Features அரசியல்

இனவாத அரசியலுக்காக மீண்டும் அவதாரம் எடுக்கும் ஞானசார தேரர்

Written by Administrator
  • லதீப் பாரூக்

சில வாரங்களுக்கு முன்பு சிங்களவர்களைத் தூண்டுவதற்கும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கும் பேர் பெற்ற கலகொட அத்தே ஞானசார தேரோ சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் பௌத்த அரசாங்கத்தை அமைக்கும் இலக்கை அடைந்து விட்டதால் தனது அமைப்பான பொதுபல சேனாவைக் கலைப்பதாகக் கூறினார். 2019 நவம்பர் 15 இல் தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைத்ததும் அவர் சாந்தமடைந்தார். இப்போது பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அவர் மீண்டும் சிங்களவர்களை முஸ்லிம்களுக்கெதிராக கிளப்பி வருகிறார். 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலின் போது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சிங்கள வாக்குகளை வென்றெடுக்க முஸ்லிம்களை அரக்கர்களாக்குவதற்காக பௌத்த பிக்குகளும் விகாரைகளும் பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

சிங்கள வாக்குகளைப் பெறுவதற்கான இந்தப் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக 43 முன்னணி முஸ்லிம் அமைப்புக்களையும் நிறுவனங்களையும் தீவிரவாதிகளாக முத்திரை குத்த முயன்றார். அதிலும் குறிப்பாக பேருவலையில் உள்ள அறிவு ஒளி வீசும் ஜாமிஆ நளீமியாவுக்கும் தீவிரவாத முத்திரை குத்தினார். கறுப்புக் குடம் வெள்ளிக் கேத்தலையும் கறுப்பென்றுதான் அழைக்கும். தடுக்கப்படாமல் தொடருகின்ற முஸ்லிம்களுக்கெதிரான ஒரு தசாப்தகால பிரச்சாரங்கள் மற்றும் வன்முறைகளினால் தீவின் முஸ்லிம்கள் ஆழமாகக் காயப்படுத்தப்பட்டுள்ள வேளையிலேயே இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இனப் போரின் போது எல்ரிரிஈயின் நாட்டைத் துண்டாடும் முயற்சிக்கு ஆதரவளிக்காத காரணம் மட்டுமே அவர்கள் முஸ்லிம்களைத் துன்புறுத்துவதற்குக் காரணமாக அமைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். வடக்கிலும் வடகிழக்கிலும் உள்ள முழு முஸ்லிம் மக்களும் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் எல்ரிரிஈயினரால் துரத்தியடிக்கப்பட்டார்கள். அவர்களது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. வெறும் 150 ரூபாவுடன் மட்டும் அவர்கள் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். கிழக்கில் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். எல்ரிரிஈயினரால் அவர்களது நிலங்கள் அபகரிக்கப்பட்டன. வாழ்வாதாரங்கள் பிடுங்கப்பட்டன.

2009 இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதும் முஸ்லிம்கள் இயல்பு வாழ்க்கை வாழத் தொடங்கினர். ஆனாலும் நன்கு திட்டமிடப்பட்ட வன்முறைத் தாக்குதல்களின் அலை தொடங்கிய போது அவர்களின் நம்பிக்கைகள் சிதைந்தன. இந்தப் பிரச்சாரம் அனுராதபுரவில் 400 வருடங்கள் பழமை வாய்ந்த பள்ளிவாசலை உடைத்து நொறுக்குவதில் தொடங்கி, தம்புள்ள மற்றும் ஏனைய பள்ளிவாசல்கள் எனத் தொடர்ந்தது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டன. அரசாங்க வைத்தியசாலைகளில் முஸ்லிம் வைத்தியர்கள் சிங்களப் பெண்களிக் கருவளத்தை அழிப்பதாக குற்றம் சாட்டப்பட்டார்கள். முஸ்லிம் சிறுவர்கள் ஆசிரியர்களுக்கு முழந்தாளிட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் பெயருடன் பன்றியையும் இணைத்து ஊர்வலம் போனார்கள். முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஜவுளிக் கடைகளும் ஏனைய கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. முகத்திரை அணிகின்ற, ஹிஜாப் அணிகின்ற முஸ்லிம் பெண்களுக்கெதிராக மோசமான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நோர்வே கோட்பாடுகளால் ஆதரவளிக்கப்பட்ட முஸ்லிம் விரோத பிக்குகளாலும் அவர்களுடைய பரிவாரங்களாலுமேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பது பரவலாக அறியப்பட்டது.

