எந்த முட்டையை எந்தக் கூடைக்கு யார் பிரிப்பது ?

12

பியாஸ் முஹம்மத்

முட்டையில் மயிர் பிடுங்குகின்ற விவகாரமாகத் தான் இது தெரிகின்றது. இலங்கையில் முஸ்லி்ம்கள் சிறுபான்மையினராக வாழ்கிறார்கள். பெரும்பான்மை மக்களுடன் இணக்கமாக வாழ்கின்றார்கள். தேர்தல் என்று வரும் போது பெரும்பான்மை பல பிரிவுகளாகப் பிரிந்து நிற்கும் சந்தர்ப்பங்களில் எந்தப் பெரும்பான்மையுடன் இணங்கி வாழ்வது என்பதில் சிக்கல் எழுகிறது.

முஸ்லிம்களின் அரசியலைப் பொறுத்தவரையில் அவர்கள் ஐக்கிய தேசிக்குச் சார்பானவர்கள் என்ற கருத்து ஒரு காலத்தில் பலமாக இருந்தது. அதற்குக் காரணம் கட்சியைத் தாண்டி தாய்நாடு என்ற நிலைப்பாட்டிலிருந்து வந்தது என்பது முஸ்லிம் அரசியல் தலைமைகளைப் பின்பற்றி வாழ்பவர்களுக்குத் தெரியும். இந்தியா சுதந்திரமடைவதற்கு இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கிச் செயற்பட்டது போலவே இலங்கையிலும் சிலோன் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. அப்போது சிறுபான்மை ஆங்கிலேயர்கள் தான் பெரும்பான்மை இலங்கையர்களை ஆட்சி செய்தார்கள். அந்த வேளை இலங்கை முஸ்லிம்கள் பெரும்பான்மைச் சமூகத்துடன் இணைந்து இந்த இலங்கை தேசிய காங்கிரஸினூடாக சுதந்திரத்துக்காகப் போராடினார்கள்.

சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை தேசிய காங்கிரஸில் இருந்தவர்கள் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை நிறுவினார்கள். சுதந்திரத்தைப் பெற்றெடுக்கும் போது இலங்கைத் தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்த தேசபிதா டீ.எஸ். சேனநாயக்கவே யூஎன்பியை உருவாக்கித் தலைமை தாங்கினார். இந்த வகையில் இலங்கைத் தேசியக் காங்கிரஸில் இணைந்து சுதந்திரத்துக்காகப் போராடிய முஸ்லிம் தலைவர்கள் எல்லோரும் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களானார்கள். வெட்டினாலும் பச்சை ரத்தம் என்று சொல்லுமளவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மீது அவர்கள் வைத்திருந்த ஆழமான பற்று அது கட்சி என்பதற்கப்பால் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியவர்களால் உருவாக்கப்பட்டது என்ற தேசிய உணர்வைத் தான் காட்டுகிறது.

இதனால் தான் இனரீதியாக தமிழர்கள் 1949 இல் பெடரல் கட்சி உருவாக்கிய போதும், சிங்களப் பெருந்தேசியவாதிகள் 1952 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிப் பிரிந்து சென்ற போதிலும் முஸ்லிம்கள் தொடர்ந்து எல்லா இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐக்கிய தேசியக் கட்சியில் நிலைத்து நின்றார்கள்.

இன்றிருக்கும் நிலைமை வேறு. தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியில் அமரும் விதமாக 1978 அரசியல் யாப்பை உருவாக்கிய 1977 இல் உருவான ஜேஆர் ஜயவர்தனவின் ஐதேக ஆட்சி 17 வருடங்கள் நீடித்தது. 1994 இல் அது சுதந்திரக் கட்சியால் பறித்தெடுக்கப்பட்ட பிறகு கால் நூற்றாண்டுகளாகியும் ஐதேகவுக்கு தேர்தலில் வெற்றி கொண்டு மீண்டு வர முடியாமல் இருக்கிறது.

