தேர்தலுக்கு முன்னர் மக்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும்

12

வரலாற்றில் அதிகூடிய செலவிலான தேர்தல் இம்முறை நடக்கப் போகிறது. 100 கோடி ரூபா அளவில் தேர்தலுக்குச் செலவாகுமென தேர்தல்கள் ஆணைக்குழு மதிப்பிட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் புதிய இயல்புநிலையில் தேர்தலை நடத்த வேண்டி வருவதால் அதற்குரிய ஏற்பாடுகளுக்கு உண்டாகும் செலவுகள் அதிகமாக இருப்பதாகும்.

இதுவரை தேர்தல் நடத்துவது தொடர்பில் இரண்டு முன்னோடித் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதன் பின்னரான அவதானங்களையும் இணைத்து தேர்தலுக்கான சுகாதார விதிகள் வர்த்தமானி அறிவித்தலினூடாக வெளியிடப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்கெண்ணும் நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் வாக்காளர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களும் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நாட்டு மக்களை தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பெருமளவு செலவில் பெருஞ்செலவில் சுகாதார உபகரணங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.    

இத்தனை பாதுகாப்புகளுடனும் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் நடந்தாலும் தேர்தலுக்கு முன்னுள்ள பிரச்சார நடவடிக்கைகள் இந்தச் சுகாதார விதிகளின்படி நடத்தப்படுவதை உறுதி செய்து கொள்ளாவிட்டால் இத்தனை செலவழித்து இத்தனை ஏற்பாடுகள் செய்து இவ்வளவு காலம் தேர்தலை ஒத்திப் போட்டதெல்லாம் வீணாகி விடும்.

முன்னோடித் தேர்தல் நடத்திக் காட்டப்பட்டது போல முன்னோடித் தேர்தல் பிரச்சாரமும் நடத்திக் காட்டப்பட்டிருக்கலாமோ என்று சிந்திக்கும் அளவுக்கு தேர்தல் மேடைகளில் சுகாதார விதிகள் மீறப்படுவதை அவதானிக்க முடிகிறது. அரசியல்வாதி என்று வரும் போது ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரங்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை அநுராதபுர தேர்தல் பிரச்சாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

ஆகவே தேர்தல் சூடுபிடிக்கும் காலமாகும் போது மக்களின் கொரோனாவின் இரண்டாவது அலை பற்றிய அச்சம் காற்றில் பறந்து போகும். யார் இதனை முன்மாதிரியாக நடத்திக் காட்டுவது என்பதைச் சிந்திக்க முடியாத அளவுக்கு தலை முதல் கால் வரை சுகாதார விதிகள் அலட்சியம் செய்யப்பட்டு வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுப்பது அவசியம்.

மக்களுக்காகத் தான் தேர்தல் நடக்கிறதே ஒழிய மக்களைப் பலி கொடுத்து தேர்தல் நடத்த முடியாது என்ற கருத்தை தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் பல தடவைகளில் வலியுறுத்திக் கூறி இருந்தார். தேர்தல் என்பது வாக்களிப்பது மட்டுமன்றி அதனுடன் இணைந்த அனைத்துச் செயற்பாடுகளையும் இணைத்ததாகும். ஆகவே தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பிலும் ஆணைக்குழு கவனம் செலுத்துவது அவசியமாகும்.

தனிமைப்படுத்தல் முடிந்து சமூகத்துக்கு வந்த பின்னரும் கொரோனா தொற்றலாம் என்பதை ஜிந்துப்பிட்டி விவகாரம் உணர்த்தியுள்ள நிலையில் அரசியல்வாதிகளும் வேட்பாளர்களும் தமது வாக்கு வேட்டையைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் மக்களைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் சிந்திப்பதே சிற்நத அரசியல் பண்பாடாக அமையும்.