முன்னாள் அமெரிக்கப் பிரஜை தனது எம்சிசி நிலைப்பாட்டை வெளியிட வேண்டும்

26

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கப்பட்ட எம்சிசி தொடர்பிலான தமது தற்போதைய நிலைப்பாட்டை ஜனாதிபதி வெளியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் ருவன் விஜேவர்தன வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்க்கட்சியைக் குறை கூறுவதை விட்டு விட்டு இது தொடர்பில் தான் சரியானது எனக் கருதுவதை மக்களுக்குக் கூற வேண்டும். எம்சிசி ஒப்பந்தம் முலம் முன்னைய அரசு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெற்றுக் கொண்டதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இதற்கான எந்தக் கணக்குகளும் இல்லை. அமெரிக்கத் தூதரகமும் இதனை மறுத்திருக்கிறது. இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அரசாங்கத்துக்குத் தெரிந்த விடயங்களை அது வெளிப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கந்தானையில் நேற்று நடந்த கூட்டமொன்றில் அவர் உரையாற்றும் போது, கடந்த தேர்தலில் பொய்யான தகவல்களைப் பரப்பிய அரசியல்வாதிகளின் நிலைக்கு ஜனாதிபதியும் உள்ளாகியிருப்பது கவலை தருகிறது. முன்னாள் அமெரிக்கப் பிரஜை என்ற வகையில் அமெரிக்க ஒப்பந்தம் தொடர்பிலான அவரது நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் போதே எம்சிசிக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் எம்சிசியை எதிர்ப்பதே ஜனாதிபதி ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கான சுலோகமாகப் பயன்படுத்தப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.