14 ஆம் திகதிய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது அதிகளவிலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தச் சட்டத்தரணி, சிவில் விடுதலைச் செயற்பாட்டாளர்களினால் ரத்து செய்யுமாறு கோரப்படுகின்ற இலங்கையின் கொடுமையான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யபட்டு கடந்த இரண்டு மாத காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். முன்னைய ரணில்-மைத்திரி அரசாங்கம் இந்தச் சட்டத்தை ரத்து செய்வதாகக் கூறிய போதிலும் அவர்கள் அதனைச் செய்யவில்லை.

ஜூன் 24

கைது செய்யப்பட்டு 09 வாரங்கள் கடந்தும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படவோ அவர் கைது செய்யப்பட்ட வேளையில் அதற்கான காரணம் கூறப்படவோ இல்லை (ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.) கொழும்பு நீதவான் நீதிமன்றம் இவரை 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு சிஐடிக்கு அறிவுறுத்தியுள்ளது. பல வேண்டுகோள்களுக்குப் பின்னர் சிறியதொரு சந்திப்புக்காக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அவரது சட்டத்தரணியை சந்திப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது, அதுவும் அவரைத் தடுத்து வைத்துள்ள சிஐடி அதிகாரிகளின் முன்னிலையில்.

பொலிஸ் தகவல்களின்படி, அவரைத் தடுத்து வைப்பதற்கான உத்தரவு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினாலேயே கையொப்பமிடப்பட்டுள்ளது. புலனாய்வாளர்கள் யாரையும் காரணமின்றியோ ஆதாரமின்றியோ யாரையும் கைது செய்வதில்லை. இந்த ஆய்வுகளில் உரிய நடைமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய பீரிஸ் த இந்து வுக்குத் தெரிவித்தார். இதற்கிடையில் இவரது தடுப்புக் காவலினை சவாலுக்குட்படுத்தி இவரது குடும்பத்தினர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அப்போதைய ஜனாதிபதி சிரிசேன பாராளுமன்றத்தைத் திடீரெனக் கலைத்ததை சவாலுக்குட்படுத்திய 2018 அரசியலமைப்பு வழக்கில் முக்கியமானவராக எழுச்சிபெற்ற சட்டத்தரணியின் கைது உள்ளுர் மற்றும் சர்வதேச செயற்பாட்டாளர்களின் கவனத்தைத் தூண்டியுள்ளது.

மிகவும் ஆபத்தானவகையில், காதுகொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்த சிஐடி அதிகாரியின் பரிசோதனையின் கீழ் ஒரு சட்டத்தரணியைச் சந்திப்பதற்கு 15 நிமிடங்கள் கொடுத்ததைத் தவிர ஹிஸ்புல்லாஹ்வுக்கு அவரது குடும்பத்தினரையோ சட்டத்தரணியையோ சந்திப்பதற்கு மறுக்கப்பட்டது. இது ஒருவரின் வழக்கறிஞரை அணுகுவதற்கான முறையான ஒழுங்காக இருக்கவி்ல்லை என 158 வழக்கறிஞர்களின் அறிக்கையொன்று கூறுகிறது. சிவில் சமூக பிரதிநிதிகள் வெளியிட்ட அறிக்கையில், கைது செய்யப்பட்டதில் “மிகவும் சிக்கலான அம்சம்”, “சட்டத்தரணி-வாடிக்கையாளர் சிறப்புரிமையை கடுமையாக மீறும் வகையில்”, சீஐடி அதிகாரிகள் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் இரண்டு வழக்குக் கோப்புக்களை அணுகியதே எனக் கூறப்படுகிறது.

ஐரோப்பிய யூனியனின் கருத்துரைகள்

இலங்கைக்கான ஐரோப்பிய யூனியனின் தூதுக்குழு, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது தொடர்பில் தமது “ஆழ்ந்த கவலையை” இலங்கை அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்ததாகவும், இலங்கையின் 40 ஆண்டுகால பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தை (PTA) மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை மீளவும் வலியுறுத்தியதாகவும் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.

அவர் கைது செய்யப்பட்டமை குறித்து, மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவான சர்வதேச மன்னிப்புச் சபையின் மதச் சகிப்பின்மையை நீக்குவது தொடர்பிலான அறிக்கையில், புதிய அரசாங்கம் இன்னும் அதன் முதல் வருடத்தில் இருக்கையிலேயே இலங்கை முஸ்லிம்களை பேய்களாக்குவதும் இழிவுபடுத்துவதும் பலிக்கடாவாக்குவதும் மிகவும் அவதானத்துக்குரியதாகும் என கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பாகுபாடுகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளது.  

