புதிய பிரசவத்திற்காக தொப்புள்கொடியை அறுத்தல்

20
  • விக்டர் ஐவன்

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு மிகப்பெரிய தடைக்கல்லாக இலங்கையின் சமூக அரசியல் தொடர்பான பிற்போக்கான பார்வையே எனக் கருதலாம். இலங்கை தற்போது அடைந்துள்ள உச்சபட்ச நெருக்கடிகளுக்கு பழமையான தீர்வுகள் சரிவராது என்றாலும் அந்த யதார்த்தத்தை விளங்கிக்கொள்வதற்கு இந்த முறைமைக்கு பழக்கப்பட்டுள்ள அரசியல்வாதி களாலோ மக்களாலோ புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பறற்றினாலும் இலங்கை முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் இந்நெருக்கடிகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தருமா? அல்லது எதிர்பாராத அரசியல் திருப்பம் ஒன்று காரணமாக எதிர்க்கட்சி ஆட்சியைக் கைப்பற்றினால் இலங்கை தற்போது முகங்கொடுக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருமா? இந்த இரு கேள்விகளுக்குமான விடை இல்லை என்பதே ஆகும்.

இந்த இரு அரசியல் சக்திகளும் அவர்களது அளவுகளில் மாத்திரமே வித்தியாசப்படுகின்றனரே தவிர அவற்றின் கொள்கைகளில்ல. இரு கட்சிகளுமே உறுதியான மாற்றமொன்றை கொண்டுவர முடியாத பிற்போக்கான பார்வைகளைக் கொண்டவையே.

இலங்கை எதிர்கொண்டுள்ள இந் நெருக்கடிகள் கோவிட் பரவல் காரணமாக ஏற்பட்டவையல்ல. மாற்றமாக சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து வளர்ச்சியடைந்து வந்து இந்த கோவிட் காலத்தில் உச்சத்தை அடைந்த நெருக்கடிகளே ஆகும்.  ஏற்கனவே வளர்ந்து வந்து கொண்டிருந்த இந்நெருக்கடி கோவிட் பரவல் காரணமாக வெடித்துச் சிதறும் நிலையை அடைந்துள்ளது. இது ஒரு பொருளாதார நெருக்கடி மாத்திரமன்றி சமூக அரசியல் நெருக்கடியுமாகும்.

நெருக்கடியின் இயல்பு

இலங்கையின் இந்நெருக்கடியானது சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன, மத, குல  சிறுபான்மையினரை அடக்குமுறைக்கு உட்படுத்தியமை காரணமாக அவற்றிற்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் அவை கூர்மையடைந்து வன்முறையாக மாற்றம் பெற்றமை காரணமாக அவற்றினை வன்முறை மூலமே அடக்குவதற்கு முயற்சித்தமையால் சமூக முறைமையில் ஏற்பட்ட சமத்துவமின்மை காரணமாக ஏற்பட்ட நெருக்கடிகள் எனக் குறிப்பிடலாம்.

இந்த நிலைமை சட்டவாட்சியினை பல வீனப்படுத்தி சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்காத அரசு ஒன்று தோன்றுவதற்குக் காரணமாய் அமைந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வீழ்ச்சி செல்வத்தை சூறையாடுவது என்பது அரசாங்கத்தின் நிரந்தரப் பண்பாக மாற்றமடைந்து மொத்த அரச இயந்திரமும் ஊழலால் நாசமடையும் நிலையை அடைந்துள்ளது. அரசில் ஏற்பட்டுள்ள இந்த ஜனநாயக விரோதப் பண்பை நீக்குவதற்கான மாற்றங்களை முன்னெடுப்பதற்கு முயற்சி செய்யாமை காரணமாக இந்தப் பிழைகள் உறுதியாகி அரசாங்கத்தை மட்டுமன்றி சமூக அரசியல் பொருளாதார முறைமையையும் முழுமையாக நாசமடையச் செய்து  நாடு வீழ்ச்சிப் பாதைக்கு செல்வதற்குக் காரணமாய் அமைந்துள்ளது.

தற்போதுள்ள நெருக்கடிக்கு இலகுவான தீர்வுகள் இல்லை என்பதுடன் நெருக்கடி இலகுவாக தீர்க்கும்படியான நிலையிலும் இல்லை. நவீன இலங்கையை எனும் தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான கட்டமைப்பு மாற்றமொன்றை கண்டுபிடித்து அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலமே இந்நெருக்கடியிலிருந்து எம்மால் விடுபட முடியும். நாட்டின் சம்பிரதாயபூர்வ அரசியல்வாதிகளின் அறிவு திவால்நிலை மற்றும் ஜனநாயகவிரோதப் பண்பு காரணமாக இவ்வாறானதொரு சீர்திருத்தினை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை அவர்கள் இழந்துள்ளனர்.