பல பொதுக் கூட்டங்களில் பிக்குகள் முஸ்லிம்களுக்கெதிராக சிங்களவர்களை வெளிப்படையாகவே தூண்டினர். முஸ்லிம்களின் வர்த்தகங்களைப் புறக்கணிக்குமாறு சிங்களவர்களை வேண்டினர். குருநாகலையில் முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்கியவர்கள் கூழ் முட்டைகளால் அடிக்கப்பட்டனர். நிச்சயமாக இவை வன்முறைத் தீவிரவாதிகளாக மாறிய ஒரு சில தீவிரவாதிகளின் அசிங்கமான வேலைகளே.

அரசாங்கத்தின் அலட்சியமும் குற்றவாளிகளை குறித்த வேலைக்கு இட்டுச் செல்வதில் பொலிசார் காட்டிய ஆர்வமும் உறக்கமில்லா இரவுகளைக் கழித்து முஸ்லிம்களிடையே பயங்கரவாதத்தைத் தூண்டின. நிலைமை மிகவும் ஆபத்தானது எனக் கூறும் களனிய பல்கலைக்கழத்தின் விரிவுரையாளர் கல்கந்தே தம்மானந்த தேரோ, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் கலந்துரையாடல்கள் மூலமே தீர்க்கப்பட வேண்டும். பிக்குகளாகிய நாங்கள் சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே இதில் பலமுறை தோல்வி அடைந்திருக்கிறோம். இப்பொழுது நாங்கள் மற்றுமொரு சுற்று வன்முறையை எதிர்நோக்கியிருக்கிறோம். எந்த நேரத்திலும் ஒரு கறுப்பு ஜூலை மீண்டுவரும் என்று நான் நினைக்கிறேன். இம்முறை அது முஸ்லிம்களுக்கு எதிரானதாகவிருக்கும் என்கிறார்.

இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நடத்திச் செல்லப்படும் உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் அங்கமாக, இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொசாடினால் பயிற்சியளிக்கப்பட்டு, நோர்வேயினதும் அதன் புதுடில்லி மிஷனினதும் ஊடாக இஸ்ரேலினால் நிதியளிக்கப்பட்ட கூலிக்காரர்களே இவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்திய ஆர்எஸ்எஸ் பாசிசக்காரர்களுக்கும் இஸ்ரேலுக்கும் நாட்டைத் திறந்து விடுவதிலுள்ள அபாயம் பற்றி நான் பலமுறை எழுதியிருக்கிறேன். இஸ்ரேல் என்பது பிரித்தானிய மற்றும் பிரான்சிய சக்திகளாலும் பின்னர் இணைந்து கொண்ட அமெரிக்க மற்றும் முன்னைய சோவியத் யூனியனினாலும் மத்திய கிழக்கில் விதைக்கப்பட்டது என்பதை பெரும்பாலான இலங்கையர் அறிந்திருக்கவில்லை. ஆர்எஸ்எஸ்ஸினதும் அதன் வஞ்சக முன்னணியான பிஜேபியினதும் மூல நோக்கம் இந்தியாவில் முஸ்லிம் மக்களை ஒடுக்கி இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக்குவதாகும்.

பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை குலைக்கவே இஸ்ரேலும் ஆர்எஸ்எஸ்ஸும் செயற்படுகின்றன. இலங்கை இந்தச் சக்திகளுக்கு கதவுகளைத் திறந்து விட்டதிலிருந்து இவை இரண்டும் சிங்கள முஸ்லிம் ஒற்றுமையை பிளவுபடுத்துவதற்காகச் செயற்பட்டு வருகின்றன.

தங்களது பிரச்சினைகளைப் பற்றி தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவார்கள் என்று முஸ்லிம்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இது அவர்களது பதவிகளையும் சலுகைகளையும் பாதிக்கும் என அஞ்சி அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரே முஸ்லிம் சமூகத்தின் வேதனையைப் பற்றிக் குரலெழுப்பினர்.

இதற்கிடையில் 2015 டிசம்பர் 5 இல் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது. முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக வாக்களித்த மைத்திரிபால சிரிசேனவுக்கு முஸ்லிம்கள் வாக்களித்தனர். ஆனால் அனைத்து எதிர்பார்ப்புக்களையும் தவிடுபொடியாக்கி மைத்திரி ரணில் அரசாங்கத்திலும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்தன. கிந்தொட்டவில் தொடங்கி திகன, அக்குரண, அம்பாறை என மூர்க்கத்தனமான தாக்குதல் தொடர்ந்தன.

இந்தத் தாக்புகுதல்கள் ஈஸ்டர் தாக்குதலின் திருப்பு முனையாக அமைந்தன. வெறிபிடித்த சில முஸ்லிம்கள் இதற்கென கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் பழியைப் போட்டு அவர்களை அரக்கர்களாக்கி அவர்கள் மீது வன்முறையைத் தூண்டிவிடுவதற்காக இவர்களுக்கு நிதி அளி்க்கப்பட்டது. தீவிரமயப்படுத்தப்பட்ட ஒரு சில முஸ்லிம் இளைஞர்களால் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னால் வெளிநாட்டுச் சக்திகளின் மறைகரம் இருக்கிறது என கருதினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சாட்டினார்.

இந்தப் படுகொலைக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டே பல முஸ்லிம் நிறுவனங்களும் நபர்களும் உரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். அப்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் எதனையும் செய்யவில்லை. முஸ்லிம்கள் அதற்குரிய விலையைக் கொடுக்க நேர்ந்தது. அப்பாவி முஸ்லிம்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகிறார்கள். சிலர் தண்டிக்கப்படுகிறார்கள்.

மருத்துவமனைக் காவலாளிகள் மட்டுமன்றி கடைகளிலும் சுப்பர் மார்க்கட்டுகளிலும் கூட முஸ்லிம் பெண்கள் தமது முகத்திரைகளையும் பாரம்பரிய முந்தானைகளையும் அப்புறப்படுத்துமாறு வேண்டப்பட்டார்கள். மோப்ப நாய்களையும் அழைத்துக் கொண்டு பாதுகாப்புப் படையினர் பள்ளிவாசல்களில் பூட்ஸ் கால்களுடன் நுழைந்தார்கள். பேராசிரியர் ராஜன் ஹூலின் இலங்கையின் ஈஸ்டர் சோகம் – ஆழமான அரசு அதன் ஆழத்திலிருந்து வெளியேறிய போது என்ற புத்தகத்தின் வாசகங்களில் சொல்வதானால், முஸ்லிம்களை அரக்கர்களாகச் சித்திரித்து உரிமைகளைப் பிடுங்கி அவர்களை, 1948 இல் இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் செய்தது போல, நாடற்றவர்களாக்குவதே இதன் இலக்கு.

