2020 பொதுத் தேர்தலும் முஸ்லிம்களும்

16

வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதவாறான ஒரு பொதுத் தேர்தலை நாம் எதிர்நோக்கியுள்ளோம். தொற்று நோய் நாட்டைப் பற்றியுள்ள நிலையில் தேர்தல் ஒன்று நடைபெறுவது இதுவே முதன் முறை. ஒரு நிழல் இராணுவ அரசு தொடர்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் நடைபெறப் போகும் தேர்தலும் இதுவே. வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் இல்லாமல் மூன்றில் இரண்டைப் பெறுவோம்; ஆதலால் இனி பேரம் பேசும் அரசியல் இல்லை என்று ஆளும் கட்சியினர் கூறிக் கொண்டிருக்கும் தேர்தலும் இதுவே.

இதில் தடியை நாம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அடி விழுவது நிச்சயம் என்று பொது மக்கள் பேசிக் கொண்டிருக்க, சில சில்லறை அரசியல்வாதிகள் அடிக்கத் தயாராகும் சக்திகளை ஆதரிப்பதே உசிதம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இது சமயோசிதமான முடிவோ முஸ்லிம் சமூகத்திற்குச் சாதகமான முடிவோ அல்ல என்று வாதிப்பவர்களும் உள்ளனர்.

ஒரு முஸ்லிம் பேராசிரியரும் இந்நிலைமையை ‘எட்டி உதைப்பவனின் காலை தொட்டு நக்கும் அரசியல்’ என்று வர்ணித்துள்ளார்.

அரசியல் எதிர்காலம் இருள் சூழ்ந்துள்ளது. மங்கலான பாதையை எவ்வாறேனும் கடக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு சமூகம் ஆளாகியுள்ளது. முஸ்லிம் தனிக்கட்சிகள் அனைத்தும் போல தோற்றுப் போய் விட்டன. தாம் முண்டுகொடுத்த பேரினவாத கட்சி அரசாங்கங்கள் இந்த கட்சித் தலைவர்களை இறுதியில் ஏமாற்றி விட்டன. காலத்தை இழுத்தடிப்பதே அவ்வரசாங்கங்களின் ஒரே மூலோபாயமாக இருந்தது. இதற்கு சமீபத்திய உதாரணம் ரணில்-மைத்திரியின் நல்லாட்சி.

அந்த ஆட்சியின் நடுநாயகங்களாக இருந்த ரணிலும் மைத்திரியும் நரித் தந்திரிகள். ராஜபக்ஷர்களின் அணியில் இருந்து ரணில் முகாம் தாவிய மைத்திரி, ஊரைக் கெடுத்த ஊமை. தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளே மைத்திரியை வெல்ல வைத்தன. சிறுபான்மை வாக்குகளால் ஜனாதிபதியான மைத்திரி, தம்மை அதிகாரக் கட்டிலில் அமர்த்தியவர்களை எட்டி உதைத்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடக்கவிட்டு ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக் காரணமானார்.

அணியின் அடுத்த தலைவர் ரணில். தனது பசப்பு வார்த்தைகளால் அனைத்தையும் பாதியில் நிறுத்தி வைத்து, காலத்தை இழுத்தடித்து, ஐந்தாண்டுகளைக் கடத்தினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோரிய சமஷ்டி ஒருபுறம் இருக்க, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தைக் கூட ரணில் நேர்மையாகக் கையாளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கு பல முறை யாழ்ப்பாணம் சென்று வந்த ரணில், இறுதியில் அம்மக்களின் நல்லெண்ணத்தையும் உடைத்து நொறுக்கி விட்டார்.

ஓரளவு ஜனநாயகத் தன்மை கொண்ட, சிறுபான்மை மக்களை சிங்கள மக்களின் எதிரிகளாக முன்னிறுத்தாத ரணில், என்ன வகை அரசியலைச் செய்து வருகிறார் என்பது பாகிஸ்தானின் அரசியலைப் போன்று புரிய முடியாத புதிராகவே உள்ளது. சிலர் அதனை மேட்டுக்குடி அரசியல் என்றும் வேறு சிலர் மேலை ஆதரவு முகவர் அரசியல் என்றும் வர்ணிக்கின்றனர். ரணில் தலைமையை நம்பி முஸ்லிம்கள் அரசியலில் இறங்குவது தற்கொலை முயற்சி என்பது நல்லாட்சியில் நிரூபணமாகி விட்டது.

