உள்நாட்டு செய்திகள்

அடையாள அணிவகுப்புக்கு முன் ஹிஜாஸின் அடையாளத்தைக் காட்ட சிஐடியினர் முயற்சித்தார்கள்

Written by Administrator

இரு சிறுவர்களிடமிருந்தும் வாக்குமூலம் பெறுவதற்கு முன்னர் சிஐடியினர் தனது அறையில் வைத்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் புகைப்படத்தை அவர்களுக்குக் காண்பிப்பதற்கு முயற்சித்தார்கள் என கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

புத்தளம் மத்ரஸாவொன்றின் மாணவர்களுக்கு தீவிரவாதத்தைப் போதித்தார் என சிஐடியினர் முன்வைத்த அறிக்கையின் அடிப்படையில் 10 சிறுவர்களுக்கு முன்னால் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை அடையாளம் காட்டுவதற்கான அடையாள அணிவகுப்பொன்றை 24 ஆம் திகதி நடத்துவதற்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதற்கமைய அழைத்துவரப்பட்ட சிறுவர்கள் இருவரிடமே சிஐடியினர் ஹிஜாஸை அடையாளம் காட்டக் கூடிய புகைப்படத்தை அடையாள அணிவகுப்புக்கு முன்னர் காட்டியுள்ளனர்.

இதனை நான் வெளிப்படுத்தத்தான் வேண்டும். சிஐடி அதிகாரிகள் எனது அறையில் வைத்து புகைப்படத்தைக் காட்டினார்கள். நான் அவர்களை வெளியேறச் சொல்ல நேர்ந்தது என கோட்டை நீதவான் மன்றுக்கு வெளியில் தெரிவித்தார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நவரத்ன பண்டார தலைமையில் ஆஜராகிய ஹர்ஷன நாணயக்கார, ஹபீல் பாரிஸ் உட்பட்ட சட்டத்தரணிகள் குழுவினர், அடையாள அணிவகுப்பை கடுமையாக எதிர்த்தனர். ஹிஸ்புல்லாஹ்வை அடையாளம் காட்டுவதற்கு சிறுவர்கள் வற்புறுத்தப்பட்டதாகக் கூறிய இவர்கள், ஒரு சட்டவிரோத செயற்பாட்டை சட்டபூர்வமாக்குவதற்கான போலியான செயற்பாடே இந்த அடையாள அணிவகுப்பு எனத் தெரிவித்தனர். ஹிஜாஸின் புகைப்படம் ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக அணிவகுக்கப்பட்டுள்ள சூழலில் இந்த அடையாள அணிவகுப்பு சட்டவிரோதமானது எனவும் அவர்கள் வாதிட்டனர்.

தாம் சித்திரவதைக்கும் பலாத்காரத்துக்கும் உள்ளாக்கப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்துள்ள மூன்று சிறுவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி நுவன் போபகே, சிஐடி அடையாள அணிவகுப்பை நடத்த முயற்சிப்பது உயர்நீதிமன்றத்தில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கே எனத் தெரிவித்தார்.

சட்டத்தரணிகளின் வாதங்களைக் கேட்டறிந்ததன் பின்னர் கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க அடையாள அணிவகுப்பை ரத்து செய்தார்.

About the author

Administrator

Leave a Comment