2020 தேர்தலாகும் போது பழைய சுதந்திரக் கட்சியும் இல்லை. பழைய ஐக்கிய தேசியக் கட்சியும் இல்லை. சுதந்திரக் கட்சி கையாகி கதிரையாகி வெற்றிலையாகி தற்போது அதன் மேல் மொட்டு மலர்ந்திருக்கிறது. யானையின் கழுத்தில் தொலைபேசி மணி ஒலிக்கிறது.மொத்தத்தில் பிரதான கட்சிகள் நான்காகப் பிளந்திருக்கின்றன. இன்னும் பலதை தம்முடன் பிணைத்திருக்கின்றன. ஜேவிபி என்பிபியாகத் திசைகாட்டுகிறது. தமிழ்க்கட்சிகள் முன்னரைப் போல தனி வழி செல்கின்றன.

2020 தேர்தலாகும் போது முஸ்லிம் முட்டைகளை எந்தக் கூடையில் போடுவது என்பது முதன்மைப் பிரச்சினையாக முஸ்லிம் சமூகத்தின் முன் நிற்கிறது. இனரீதியான அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்காகப் பிரிந்து சென்ற எஸ்எல்எப்பி இப்போது எஸ்எல்பிபி யினால் விழுங்கப்பட்டு இனவாத நாக்குகளுக்கு வீரியத்தைச் சேர்த்திருக்கிறது. தாங்கள் ஒற்றை இனக்கட்சி தான் என்பதனை அவர்களில் பலர் பல இடங்களில் முழங்கியிருக்கிறார்கள். முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரித்து அனைத்து முஸ்லிம்களையும் பயங்கரவாதப் பேய்களாகக் காட்டிவருகிறார்கள். தீவிரவாதிகளைத் தம்முடன் இணைத்துக் கொள்ள மாட்டோம் என்று மார்தட்டி வருகிறார்கள். முஸ்லிம்கள் இல்லாத பாராளுமன்றத்தை அமைப்போம் என்று சூளுரைக்கிறார்கள். முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவையை உருவாக்கி அதனைச் செய்தும் காட்டியிருக்கிறார்கள். இதனை வைத்து இன மேலாதிக்க சிந்தனை உடையவர்களை தம் பக்கம் திரட்டி வருகிறார்கள்.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி எந்தக் கட்சியோ அந்தக் கட்சிதான் அரசாங்கத்தை அமைக்கின்றது. அந்த வகையில் மொட்டு ஆட்சிபீடம் ஏறுவது தான் விதி. ஆனால் இம்முறை மொட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடி வாக்குக் கேட்கிறது. இது நடக்க வேண்டுமென்றிருந்தால் முஸ்லிம்களின் ஆதரவும் இதற்குக் கட்டாயம் தேவைப்படுகிறது. சலுகைகளை எதிர்பார்த்து வாழும் ஒரு சமூகம் ஆளும் கட்சியைத் தான் எப்போதும் சார்ந்திருக்கும் வழமைக்கேற்ப முஸ்லிம்களில் சிலரும் ஆளும் கட்சியை ஆதரிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆளும் கட்சியில் இருந்தால் தான் சமூகத்துக்கு ஏதாவது செய்யலாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய முட்டையை மொட்டுக் கூடையில் போட்டுக் கொள்ளலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை அது இப்போது பழைய கட்சி அல்ல. ரணில் விக்கிரமசிங்க என்பவருக்குச் சொந்தமான யானைகளின் சரணாலயம். அந்தக் கட்சிக்குள்ளேயே ஜனநாயகத்தைத் தேடிக் களைத்துப் போய் வேறு புகலிடம் தேடும் யானைகளின் எண்ணிக்கை பெருத்து வருகிறது. மாறி மாறி வந்த அரசாங்கங்களின் அருவருப்புக்களையெல்லாம் வெளிக்காட்டாமல் இருக்க வேண்டிய பொறுப்பு மொட்டுக்கும் யானைக்கும் இருப்பதனால் இருவரும் நிச்சயமாக வேறு வேறு பாதைகளில் பயணிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது. அதனால் யானைக்கு எத்தனை முட்டை தேவை என்பதில் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் புதிதாக முடிவெடுப்பதற்கு ஒன்றும் இல்லை.

