Features சர்வதேசம்

லிபியாவின் இறைமையோடு விளையாடும் வெளிநாட்டுச் சக்திகள்

Written by Administrator

Dr. றவூப் ஸெய்ன் (Ph.D)

லிபியாவில் மத்திய அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர் ஹப்தரின் ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்து வரும் ரஷ்யா, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அறபு அமீரகம் என்பன லிபியாவின் இறைமையைப் பந்தாடத் தொடங்கியுள்ளதாக சர்வதேச அங்கீகாரம் பெற்ற தேசிய நல்லிணக்க அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. லிபியாவின் சராரா எண்ணெய் வயல்களை ரஷ்யாவும் பிற வெளிநாட்டுக் கம்பனிகளும் ஹப்தரின் உதவியோடு கைப்பற்றி வருவதாக லிபியாவின் தேசிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

லிபியாவின் எண்ணெய் உற்பத்தியே அதன் தேசிய வருமானத்தின் முக்கிய மூலாதாரமாகும். இந்நிலையில் தேசிய நல்லிணக்க அரசாங்கத்தை பொருளாதார ரீதியாக பலயீனப்படுத்துவதற்கு ரஷ்ய தலைமையிலான வெளிநாட்டுச் சக்திகள் முயல்வதாக திரிப்போலி அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

ஐ.நா. சபை வெளிநாட்டுச் சக்திகள் லிபியாவின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதை நிறுத்த முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த 26 ஆம் திகதி ரஷ்ய எண்ணெய்க் கம்பனி பிரதிநிதிகள் சராரா எண்ணெய் வயல் அமைந்துள்ள உற்பத்தி நிலையத்திற்கு வருகை தந்து, அங்குள்ள அதிகாரி களோடு பேச்சுவார்த்தை நடத்தியதாக திரிப்போலி அரசாங்கம் ரஷ்யாவை குற்றம் சுமத்தியுள்ளது.

லிபியா மத்திய கிழக்கு அறபு நாடுகளை விட எண்ணெய் வளம் மிகுந்த நாடாகும். 2015 இற்குப் பின்னர் அந்நாடு பிளவுபட்டது. ஒருபுறம் தேசிய நல்லிணக்க அரசு எனப்படும் திரிப்போலியைத் தளமாகக் கொண்ட அரசாங்கம். இது ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்றது. இதற்கு எதிராக பெங்காஷியைத் தளமாகக் கொண்ட ஹப்தரின் அரசாங்கம். இரு அரசாங்கங்களும் இராணுவத் தலைமையைக் கொண்டது என்பதும் கணிசமான நிலப் பிராந்தியங்களைக் கட்டுப்படுத்தி வருகின்றன என்பதும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

நாட்டின் முக்கிய வருமான மூலமாக உள்ள பெற்றோலிய வளத்தை கட்டுப்படுத்துவதில் இரு  அரசாங்கங்களும் கடுமையாக மோதிக் கொள்கின்றன. முன்னாள் ஆட்சியாளர் கேர்ணல் கடாபியின் மரணத்தின் பின்னர் வடஆபிரிக்க நாடான லிபியாவில் உள்ளூர் ஆயுத மோதல் தலைதூக்கியது. கடாபியின் ஆட்சிக் காலத்தில் இராணு வத்தில் பணியாற்றிய கொமான்டர் கலீபா ஹப்தர் ரஷ்ய ஆயுதங்களோடு லிபியாவின் தேசிய இராணுவம் என்ற பெயரில் ஆயுதப் படையொன்றை வழிநடத்த வருகின்றார்.