நாட்டின் வரலாற்றில் தோன்றிய முதல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை இன்று இரண்டாக பிளவுபடுத்திய பெருமையும் ரணிலைச் சாரும். இதன் மூலம் ரணிலின் முகவர் அரசியல் எனும் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது. கட்சியிலிருந்து வெளியேறி சிறுபான்மைக் கட்சிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு சஜித் பிரேமதாஸ உருவாக்கியுள்ள கூட்டணியும் பெருந் தேசியவாதிகளின் பிரச்சாரத்திற்கு வசதியாகியுள்ளது. இனத் தேசியவாதத்தை ஊதி ஊதி பற்றவைப்பதற்கு மீண்டும் இந்த அணி பயன்படுகின்றது. சஜித் ஒப்பீட்டு ரீதியில் இனவாதம் குறைந்த சிங்களத் தலைவராகத் தோன்றினாலும் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகள் குறித்து இதயபூர்வமான அக்கறை அவருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஈஸ்டர் தாக்குதலை அடுத்து அப்பாவி முஸ்லிம்களின் வீடுகளைச் சோதனை யிடப்பட்டபோது அவர் அமைதியாக இருந்தார். இனவாதக் குண்டர்கள் திகனயிலும் மினுவான் கொடையிலும் வன்முறைகளைக் கட்டவிழ்த்தபோது மௌனம் காத்தார். இன்று பொத்துவிலில் முஹுது விகாரை காணி விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சஜித் கண்டும் காணாதது போல் இருக்கின்றார். சிறுபான்மை மக்கள் சார்பாகப் பேசி பெரும்பான்மையினரின் வாக்குகளை இழந்து விடுவேனோ என்ற பயம் அவரை நிழல் போல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆக, சிறுபான்மைக் கட்சிகளின் வாக்குகள் கறிவேப்பிலை போன்று கொஞ்சம் தேவைப்படுகின்றது. மாற்றமாக, அம்மக்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்த எந்த நேர்மையான அணுகுமுறையும் சஜித்திடம் இல்லை என்பது அப்பழுக்கற்ற உண்மை. இந்நிலையில், ஹக்கீமும் ரிஷாதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சஜித்துடன் கூட்டுச் சேர்வதால் நேரப் போவது என்ன என்ற ஒரு பெரிய கேள்வி இங்கு எழுகின்றது.

தமது சமூகங்கள் சார்ந்த உருப்படியான எந்த கோரிக்கைகளையும் கலந்துரையாடாமல் சந்தர்ப்பவாத கூட்டுக்களையும் கட்சி நலன்        சார்ந்து அமைப்பது முஸ்லிம் தமிழ்க் கட்சிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி என்பது போல, ஆசனத்தைக் கைப்பற்றும் வரை உரிமைப் போராளிகளாக வாய் வீரம் பேசும் இந்த சில்லறைத் தலைவர்களை சிவில் சமூகம் சரியாக மதிப்பீடு செய்ய வேண்டிய தேவையை தேர்தல் உணர்த்தியுள்ளது.

ஆக, தனிக் கட்சிகள் தோல்வியுற்று இனவாத சிங்கள கட்சிகளுடனான கூட்டணியில் எதிர்பார்த்த விளைவினைப் பெறாத நிலையில், முஸ்லிம்களுக்கு முன்னால் உள்ள அரசியல் பாதை எது? அந்தப் பாதை மங்கலாகவே இருக்கின்றது. இருள் சூழ்ந்துள்ள அந்தப் பாதையைப் பார்க்கும்போது பயம் எங்கும் விரவுகின்றது.

இந்தத் தருணத்தில் சிலர் சண்டைக்கு வருபவரோடு சமரசம் செய்து கொண்டால் என்ன என்ற வாய்ப்பாட்டைத் தூக்கிப் போடுகின்றனர். ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்தச் சமரச வாய்ப்பாடும் பேரம் பேசும் மூலோபாயமும் பொய்த்துப் போய்விட்டன.

ஜூலை 02 இல் பிரதமர் தமிழ்ப் பத்திரிகை யாளர்களைச் சந்தித்தபோது என்ன சொன்னார். வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவு இல்லாமலேயே மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வெல்வோம். ஆதலால் இனி பேரம் பேசும் அரசியல் இல்லை என்கிறார் மஹிந்த. இதையே இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டேன்.

தடியைக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அடி நிச்சயம் என்று கூறுவதற்குக் காரணம் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் அடியே பெரும்பான்மையினரின் வாக்கைப் பெறுவதற்கான ஒரே வழி என்ற அரசியல் சமன்பாடு இன்று உலகில் பொதுப் போக்காக மாறிவிட்டது. ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை, மியன்மார் போன்ற நாடுகளில் அதிகாரத்தைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் சக்திகள் இதே மூலோபாயத்தைக் கையாண்டு வருகின்றனர்.

