உலக செய்திகள் சர்வதேசம்

காஷ்மீரில் முஸ்லிம் சனத்தொகைக் கட்டமைப்பை மாற்றுவதற்கு பிஜேபி முயற்சி

Written by Administrator

இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் கடந்த மே 18 ஆம் திகதியிலிருந்து இந்திய அரசு குடியிருப்பு சான்றிதழ்களை வழங்கி வருவது காஷ்மீர் முஸ்லிம்களுக்கு இடையில் அச்சத்தை உருவாக்கி வருகின்றது. இச்சான்றிதழ் பொதுவாக குடியுரிமைப் பத்திரமாகக் கருதப்படுகின்றது. இதை வைத்திருப்பவரே காஷ்மீரில் குடியிருக்கலாம் எனவும் அரசாங்கத் தொழிலைப் பெறலாம் எனவும் கூறப்படுகின்றது.

2019 ஓகஸ்ட் 05 இல் காஷ்மீரின் சுயாட்சி உரிமையை ரத்துச் செய்த இந்திய அரசு, குடியுரிமைச் சட்டத்தை திருத்தியதன் மூலம் காஷ்மீரியர்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்க முயற்சித்து வருகின்றது. இது மேற்குக்கரையில் பலஸ்தீனர்களை நெடன்யாஹு அரசாங்கம் நடத்துவதற்கு ஒப்பானது என்று குற்றம் சுமத்தப்படுகின்றது.

அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிடவுள்ள ஜோ பீடன் “அனைத்து காஷ்மீர் மக்களினதும் உரிமையைப் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

ஜனநாயக அடிப்படையிலான அமைதி வழி ஆர்ப்பாட்டங்களை முடுக்குவதற்கு இந்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிப்பது ஜனநாயக விரோத செயல் என்று ஜோ பீடன் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீநகரைச் சேர்ந்த 29 வயதான பத்ருல் இஸ்லாம் என்பவர் காஷ்மீர் பலஸ்தீனாக மாறி வருகின்றது எனவும் 1000 ஆண்டுகளுக்கு மேலாகவும் வாழ்ந்து வரும் முஸ்லிம்களை அந்நியராக்கும் பிஜேபியின் சூழ்ச்சித் திட்டம் ஆரம்பமாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் 12.5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் 70 வீதமானவர்கள் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About the author

Administrator

Leave a Comment