போர் மோகினி என்று அறியப்படும் ஹப்தர், ஐ.நா.வின் அங்கீகரிப்புக்கு உள்ளான தேசிய நல்லிணக்க அரசாங்கத்தை ஏற்க முடியாது எனக் கூறி ஆரம்பித்த ஆயுதத் தாக்குதல் ஐந்தாண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஹப்தர் மிகக் குரூரமான வழிகள் அனைத்தையும் கையாண்டு திரிப்போலி அரசுக்கு எதிரான மக்கள் வெறுப்பை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

லிபியாவின் எண்ணெயில் குறியாக இருக்கும் ரஷ்யாவும் எகிப்தும் ஹப்தரின் அடாவடித்தனங்களுக்கு முண்டுகொடுக்கின்றன. இதற்கு மேலதிகமாக ஐக்கிய அறபு அமீரகம் மற்றும் சவூதி அறேபியா என்பனவும் ஹப்தருக்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றன. கடந்த ரமழான் மாதத்தில் திரிப்போலி மீது ஹப்தர் நடத்திய குண்டுத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான லிபியர்கள் மரணமடைந்தனர். தற்போது மக்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளில் ஹப்தரின் படை நிலக் கன்னிகளைப் புதைத்து வருவதாக குற்றம்சாட்டப்படுகின்றது.

துருக்கி அரசாங்கம் தேசிய நல்லிணக்க அரசுக்கே தமது ஆதரவை வழங்கி வருவதனால் லிபியாவின் உள்நாட்டு விவகாரங்களில் இரண்டு வகை சர்வதேசத் தலையீடுகள் இடம்பெற்று வருவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

தற்போது திரிப்போலி அரசாங்கத்தைப் பலயீனப்படுத்தும் இறுதி மார்க்கமாக நாட்டின் பெற்றோலிய வளத்தை கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு ரஷ்யா களத்தில் குதித்துள்ளமை பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் கைச்சாத்திடப்பட்ட சர்வதேச ஒப்பந்தத்தின்படி திரிப்போலியைத் தளமாகக் கொண்ட தேசிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் மாத்திரமே பெற்றோலியத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். அதேவேளை, வெளிநாடுகளின் பணக்கொடுப்பனவுகள் அனைத்தும் லிபியாவின் மத்திய வங்கிக்கே செல்ல வேண்டும்.

ஆனால், எகிப்து, சவூதி ஆறேபியா, அமீரகம், ரஷ்யா என்பவற்றின் ஆதரவோடு செயல்படும் சட்டரீதியற்ற, ஹப்தர் தலைமையிலான லிபிய தேசிய இராணுவம் தனது கட்டுப்பாட்டில் இருந்த பல பிராந்தியங்களை கடந்த மாதம் இழந்ததோடு, எண்ணெய் வயல்களைக் கைப்பற்றும் முயற்சியில் கூடுதல் கவனம் குவித்துள்ளது.

பெங்காஷி படையினர் ஜனவரியில் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தினர். தொடர்ந்து எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பல மில்லியல் டொலர் நஷ்டம் ஏற்பட்டது. எண்ணெய் வயல்களை மீளக் கைப்பற்றிய திரிப்போலி அரசாங்கம் சராரா மற்றும் அல் பீல் கம்பனிகளின் எண்ணெய் உற்பத்தியை மீள ஆரம்பிக்கும் நிலையிலேயே ரஷ்ய அரசு லிபியாவின் இறைமையை மீறி பெற்றோலியத்தை சட்டவிரோதமாகப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

லிபியாவின் தேசிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் முஸ்தபா சன்அல்லா இது குறித்து வெளியிட்டுள்ள கருத்தோடு இந்தப் பத்தி நிறைவடைகின்றது.

“சில நாடுகள் அழிவுகரமான சூழ்ச்சியின் மூலம் எங்கள் நாட்டு எண்ணெய்யை கபளீகரம் செய்வதற்கு எத்தணிக்கின்றன. நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குக் கொண்டு செல்லும் சட்டவிரோத ஆயுதப் படைக்கு அவர்கள் ஆதரவளித்து வருவதன் மூலம் லிபியாவின் ஜனநாயகத்திற்கும் பாதுகாப்பிற்கும் பெரும் குந்தகம் விளைவிக் கின்றனர். தயவுகூர்ந்து எமது நாட்டின் இறைமையோடு யாரும் விளையாட வேண்டாம்.”

About the author

Administrator

Leave a Comment