தீவிர வலதுசாரி முதலாளிய பூர்ஷ்வா கட்சிகள் அதிகப்படியான வாக்குகளைப் பெற அந்தந்த நாடுகளில் வாழும் சிறுபான்மை மக்களை பெரும்பான்மை மக்களின் பரம எதிரிகளாகக் கட்டமைக்கின்றனர். மெக்சிகோ எல்லைப் புறமாக அமெரிக்காவில் குடியேறி வந்த மெக்சிகோ நாட்டவர்களை ட்ரம்ப் தடுத்து நிறுத்த வேண்டும். அவர்கள் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர்கள் என்று கூறியே தேர்தலில் வெற்றி பெற்றார். எல்லைச் சுவரைக் கட்டுவதிலும் கவனம் குவித்தார். அவர் உருவாக்கிய ‘அந்நியர்கள் பற்றிய பயம்’ (Xnephobia) அவரது வாக்கு வங்கிகளை நிறைத்தது.

பொரிஸ் ஜோன்ஸன் பிரிட்டனில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பெருந் தேசிய வாதத்தைப் பேசியே அதிகாரத்தைக் கைப்பற்றினார். பாரத தேசத்தின் நரேந்திர மோடி காஷ்மீர் மாநிலம் தொடர்பான சட்டத் திருத்தத்தையும் குடியுரிமைச் சட்ட திருத்தத்தையும் கொண்டு வந்து அடுத்த தேர்தலில் அமோக வெற்றி பெறுவதற்கான பாதையை தயாரித்துள்ளார். ஆக, சிறுபான்மை பற்றிய ஒரு பயத்தை உருவாக்கி விட்டால் நாட்டில் எண்ணிக்கையில் அதிகமாகவுள்ள பெரும்பான்மை மக்களின் பெருவாரியான வாக்குகள் இயல்பாகக் கிடைத்து விடும். இந்த வியூகம் நீடிக்கும்வரை சிறுபான்மை மக்கள் நிம்மதியோடு அமைதியாக வாழ்வது சாத்தியமில்லை. சிறுபான்மைக்கெதிரான பயங்கரவாத, தீவிரவாத குற்றச்சாட்டுக்களை அவ்வப்போது ஊடகங்கள் வெளிப்படுத்துவதன் மூலம் பெரும்பான்மை மக்களின் நாடித் துடிப்பை தாம் விரும்புவது போல வைத்திருப்பதற்கு அரசியல் சக்திகள் விரும்புகின்றன.

ஆக, முஸ்லிம் சிறுபான்மை என்பது இனி அரசுக்கு வேண்டாத பெண்டாட்டி போன்று. கை பட்டாலும் குற்றமாகலாம், கால் பட்டாலும் குற்றமாகலாம். எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டில் குறியாக இருக்கும் அரசு அதனைக் கைப்பற்றினால் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கும் பேராபத்தாக முடியும். முஸ்லிம் பாடசாலைகள், அறபு மத்ரஸாக்கள், முஸ்லிம் தனியார் சட்டம் இவற்றுக்கெல்லாம் என்ன நடக்கும் என்று தெரியாது.

எம்சிசி ஒப்பந்தத்தில் அரசு கைச்சாத்திட்டால் இயல்பாகவே முஸ்லிம் தனியார் சட்டம் நாட்டிலிருந்து மக்களுக்குத் தெரியாமலேயே மறைந்து போய்விடும். தேச வழமைச் சட்டத்திற்கும் ஏன் கண்டிய சட்டத்திற்கும் இந்நிலைமை ஏற்படலாம் என்று சிங்கள அரசியல் ஆய்வாளர்களே எச்சரிக்கின்றனர். ‘பிம்சவிய’ எனப்படும் புதிய நிலப் பதிவுச் சட்டம் எதனை இலக்கு வைக்கப் போகின்றது என்பது இப்போது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

ஆக, பொதுத் தேர்தலை நாம் எந்த வியூகங்களோடும் மூலோபாயங்களோடும் எதிர்கொள்ளப் போகின்றோம். முஸ்லிம்களின் சமூக நலனைக் குறித்த கவனம் அதற்குள் இருக்கிறதா? இந்தக் கேள்விகள் மங்கலாகவே உள்ளன. மங்கலான ஒரு பாதையை விவேகத்தோடு கடக்க வேண்டிய எமது அரசியல் தலைவர்கள் தேர்தல் கால தெருச் சண்டைகளில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது சமூகத்தின் அரசியல் எதிர்காலம் பற்றிய ஓர் அச்சம் நமக்குள் எழுவது நியாயமானதே.

தலைவர்கள் இந்தத் தருணத்திலேனும் நிதானமாக செயல்படுவார்களா என்பதே எங்கள் ஆதங்கம்.