உலக செய்திகள்

அமெரிக்காவின் கொரோனா பாதிப்பு 2 கோடியைத் தாண்டலாம்

Written by Administrator

அமெரிக்காவில் குறைந்தது இரண்டு கோடி மக்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது.

அதாவது, அமெரிக்காவில் தற்போது கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 24 லட்சத்தை விட உண்மையான பாதிப்பு பத்து மடங்கு அதிகமாக இருக்கும் என்று அந்த நாட்டின் நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வருவதால் அங்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த முடக்க நிலை தளர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

சமீபத்திய நிலவரத்தின்படி, அமெரிக்காவில் இதுவரை 24 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்குப்பகுதிகளிலுள்ள மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருவது அங்கு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,80,000ஆக அதிகரிக்க கூடும் என்று வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒருவேளை 95 சதவீத அமெரிக்கர்கள் முகக்கவசங்களை அணியும் பட்சத்தில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை 1,46,000ஆக கட்டுப்படுத்த முடியுமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author

Administrator

Leave a Comment