உலக செய்திகள் சர்வதேசம்

தென் – வட கொரியாவுக்கு இடையில் போர் பதட்டம்

Written by Administrator

அமெரிக்க போர் விமானங்களை சுமந்த கப்பல்கள் தென் கொரிய கடற் பிராந்தியத்திற்கு விரைவு.

வடகொரிய ஜனாதிபதி தென் கொரியா மீதான இராணுவ நடவடிக்கையை பிற்போடுவதாக அறிவித்துள்ளபோதும் தென் கொரிய அரசின் வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்கப் போர் விமானங்களைத் தாங்கி நிற்கும் பிரமாண்டமான மிதக்கும் கப்பல்கள் தென் கொரிய கடல் பிராந்தியத்திற்கு விரைவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வட-தென் கொரிய நாடுகளுக்கிடையில் பிளவும் போரும் இடம்பெற்று 70 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவை சீனாவும் ரஷ்யாவும் ஆதரிக்கும் நிலையில், தென் கொரியாவை அமெரிக்காவும் ஜப்பானும் ஆதரித்து வருகின்றன.

அதிகாரபூர்வமாக அணுகுண்டுகளை வைத்திருக்கும் 7 நாடுகளுக்கு அப்பால் வடகொரியாவிடம் அணுவாயுதங்கள் இருப்பதாக வொஷிங்டன் சந்தேகிக்கின்றது. இதனால், தனது நேச நாடான தென் கொரியா மீது வட கொரியா எந்த வேளையிலும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்ற காரணத்தினால் கொரிய வளைகுடாவிற்கு தனது இராணுவம் அனுப்பப்படுவதாக ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டன் தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொன் உன், அமெரிக்காவின் ஒக்டோபரில் நடைபெறவுள்ள தேர்தலை கருத்திற் கொண்டே ட்ரம்ப் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என வொஷிங்டனைக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே, வடகொரிய ஜனாதிபதிக்கும் ட்ரம்பிற்கும் இடையில் இடம்பெற்ற மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகள் அணுவாயுதத் தடை ஒப்பந்தம் குறித்து கவனம் குவித்தன. எவ்வாறாயினும், வியட்நாமில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இரண்டாவது உச்சி மாநாடு தோல்வியடைந்தது. 2020 இல் வட கொரியா மீண்டும் அணுவாயுதப் பரிசோதனைகளை நடத்த ஆரம்பித்தது. இந்த ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதட்டம் இடம்பெறுவதற்கு வடகொரியாவின் புதிய அணு வாயுதப் பரிசோதனையே காரணம் என வொஷிங்டன் கூறும் கருத்தை வடகொரியா மறுக்கின்றது. இந்தியா-பாகிஸ்தான் பதட்டம் போன்றதே வடகொரிய-தென்கொரிய பதட்டம். அது ஒரு போதும் போராக வெடிக்காது என்பதே பிராந்திய அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

About the author

Administrator

Leave a Comment