முஸ்லிம்களை அரக்கர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்திரிப்பதற்கான பல் முகம் கொண்ட முஸ்லிம் விரோதப் பிரச்சாரம் ஞானசார தேரரைப் பயன்படுத்தி இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அவர் நளீமியா கல்வி நிறுவனம் தீவிரவாதத்தைப் போதிப்பதாகவும், கண்ணியத்துக்குரிய இஸ்லாமிய அறிஞர் யூசுப் கர்ளாவி வெறுப்பைப் பிரச்சாரம் செய்வதாகவும் விபரித்தார். இந்தக் குற்றச் சாட்டுக்கள் சிங்களவரின் மனதில் விஷத்தை விதைப்பதை நோக்கமாகக் கொண்ட இட்டுக்கட்டப்பட்ட புனைவுகளாகும். கொழும்பிலுள்ள எகிப்திய தூதரகம் கூட யூசுப் கர்ளாவியை கடுமையைப் போதிப்பவராகவும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை பயங்கரவாத அமைப்பாகவும் விபரித்திருந்தது.

ஜனாதிபதி முஹம்மது முர்சியின் ஜனநாயக ரீதியாகத் தெரிந்தெடுக்கப்பட்ட முதல் அரசாங்கத்தைக் கவிழ்த்த பின்னர் அதிகாரத்தை நிலைநிறுத்திய எகிப்திய ஆட்சியின் கொழும்பிலுள்ள இராஜதந்திரப் பணிமனை பேசும் சியோனிஸ மொழியே இது. ஜனாதிபதி முர்ஸியின் அரசாங்கம் பலவந்தமாக நசுக்கப்பட்டு எகிப்தின தற்போதைய சர்வாதிகாரியால் கவிழ்க்கப்பட்டது. தனிமைச் சிறையில் பரிதாபகரமான முறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டார். எகிப்தின் ஜனாதிபதி அங்கேயே மரணத்தைத் தழுவினார். மற்றுமொரு நீண்டகால எகிப்திய சர்வாதிகாரியான ஹுஸ்னி முபாரக்கையும் ஆட்சியிலிருந்து இறக்கிய எகிப்தின் வீரக்குடிமக்கள், அமெரிக்க – இஸ்ரேலிய இராணுவ அச்சினைப் பாதுகாப்பதற்காக, முழு இராணுவ வலிமையையும் பயன்படுத்தி அடக்கப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான முர்ஸியின் ஆதரவாளர்கள் கொன்று, சிலரை பள்ளிவாசல்களிலேயே,  முர்ஸியின் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான ஒரு இராணுவ சதித்திட்டத்தை நியாயப்படுத்துவதற்காக உணவு மற்றும் எரிபொருளின் செயற்கைப் பற்றாக்குறையை உருவாக்குதவற்கென 11 மில்லியன் டொலர்களைச் செலவழிப்பதற்கு வெட்கம் கெட்ட சவூதி, அபுதாபி, குவைத் கைக்கூலிகள் தமக்குக் கிடைத்ததை இஸ்ரேலியர்கள் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதை மறந்துவிடக் கூடாது. ஆகவே கர்ளாவி அல்லது ஹஸனுல் பன்னாவின் சகோதரத்துவ இயக்கம் தொடர்பில் இந்தச் சூழ்ச்சியாளர்கள், கொலைகாரர்கள் மற்றும் அவர்களது இராஜதந்திரப் பணிமனைகளிடமுமிருந்து எந்தவொரு நல்ல வார்த்தையையும் எதிர்பார்க்க முடியாது.

அதேவேளை சிங்கள வாக்குகளை வெல்வதற்கான தற்போதைய முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சார அலை, நிச்சயமாக நாட்டின் நலனுக்கானதல்ல. இலங்கை முஸ்லிம்கள் நாட்டிலுள்ள மூன்று சமூகங்களிலும் மிகவும் அமைதியானவர்கள் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா விபரித்திருக்கிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தலைமைத் தளபதி அட்மிரல் ஆர் விஜேகுணரத்ன, தெல்தெனிய, கண்டி, அம்பாறை பிரதேசங்களில் சி்ங்கள தீவிரவாதக் குழுக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீவைப்பு வன்முறைகளின் பின்னர் அமைச்சரவையில் உரையாற்றும் போது முஸ்லிம்களுக்கு இப்படி நடக்கவிடக் கூடாது. சாதுரியமான முஸ்லிம் அதிகாரிகளால் தான் நாம் உயிரோடிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