இதன் காரணமாக இந்த சீர்திருத்தினை மக்களே அவர்களது இறைமையைப் பிரயோகிப்பதன் மூலம் வெற்றிகொள்ள முடியும் என்ற சவாலானதொரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது எனக்கூறலாம்.

சர்வதேச அனுபவம்

நாடு முழுமையான அராஜக நிலையை அடையாமலிருப்பதற்கு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் அரசாங்க சமூக அரசியலை சீர்திருத்துவதற்கான பெரும்பாலான பகுதிகளை பொறுப்பை மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து நீக்கி மக்களின் கைகளுக்கு எடுப்பதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டும்.

இம்முறைமையானது எமது நாட்டுக்கு புதியது என்றாலும் கூட ஒரு நாடு முழுமையான வீழ்ச்சிக்கு சென்றுகொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அந்நாட்டினை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சர்வதேச ரீதியாக இவ்வாறான முறைமை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன் உலகமே ஏற்றுக்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சிறந்த முறைமை ஒன்றாகும். 1986 இல் நிகரகுவா, 1988 இல் பிரேஸில் மற்றும் உகண்டா, 1994 இல் தென்னாபிரிக்கா, 1997 இல் எரித்ரியா, 2002 இல் ருவாண்டா போன்ற நாடுகளில் இம்முறைமை பயன்படுத்தப்பட்டு வெற்றிகரமாக அரசியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நாடுகளாகும். இந்த அனைத்து நாடுகளிலும் சீர்திருத்ததில் முக்கிய பங்குதார்களாகக் கடமையாற்றியது அரசியல்வாதிகளின்றி பொது மக்களே. இதற்காக பயன்படுத்தப்பட்டது பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமயன்று நேரடி ஜனநாயக முறைமையாகும்.

இந்த முறைமை ‘பங்குபற்றல் அரசியல் யாப்பு உருவாக்கம்’ அல்லது ‘மக்கள் அரசியல் யாப்பு உருவாக்கம்’ என அழைக்கப்படுகின்றது. இது அரசியல்யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கு மாத்திரம் சுருங்காமல் தேவையான அனைத்து மாற்றங்களையும் அடையாளப்படுத்தி அந்த மாற்றத்திற்காக மக்களால் மக்களே தமது அதிகாரத்தை பயன்படுத்திய முறைமையாகும். இது தொடர்பாக சசெக்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் விவியன் ஹார்ட் (Vivien Hart)   என்பவரால் எழுதப்பட்ட Democratic Constitution Making என்ற கட்டுரையில் சிறந்த முறையில் விவரிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையை இணையத்தில் வாசிக்க முடியும் என்பதுடன் இதன் சிங்கள மொழிமாற்றம் எனது ‘அந்துர துரலீம’ இருளை அகற்றல் என்ற புத்தகத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நேரடி ஜனநாயகம்

இந்த மாற்றத்திற்கான பொறிமுறை பற்றி அதைப் வெற்றிகரமாக பயன்படுத்திய நாடுகள் கூட ஆரம்பத்தில் உரியமுறையில் தெரிந்திருக்கவில்லை. மக்களுக்கு அவர்களுக்குத் தேவையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்குத் தேவையான  அதிகாரம் வழங்கப்பட்டு உரிய வழிகாட்டலும் வழங்கப்பட்டபோது அம்மக்கள் உரிய முறையில் இயங்கி வெற்றிகரமாக தமது நாட்டையும் சமூகத்தையும் சீர்திருத்திவதற்கான மாற்றத்தை கொண்டு வந்தனர். தர்க்கபூர்வமாக நியாயமான முறையில் விடயங்களை ஆராயும் அபிவிருத்தியடைந்த நவீன சமூகமொன்றினை கட்டியெழுப்பியமை அந்த சீர்திருத்தத்திற்கு உள்ளாகிய அனைத்து நாடுகளும் அடைந்து கொண்ட முக்கியமான வெற்றியாகும்.