பயங்கரவாத குண்டுத் தாக்குதல் காரணமாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விசாரிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த வருடம் மே மாதத்தில் இது தொடர்பில் விசாரண நடத்திய சிஐடி குழுவினர் – இந்தக் குழுவினர் 2019 நவம்பரின் பின்னர் மாற்றப்பட்டனர் – இவரை “ஒரு சில தடவைகள்” விசாரித்துள்ளனர் என புலனாய்வு தொடர்பில் பரிச்சயமான ஒரு தகவலாளி த இந்து விடம் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்களின் ஒன்பது தற்கொலைத் தாக்குதல்தாரிகளில் இருவரின் தந்தையான வாசனைத் திரவியங்கள் வர்த்தகர் வை.எம்.இப்ராஹிமின் குடும்பத்தினருக்கு ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் வியாபார விடயங்களில் ஆலோசகராக இருந்திருக்கிறார். த இந்துவின் தகவல் மூலங்கள் அறிந்தவகையில், ஆளடையாளத்தை வேண்டக்கூடிய, நடந்து கொண்டிருக்கும் விசாரணைகளில் தாக்கம் செலுத்தக் கூடிய “வேறு எந்த சான்றுகளும் இப்ராஹிம்களுடன் தொடர்புபடுத்தக் கூடிய வகையில் இல்லை” என புலனாய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

கேள்விக்குள்ளாக்கப்படுவது ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது மட்டுமல்ல. குறித்த சிறுவர்கள் தற்போது செல்லுகின்ற புத்தளம் நகரிலுள்ள மத்ரஸாவுக்கு நிதியளிப்பதாகச் சொல்லப்படுகின்ற ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சம்பந்தப்படும் நலன்புரி நிதியத்தின் செயற்பாடுகளுடன் தொடர்புபடுத்தி சிறுவர்கள் சிஐடியினால் “மிரட்டப்பட்டதையும்” “கடுமையாக நடத்தப்பட்டதையும்” சவாலுக்குட்படுத்தி சிறுவர்கள் சார்பாக உயர்நீதிமன்றத்தில்   கடந்த மாதம் குறைந்தது மூன்று அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் உட்பட இலங்கையர்கள் அனைவரும் விளைவுகள் நம்பக் கூடியதாக இருக்கும் வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி ஈஸ்டர் புலனாய்வுகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்றே விரும்புவதை சட்ட வல்லுனர்கள் அவதானிக்கின்றனர்.

அரசியலமைப்பு சட்டத்தரணியும் சிவில் விடுதலை தொடர்பான பத்தி எழுத்தாளருமான கிஷாலி பின்டோ ஜயவர்தன சொல்லுவதன்படி, ஈஸ்டர் தாக்குதல்களில் மட்டுமன்றி இலங்கையின் எந்தவொரு “உயர்மட்ட“ குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளினதும் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் “முக்கியமான குறைபாடு“ அது “அரசாங்கத்தின் அரசியல் கரங்களால் கைப்பற்றப்படுகிறது“ என்பதே. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஈஸ்டர் தாக்குதல் புலனாய்வுகளின் வெளிப்படைத்தன்மை தொடர்பான பொதுமக்களின் நம்பிக்கையும், முன்னைய ஆட்சியின் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் கேலிக் கூத்தைப் போலவே நம்பிக்கை குறைவானதாக இருக்கிறது. ஏனெனில் இறுதி முடிவு இந்த அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் பாதுகாப்பதாகவே இருக்கும் என அவர் த இந்து வுக்குத் தெரிவித்தார்.

உரிய நடைமுறை என்பது கைது செய்யப்படும் நேரத்தில் அரச அதிகாரிகளிடம் கைதுக்கான நம்பகமானதும் ஒரு நோக்கத்தையுமுடைய காரணங்கள் இருக்க வேண்டும். கைது செய்யப்பட்ட பின்னர் ஏதோ ஒரு நியாயம் கற்பிக்கப்படுவது அல்ல என அவர் கூறுகிறார். இந்தக் கோட்பாடு உயர்நீதிமன்றத்தினால் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள பல அரசியலமைப்பு மீறல்களை நாங்கள் கையாண்டிருக்கிறோம். ஆனால் இவை எதுவுமே இனி முக்கியமல்ல. சட்டத்தரணிகள் தமது பணியைத் தொடர்வதற்காக தாமே தண்டிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவிக்கிறார். – த இந்து   

About the author

Administrator

Leave a Comment