உலக செய்திகள் சர்வதேசம்

2.4 மில்லியன் யெமனிய சிறுவர்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர்

Written by Administrator

மெயனில் மில்லியன் கணக்கான குழந்தைகள் பட்டினி ஆபத்தை எதிர் கொண்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நோயின் தாக்கம் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என்று அந்நிறுவனம் கூறுகின்றது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள யெமனில் குழந்தைகளை பட்டினியிலிருந்து பாதுகாப்பதற்கு 500 மில்லியன் அமெரிக்கா டொலர் உடனடியாகத் தேவைப்படுகின்றது என்று யுனிசெப் வேண்டியுள்ளது.

கடந்த வெள்ளி யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள யெமனிய குழந்தைகளின் தொகை 2.4 மில்லியன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரை விட 20 வீதம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெப் கூறுகின்றது.

5 வயதுக்கு உட்பட 6500 குழந்தைகள் பிற நோய்களினால் மரணமடையக் கூடிய வாய்ப்புள்ளது என்று அது எச்சரித்துள்ளது. கடந்த ஐந்தாண்டு கால யுத்தத்தில் யெமன் சின்னாபின்னமாகியுள்ளது.

கொரோனா வைரசுக்குப் பின்னர் தொற்றுக்களைக் கட்டுப்படுத்தும் நிலையில் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு உறுதியானதாக இல்லை. இதனால் 9.58 மில்லியன் குழந்தைகள் சுத்தமான குடிநீர், சுகாதாரம், கல்வி போன்றவற்றை இழந்து தவிக்கின்றனர் என அந்த அறிக்கை கூறுகின்றது.

பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதனால் 7.8 மில்லியன் குழந்தைகள் கல்வி வாய்ப்பை முற்றாக இழந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. யெமனில் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவூதி ஆதரவு அரசாங்கப் படைகளுக்கும் இடையில் கடந்த ஐந்தாண்டுகளாக மோதல் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அமீரகத்தின் ஆதரவுடன் போராடி வந்த தெற்குப் பிரிவினை வாத இயக்கம் தனது கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியத்தில் சுயாட்சியைப் பிரகடனம் செய்துள்ளமை நாட்டை மேலும் ஸ்திரமற்ற நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

About the author

Administrator

Leave a Comment