ஊழல் நிறைந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் தம்மைத் தாமே தலைவர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட சமயத் தலைவர்களும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. இந்த இரண்டுக்கும் மத்தியிலும் தற்போதைய முஸ்லிம் விரோத பிரச்சாரங்களுக்கும் இடையில் அகப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம் உதவியற்று குரலற்றுப் போயிருக்கிறது. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வன்முறையுடன் தொடர்புபடுத்துகின்ற இனவாத அரசியலுடனும் அதற்குத் துணை போகின்ற ஊடகங்களுடனும் அவர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றார்கள். கொரோனாவால் மரணித்த தமது இறந்த உடல்களை ஒழுங்காக அடக்குவதற்கு மறுக்கின்ற, அதிகார பலம் கொண்ட செயலணியொன்றை பொத்துவிலுக்கு அனுப்பி இராணுவத்தின் முன்னிலையில் பலவந்தமாக அளக்கப்படுகின்ற செயற்பாடுகள் முஸ்லிம்களிடம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன.

இவ்வாறு ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டுவது பல்லின , பல்மத, பன்மொழி மற்றும் பல்கலாச்சாரங்களைக் கொண்ட ஒரு நாட்டின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமான அறிகுறியல்ல. நாடு ஆழமான பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. இனத்துவ மற்றும் இனவாத அரசியல் நாட்டை மூடர்களின் சொர்க்கபுரியாகவே மாற்றும்.

அநீதிக்கும் அவமதிப்புக்கும் எதிராகப் போராடுவது அனைத்து முஸ்லிம்களுக்கும் கடமையாகும் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். இத்தகையதொரு சூழ்நிலையில் தீங்கிழைக்கும் பிரச்சாரத்தைத் தொடர்வதும் அவர்களை அரக்கர்களாக்குவதும் நிச்சயமாக நாட்டுக்கான சேவையாக அமையப் போவதில்லை. இனவாத அரசியலின் கடந்த சில தசாப்தகால மரணங்கள், அழிவுகள், துயரங்கள் அனைத்துக்கும் மேலாக சராசரி சிங்கள,தமிழ், முஸ்லிம்கள் அனைவரும் கடந்த நூற்றாண்டுகளைப் போலவே ஒற்றுமையுடனும் அமைதியாகவும் வாழவே விரும்புகின்றனர்.

1948 இல் சுதந்திரம் பெற்ற காலத்தில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் இனநல்லிணக்கத்துக்கு இலங்கை ஒளிமயமானதொரு எடுத்துக்காட்டாகவிருந்தது. துரதிர்ஷ்டவசமாக அரசியல் ஸ்திரமின்மை, சரிந்து விழும் பொருளாதாரம் போன்றவற்றை எதிர்கொள்கின்ற தவறாக நிர்வகிக்கப்பட்ட நாடாக இன்று இனவாத அரசியல் நாட்டை மாற்றியுள்ளது.  அனைத்துக்கும் மேலாக சமூகங்கள் பிளவுபட்டுள்ளன.

முரண்பாடு என்னவென்றால், உலகத்தைப் பேரழிவுக்குள்ளாக்கிய கொரோனா வைரஸினால் பொருளாதாரம் சரிந்து, மக்கள் தொழிலை இழந்து, சம்பளங்கள் வெட்டப்பட்டு இருக்கும் சூழலில், ஆழ்ந்த கடனில் நாடு மூழ்கடிக்கப்படுவதற்கான அனைத்தையும் கொண்ட சிக்கலில் நாடு இருக்கும் நிலையில் இது நிகழ்வது கவலையானது.

மீளவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரத்தை எதிர்ப்பதற்கு இது தருணமில்லையா ?       

About the author

Administrator

Leave a Comment