உள்நாட்டு செய்திகள்

கறுப்பு இனவாதத்துக்கு எதிராக வெள்ளையாக்கும் கிறீம்கள்

Written by Administrator

அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் பிரபலமான தமது இரு கிரீம்களை இனித் தயாரிக்கவோ விற்கவோ போவதில்லை என அறிவித்ததைத் தொடர்ந்து முகப் பொலிவுக்கான பெயார் அன்ட் லவ்லியின் பெயரிலிருந்து பெயார் என்பதை எடுத்துவிட யுனிலீவர் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

வெள்ளையாக இருப்பது தான் அழகு என்றும் இதனால் நிறம் குறைவாக இருக்கும் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் பலதரப்புக்களிலும் இருந்து எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து யுனிலீவர் நிறுவனத்தின் இந்தியத் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிட்டட் இந்தத் தீர்மானத்துக்கு வந்திருக்கிறது. முகத்தின் கருமையைக் குறைக்கும் கிரீம்களில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பெயார் அன்ட் லவ்லியின் ஆண்டு வருமானம் 24 பில்லியன் இந்திய ரூபாய்களாகும்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்லொய்டின் மீதான இனவெறிச் செயற்பாட்டின் பின்னர் உலகெங்கும் நிறவெறிக்கெதிரான போராட்டங்கள் மிகைத்து வரும் நிலையிலேயே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபற்றி ஜான்சன் அன்ட் ஜான்சன் குறிப்பிடும் போது, எங்களின் சில பொருட்களின் விற்பனைப் பெயர்களும் அதுகுறித்த வாசகங்களும் உங்களின் நிஜமான நிறத்தை விட வெள்ளை நிறமே சிறந்தது என்று கூறுவதைப் போல உள்ளது என கடந்த சில வாரங்களாக விமர்சனங்கள் எழுகின்றன. இது எங்களது நோக்கமல்ல, ஆரோக்கியமான சருமமே எமது நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளது.

About the author

Administrator

Leave a Comment