முழுமையான வீழ்ச்சிக்கு முகம்கொடுத்துள்ள இலங்கைக்கும் அதிலிருந்து மீள்வதற்காக உள்ள நம்பிக்கையான நடைமுறைச் சாத்தியமான மாற்றீடாக இம்முறைமையைக் குறிப்பிட முடியும். இச்சீர்திருத்த முறைமையில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு சிறியதாகும். இலங்கை அடைந்துள்ள இந்த பாரிய வீழ்ச்சிக்கு அவர்களது பொறுப்பற்ற சட்டத்திற்கு முரணான மோசடியான செயற்பாடுகளும் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர்கள் இந்த அரசியல் முறைமையுடனும் அரசியல் யாப்புடனும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டனர். பொதுச் சொத்துக்களுக்கு தற்காலிக பொறுப்பாளர்களாக கடமையாற்ற வேண்டிய அவர்கள் அந்த சொத்துக்களை சூரையாடும் வகையில் செயற்பட்டனர். நாட்டின் அனைத்து பிரஜைகளையும் சமமாக நடாத்த வேண்டிய அவர்கள் இன, மத, குல பிரிவினைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அவர்களை வேற்றுமைப்படுத்தி நாட்டின் ஒற்றுமையைக் குழைத்தனர். எனவே மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் அரசியல்வாதிகளுக்கு நாட்டை சீர்திருத்தும் இந்த செயற்பாட்டிற்கு தலைமை வழங்குவதற்கு தார்மீக ரீதியான உரிமை இல்லை எனலாம்.

மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் இந்த சீர்திருத்த செயற்பாட்டிற்கு அவர்களும் பங்கு பற்றலாம் என்றாலும் இந்த மாற்றத்திற்காக செயற்பாட்டிற்கு தலைமை வழங்க வேண்டியது பொதுமக்களே. மாற்றத்திற்கான இந்த பொறிமுறையில் அரசியல்யாப்பு சபையே மத்திய நிலையமாக செயற்படும். இதில் அரசியல்வாதிகளும் உள்ளடங்குவர் என்றாலும் இதில் பெரும்பான்மையாக பொது மக்களே காணப்படுவர். இது மக்களின் இறைமையை உறுதிப்படுத்தும் ஜனநாயக அடிப்படைகளுக்கு அமைவாக செயற்படுத்தப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடொன்றாகும்.

மாற்றத்திற்கான ஆரம்பம்

இதில் அரசின் இறைமையைக் கொண்டுள்ள மக்கள் இந்த மாற்றத்திற்காக வேண்டி அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் உரிய தகவல்களை பெற்றுக்கொள்வர். அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான அனைத்து முக்கியமான விடயங்கள் தொடர்பாகவும் அறிந்து கொள்வர்.

மக்கள் இன, மத, குல வேறுபாட்டினால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டமையின் காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகள் போராட்டங்கள் வன்முறைகள் பற்றியும், ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியால்யாப்பு மீறல்கள் பற்றியும், சட்டவாக்கம், நிர்வாகம், நீதமன்றம் தொடர்பாகவும், ஊடகங்களின் பின்பற்றப்பட்ட பிழையான கொள்கைகள் பற்றியும், ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பாகவும் தேடிப் பார்க்கப்படும்.

கல்வி, சுகாதாரம், பொதுப் போக்குவரத்து, வணிகம், விவசாயம், வியாபாரம், தொழிற்சாலைகள், சக்திவளம், சுற்றாடல், இயற்கை வளங்கள், அபிவிருத்திச் செயற்பாடுகள் வெளிநாட்டுக் கொள்கை போன்ற முக்கியமான அனைத்துத் துறைகள் தொடர்பாகவும் தேடிப் பார்க்கப்படும். இங்கு மக்கள் காரணங்களை அறிந்துகொள்ளும் பரீட்சகர்களாகவும்  நீதியை வழங்கும் நீதிபதிகளாகவும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்பும் பொறியியலாளர்களாகவும் செயற்படுவர்.

இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு வேறு சிறந்த நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் இல்லாதது மாத்திரமன்றி பாராளுமன்றத் தேர்திலின் பின்னர் எந்தக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றினாலும் நாடு அதள பாதாளத்தை நோக்கிச் செல்வதனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

மங்கள சமரவீர வழங்கியுள்ள புதிய அரசியல் சமிக்ஞையின் இதன் காரணமாக இன்னொரு வகையில் முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. பழைய பாதையில் பயணித்த நல்லெண்ணம் கொண்ட மனிதர்கள் மாற்றத்திற்கான தேவைக்காக முன்னணிக்கு வருவது தவிர்க்க முடியாததாக மாறுவதோடு ஆட்சியிலிருக்கும் ஆளும் கட்சிக்கும் மாற்றத்திற்கான பாதையை திறப்பதிலிருந்து தப்பிப்பதற்கு முடியாமல் இருக்கும்.

தமிழில்: நூரா