ஐக்கிய தேசியக் கட்சி என்பதில் ஐக்கியத்துக்கான அர்த்தத்தை ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துக் காட்டி வருகிறது. ஊதிப் பெருப்பிக்கப்படும் இனவாதச் சக்திகளுக்கு முன்னால் சளைக்காமல் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தைப் பேணும் வகையில் சிறுபான்மைச் சமூகங்களையெல்லாம் இணைத்துக் கொண்டு அது பயணிக்கிறது. இனவாதத்தை வெறுக்கின்ற பெரும்பான்மைச் சமூகத்தின் பலரும் இவர்களுடன் கைகோர்த்திருக்கிறார்கள். இனவாதமற்ற ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப இவர்களைப் பலப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. இனத்துவ அரசியலின் நிர்ப்பந்தத்தால் தோற்றுவிக்கப்பட்டு முஸ்லிம் சமூகத்தில் இடம் பிடித்திருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதிலிருந்து பிரிந்து உருவான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஆளும் கட்சியாவதற்காகப் போட்டியிடுகின்ற மொட்டுக் கட்சியினால் தீவிரவாதக் கட்சிகளாக ஓரங்கட்டுப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் சமூகத்துக்கு அந்தக் கட்சிகளைச் சார்ந்திருக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பொன்று உருவாகிறது. தீவிரவாதிகளான ஹக்கீம், ரிஷாதைச் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று கொக்கரிப்பது ஹக்கீமுக்கும் ரிஷாதுக்கும் எதிரான கோஷமல்ல. அவர்களை வைத்து முஸ்லிம் சமூகத்தையே இவ்வாறு குறிக்கிறார்கள் என்பது அலிஃப் பே தெரியாத முஸ்லிமுக்கும் தெரிந்த விடயம். இதனால் முஸ்லிம் அரசியலை அல்லது தனித்துவ அரசியலை, அந்த அரசியலைச் செய்பவர்கள் எப்படிப் போனாலும், காப்பாற்றுவதற்காக சில முட்டைகளைப் போட வேண்டியிருக்கிறது.

இரண்டு பிரதான கட்சிகளும் சோரம் போயிருக்கின்ற 2020 தேர்தல் சூழலில் நீண்ட கால மாற்றத்தை எதிர்பார்த்து வயிற்றுப் பிழைப்பு அரசியலுக்கு அப்பால் நாட்டையும் பண்பாட்டையும் மதித்து அரசியல் செய்யும் ஜேவிபி முன்னிலையிலான தேசிய மக்கள் கட்சியை விரும்புகின்றவர்களும் முஸ்லிம் சமூகத்தில் பலர் இருக்கின்றார்கள். கிழடு தட்டிய அரசியல் கழுதைகளை நம்பி ஏமாந்து போன இளைஞர்கள் ஏராளமானோர் நாட்டில் இருக்கிறார்கள். நாட்டை விற்றுப் பிழைப்பவர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றி சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு உண்மையாகவே ஆசைப்படுகின்ற, கட்சி அரசியலையும் தாண்டிச் சிந்திக்கின்ற கூட்டத்தினர் என்ற வகையில் இவர்களைப் பலப்படுத்துவதற்கும் சில முட்டைகள் தேவைப்படுகின்றன.

