இலங்கையில் சொந்தக்காரரில்லாத இஸ்லாம்

25
  • அபூ ஷாமில்

இலங்கையில் உள்ள எல்லா மதங்களிலும் இஸ்லாம் தான் இளைமையானது. இறுதியாக வந்த மார்க்கத்தின் இறுதியாக வந்த தூதரின் இறுதிக் காலத்திலேயே இஸ்லாம் இலங்கைக்கு வந்திருக்கிறது. 1441 வருடங்களில் கடந்த 10 வருடங்கள் தவிர இலங்கையில் இஸ்லாம் பெருமைக்குரிய மார்க்கமாகவே இருந்து வந்துள்ளது. இன்றும் அதன் பெருமை குன்றாவிட்டாலும் இதுவரையில்லாத எதிரிகள் முளைத்ததால் அதன் ஒளி குடத்தில் வைத்த விளக்காகியிருக்கிறது.

தேர்தலுக்காகவென மீண்டும் அவதரித்த ஞானசார தேரரின் பிரசாரங்கள் மீ்ண்டும் இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயங்களை நாட்டில் விதைத்து வருகிறது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் புதிதாக வெளிவரும் விடயங்கள் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன. அதனை ஒரு வெறுக்கத்தக்க மதமாக மாற்றுவதில் ஊடகங்களும் சளைக்காத பங்காற்றுகின்றன.

ஊடகங்களால் இழிவுபடுத்துகின்ற அளவுக்கு மோசமான மதமாக இஸ்லாம் இருக்காது என்ற நம்பிக்கை பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. ஆனால் இதனை இஸ்லாமிய முகாமிலிருந்து யாரும் தெளிவுபடுத்தாதவரை ஊடகங்கள் ஊதிப் பெருப்பிப்பதை நம்ப வேண்டிய நிர்ப்பந்தமும் அவர்களுக்கு இருக்கிறது.

இஸ்லாம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளித்து இஸ்லாத்தை தூய்மைப்படுத்துவது யார் ? அதற்குத் தான் இஸ்லாமிய அறிஞர்களின் சபை ஒன்றிருக்கிறதே, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று விட்டு விடுவதா ? இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிம்களுக்கு இருக்கின்ற சந்தேகங்களுக்கே அவர்களால் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறதே என்று இதற்கான மாற்றுவழியைப் பற்றி யோசிப்பதா ?

இன்னொன்றை உருவாக்குவதில் முஸ்லிம் சமூகம் எப்படி இறங்குவது என்ற யோசனைக்கே இடமின்றி, ஒரு ஜமாஅத் ஒழுங்காகச் செயற்படவில்லை என இன்னொரு ஜமாஅத், ஒரு என்ஜிஓ சரிவர இயங்கவில்லை என்று இன்னும் பல, ஒரு கட்சியின் திசைவழி பிழையென்று இன்னும் பல கட்சிகள் என மாற்று வழிகளை உருவாக்குவதே விதியாகிப் போன சமூகத்தில் இஸ்லாத்துக்கெதிரான குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் சொல்வதில் மட்டும் ஏன் அவர்கள் செய்யட்டும் நிலைப்பாடு ? ஏன் உருவாக்க முடியாது மாற்றீடு ? தானாக முன்வராமல் இருப்பதற்கு என்ன கேடு ?

இங்கு தான் இலங்கையில் இஸ்லாம் யாருமற்ற அனாதையாகிப் போகிறது. சூபியாக இருந்தாலும் ஸலபியாக இருந்தாலும் இஸ்லாத்தைப் பாதுகாப்பது என்று வரும் போது தத்தமது ஓட்டுக்குள் தலையை நுழைத்துக் கொள்கிற நிலை தான் காணப்படுகிறது. இலங்கையில் இஸ்லாமிய அமைப்புக்கள் என்று எத்தனை இருக்கின்றன ? புற்றீசல்கள் என்பதா, மழைத்துளி பட்டதும் முளைக்கும் காளான்கள் என்பதா ? எத்தனை தரீக்காக்கள், எத்தனை ஜமாஅத்துக்கள், எத்தனை இயக்கங்கள், அமைப்புக்கள்…. இவை எல்லாம் சேர்ந்து… ஒன்று சேராமல் பிரிந்திருப்பது தான் சுன்னா என்றிருந்தால் பிரிந்து நின்றாவது  எதையாவது செய்ய மாட்டார்களா ?

உலகின் இரண்டாவது பெரிய மதம் சொந்த இடத்திலேயே இழிவுபடுத்தப்படுவது இவர்களுக்கு விளங்கவில்லையா ? ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான இரண்டாம் கட்ட விசாரணைகளில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக முன்வைக்கப்பட்டிருந்த 13 குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் அவர்கள் தொகுத்தருந்தார்கள். இதில் எந்தக் குற்றச்சாட்டையாவது எந்த இஸ்லாமிய அமைப்பாவது தெளிவுபடுத்தியதா ?

மருத்துவர் சங்கம் மருத்துவத்துறையின் சவால்களுக்கு தீர்வு சொல்கிறது. ஊடகவியலாளர் சங்கம் ஊடகத்துறையின் சவால்களுக்கு தீர்வுகளை முன்வைக்கிறது. இஸ்லாம் என்ற பெயரில் உள்ள அமைப்புக்கள் மட்டும் தமது பெயர்தாங்கிய விடயத்தில் ஏன் மௌனம் சாதிக்கிறது ?

அரச கட்டில் அரியாசனம் ஏறக் கிடைத்தவர்கள் இஸ்லாத்துக்கு எதிர்ப்பு வரும் போது அங்கிருந்து குரல் கொடுக்க வேண்டும். அரசிலிருந்து அப்புறப்படுத்திப் பார்க்கப்படுபவர்கள் தம்முடன் வாழும் பொதுமக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். யார் எங்கிருந்தாலும் இஸ்லாத்துக்கு ஓர் அவப் பெயர் என்று வரும் போது குரல் கொடுத்தால் மட்டும் தான் அவர்களை இஸ்லாமிய வரம்புக்குள் வைத்துக் கொண்டாட முடியும். இல்லாவிட்டால் முஸ்லிம் பெயர் தாங்கி வாழும் சிலரைப் போலத் தான் இஸ்லாம் என்ற பெயரைத் தாங்கிய அமைப்புக்களையும் கருத வேண்டியிருக்கும். முஸ்லிம் பெயர் தாங்கிய லேபல் முஸ்லிம்களால் இஸ்லாத்துக்கோ முஸ்லிம்களுக்கோ அவப் பெயரேயன்றி நன்மதிப்பேதும் விளையப் போவதில்லை.

அல்லாஹ் ஒருவன் தான். தனித்தவன் தான். அவனுக்கு யாருமில்லை. ஆனால் அவன் அநாதையல்ல. அதே போல அவனுடைய மார்க்கத்தையும் கருதி அம்போவென விட்டு விட நினைத்தால் நிச்சயமாக அந்த மார்க்கத்தின் நன்மைகளை நாட்டுக்குக் கொடுக்காத பாவிகளாக அனைத்து முஸ்லிம்களும் மாறிவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அதனால் யாருக்கு சக்தி இருக்கிறதோ அவர்கள் முன்வரட்டும். அதைவிட எல்லாரையும் இணைத்துக் கொண்டால் சக்தி பன்மடங்காகும். இதற்காவது யாராவது முயற்சிப்பார்களா ?