மாற்றத்துக்கான தருணம்

6

72 வருட கால இருகட்சி அரசியலின் அசிங்கங்கள் எல்லாம் தேர்தல் மேடைகளில் அம்மணமாகி வருகின்றன. நாட்டை விற்றுப் பிழைத்தவர்களும் நாட்டை விற்பதற்காக மக்களது உயிர்களைக் குடித்தவர்களுமாக இரு கட்சிகளதும் வண்டவாளங்கள் தண்டவாளமேறி வருகின்றன.

இம்முறைய தேர்தலில் 72 வருட கால பிரதான கட்சிகள் பிரதான பீடங்களில் இல்லை என்பது பிரதான கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்டுப் பிரிந்து போய் இப்போது நாதியற்றுச் சரணடைந்து கிடக்கிறது. பாரம்பரிய ஐக்கிய தேசியக் கட்சி பிளவுண்டு சுதந்திரக் கட்சியின் அனுபவத்தில் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறது. இவ்விரண்டு கட்சிகளில் இருந்தும் வேறுபட்டுச் சிந்திக்கும் கட்சிகள் முன்னணிக்கு வருவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

தாயைக் கொன்று ஜனித்த பிள்ளையாக வீறுகொண்டெழுந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நீண்ட காலம் செல்வதற்குள்ளேயே அரசியல் சாக்கடையில் விழுந்த கதையை நாளுக்கு நாள் வெளிவரும் செய்திகள் சொல்லுகின்றன. எல்ரிரிஈக்கு ஒருபுறத்திலும் இலங்கை இராணுவத்துக்கு மறுபுறத்திலும் ஏக காலத்தில் பயிற்சியளித்த இலாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட இஸ்ரேலிய அரசியல், இராணுவத்துக்கு முன்னுரிமையும் இராணுவத்தைக் கொன்றவருக்கு சிறப்புரிமையும் வழங்கிய மொட்டுவின் தலைமைகளிடமும் வெளிப்பட்டிருக்கிறது.

மறுபுறத்தில் உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டியை தாரை வார்த்தது தொடர்பிலான செய்திகள் தேர்தல் களத்தில் சூடு பிடித்துள்ளன. போட்டியை விற்றுப் பிழைத்தவர்கள் விளையாட்டு வீரர்கள் இல்லையென்றால் அது அதிகாரிகளாக இருக்க முடியும். அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒன்றில் அமைச்சருக்கு அதில் சம்பந்தம் இருக்க முடியும். அப்படியும் இல்லையென்றால் அமைச்சருக்கும் மேலே ஒருவராக இருக்க முடியும்.

இப்படி ஒரு கட்சியின் நாட்டுப்பற்று வெளிப்படுத்தப்பட்டு வரும் வேளையில் எதிர்த்தரப்பில் மத்திய வங்கிக் கொள்ளை மூலம் நாட்டைச் சூறையாடியதாகச் சொல்லப்படுபவர்கள் எதிரணியில் இருந்து போட்டியிடுகிறார்கள். நாட்டை விலைபேசும் எம்சிசி ஒப்பந்தம் தொடர்பில் இரண்டு கட்சிகளுமே சிக்கிப் போய் மக்கள் முன்னால் விழி பிதுங்கிப் போயிருக்கின்றன.

மொத்தத்தில் பிரதான கட்சிகள் எல்லாமே நாட்டையும் நாட்டின் வளங்களையும் சூறையாடியவர்கள் என்பது தேர்தல் நெருங்க நெருங்க மக்களுக்குப் புரிய வருகிறது. இதனால் பிரதான கட்சிகளில் இருந்து தூரமாகும் நிலைப்பாட்டில் மக்கள் சிந்தித்து வருகின்றனர்.

எது எப்படிப் போனாலும் பாரம்பரியக் கட்சிகள் அல்லது அதனுடன் இணைந்த கட்சிகள் தமது நாணயத்தை இழந்து நிற்பது கண்கூடு. ஒன்றில் இந்தக் கட்சிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் கண்ணுக்கெட்டும் தூரத்தில் இல்லை. இல்லையென்றால் மக்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.  

இலங்கையைப் பொறுத்தவரையில் மாற்றத்துக்கான தருணம் தேர்தல் தான். வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் மாறுகிறார்கள் என்பது தெரிந்த நிலையில் மாற்றத்தை வேண்டும் மக்கள் மாற்றுவழியைப் பற்றிச் சிந்திப்பது நாட்டை மாற்றுவதற்கான ஆரம்பமாக அமையும்.