தற்கால நிலைமை போலன்றி முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாக வழிநடத்துவதற்கான அரசியல் தலைவர்கள் இருந்த காலத்தில், முட்டைகள் எல்லாவற்றையும் ஒரே கூடையில் போட வேண்டாம் என அவர்கள் சொல்லித் தந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பல தடவைகள் முஸ்லிம சமூகத்துக்கு ஞாபகப்படுத்தி இருக்கிறார். முஸ்லிம்களின் மூத்த தலைவர்கள் காட்டித் தந்த அரசியல் வழி பிழைத்தது அரிது என்ற வகையில் தற்காலச் சூழலில் இந்த அறிவுரை மிகவும் பொருத்தமானதாகவே படுகிறது. மேற்சொன்ன எல்லாக் கட்சிகளுக்கும் தேர்தலில் வாக்களி்ப்பதற்கு ஏதோ ஒரு நியாயம் இருக்கின்றது என்ற வகையில் முஸ்லிம் சமூகம் எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் கொட்டாமலிருப்பதற்கான தீர்மானமொன்றை எடுப்பது சிறந்ததாகப் படுகிறது.

ஆனால் அப்படித் தீர்மானம் எடுப்பது விடையாக இருந்தால் அதிலிருந்து பல கேள்விகள் எழும்பி நிற்கின்றன. எந்த முட்டையை எந்தக் கூடையில் யார் போடுவது ? முஸ்லிம் சமூகம் ஒட்டுமொத்தமாக ஒரு தரப்புக்கு வாக்களிப்பதற்கு தீர்மானம் எடுப்பது போலவே பிரிந்து நின்று வாக்களிப்பதிலும் ஒருமித்த தீர்மானம் எட்டப்பட வேண்டும். உங்களது முட்டை, நீங்கள் விரும்பிய கூடையில் போடுங்கள் என்று விட்டு விட்டால் அது தேர்தலில் வாக்களிப்பதற்காக சமூகத்தை வழிநடத்திய பணியைப் பூர்த்தி செய்ததாக அமையாது.

இந்த இடத்தில் முஸ்லிம் சமூகத்தின் சிவில் அமைப்புக்களுக்கு, அப்படி ஏதும் இல்லையென்றால் இனி உருவாக்கப்படும் அமைப்புக்களுக்கு இந்தத் தேர்தல் காலம் விடியாத இரவுகளுடன் கழிக்கும் காலமாக அமையப் போகிறது. ஒவ்வொரு மாவட்டத்தினதும் தரவுகளை எடுத்து மக்களை சரியான திசையில் வழிநடத்துவற்கு முஸ்லிம் சமூகத்தில் இருந்து சிவில் அமைப்புக்கள் முன்வர வேண்டும். மக்களினது கருத்துக்களைப் பெற்று அவர்களது ஒப்புதலோடு இந்தப் பணி நடைபெற வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சிதறி இருக்கின்ற முஸ்லிம் ஊர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் இதற்கான சிவில் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் அந்த மாவட்ட மக்களின் அரசியல் தேவைகளை நிவர்த்திப்பவர்களாக இருக்க வேண்டும். சில பிரதேசங்களைப் பொறுத்து அவர்கள் முஸ்லிம்களாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

அரசியல் என்பது ஆட்சிக் கதிரைக்குத் தாவுவதற்கான நெம்புகோல் அல்ல. அது மக்களுக்குச் சேவை செய்வதற்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பம். தான் மனிதனாகப் பிறவியெடுத்தமைக்குச் செய்யும் பிரதியுபகாரம். உலகத்தை நிர்வகிப்பதற்குக் கிடைக்கும் பொன்னான வாய்ப்பு. இதனை தனது இனத்துக்கு மட்டும் சுருக்காமல் தனது பிரதேசத்துக்கு மட்டும் சுருக்காமல் முழு நாட்டினதும் நாட்டு மக்களினதும் நன்மைக்காகப் பயன்படுத்தக் கூடிய அரசியல் கலாச்சாரமொன்றை முன்னெடுப்பதற்கான முன்னாயத்தமாக இதனை அமைத்துக் கொள்ள முடியும்.