Features சர்வதேசம்

டொனால்ட் ட்ரம்பைக் கைதுசெய்வதற்கான பிடியாணை

Written by Administrator

ஈரானின் தந்திரோபாயம் என்ன?

Dr. றவூப் ஸெய்ன் (Ph.D)

அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் மைக்கல் பொம்பியோ ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய போது, ஈரான் மீதான ஆயுதத் தடை   நீடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தமை சர்வதேச அமெரிக்க யூத ஊடகங்களில் பரபரப்பாக உலா வந்துகொண்டிருந்தபோது, ஈரானின்  நீதித் துறை படாரென சர்வதேச செய்திகளின் உள்ளடக்கத்தை தலைகீழாகப் புரட்டிப் போடும் வகையில் தீர்ப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கைதுசெய்வதற்கான பிடியாணை ஒன்றை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக பிற நாட்டின் உச்ச நீதிமன்றம் ஒன்று பிடியாணைத் தீர்ப்பளித்திருப்பது இதுவே முதற் தடவையாகும்.

ஈரானின் சிரேஷ்ட சட்டத்தரணி அலி அல் காஸிம் தீர்ப்புக் குறித்து விவரிக்கையில், இவ் வருடம் ஜனவரி 03 இல் ஈரானின் முக்கிய இராணுவத் தளபதி காஸிம் சுலைமானியின் படுகொலையோடு ட்ரம்பும் இன்னும் 30 பேரும் தொடர்புபட்டுள்ளனர். இதனால் அவர்கள் படுகொலை மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதோடு, அமெரிக்க ஜனாதிபதியைக் கைதுசெய்வதற்கு இன்டர்போலின் உதவியை நாடியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஈரான் பிடியாணை பிறப்பித்ததன் மூலம் அமெரிக்க ஜனநாயகத்தின் முகத்தில் ஓங்கி அறைந்துள்ளது. சர்வதேச சமூகத்திற்கு முன்னாள் ட்ரம்பின் நேர்மையற்ற கபடத்தனமான அரசியலை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. வல்லரசின் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது முழு அமெரிக்காவுக்குமே அவமானமாகும்.

தீர்ப்பு வழங்கப்பட்ட அதேநாளில் ஈரானுக்கான அமெரிக்காவின் விசேட தூதுவர் ப்ரையன் ஹூக், “ஈரான் பிடி யாணை பிறப்பித்திருப்பது ஒரு பிரச்சார ஆயுதம்” என்று சவூதி தலைநகர் ரியாதில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். எங்கள் கருத்தில் அரசியல் நோக்கம் கொண்ட இந்தப் பிடியாணை குறித்து சிவப்பு அறிவித்தலை வெளியிடுவதற்கு இன்டர்போல் தலையிடாது என எண்ணுகின்றோம் எனக் கூறினார். அவ்வேளை அங்கு சவூதியின் வெளிவிவகார அமைச்சரும் உடனிருந்தார்.

அமெரிக்கச் சார்பான இன்டர்போல் இவ்விடயத்தில் ஈரானுக்கு உதவப் போவதில்லை என்று உடனே அறிவித்து விட்டது. இந்தத் தருணத்தில், ஈரான் நீதிமன்றம் பிடியாணைப் பிறப்பித்தமைக்கு சில காரணங்கள் உள்ளன. ஈரான் மீதான ஆயுதத் தடை நீடிப்பிலிருந்து அமெரிக்காவின் கவனத்தைத் திருப்புவது முதல் நோக்கமாகும். ஈரான் மீதான ஆயுதத் தடையை நீக்கிக் கொண்டால் தெஹ்ரான் பயங்கரவாத இயக்கங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் ஆயுதம் விநியோகம் செய்வதில் தொடர்ச்சியாக ஈடுபடும் என ஹூக் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், சர்வதேச ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான சுவீடன் சமாதான நிறுவனத்தின் அறிக்கையின் படி 120 நாடுகளில் போராடி வரும்      சட்டவிரோத பயங்கரவாத இயக்கங்களுக்கு அமெரிக்காவே ஆயுதம் வழங்கி வருகின்றது. கடந்த இரண்டு தசாப்தங்களாக பேரழிவு தரும் ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள், அணுகுண்டுகளை இஸ்ரேலுக்கும் மியன்மாருக்கும் இந்தியாவுக்கும் பெருமளவு விற்பனை செய்யும் நாடுகளில் அமெரிக்காவே முன்னிலை வகிக்கின்றது.

இந்நிலையில் ஹுக், ஈரான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதம் விற்பதாகக் கூறுவது வேடிக்கையானது என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஷரீப் ப்ரைன் ஹுக்கை கண்டனம் செய்துள்ளார். 2015 இல் இடம்பெற்ற இணைக் கூட்டுச் செயற்பாட்டுத் திட்டத்தின்படி ஈரான் குடியரசின் முக்கிய உறுப்பினர்கள் மீது பயணத் தடையும் அரசின் மீது ஆயுதத் தடையும் விதிக்கப்பட்டது. இது கடந்த 2017 ஒக்டோபரில் கலாவதி யானது. 2018 மேயில் இந்த ஒப்பந்தத்திலிருந்து வொஷிங்டன் தன்னிச்சையாக வெளியேறியது. எனவே, இதன் ஷரத்துகளுக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் ஈரான் அரசுக்கு இல்லை என்பதே தெஹ்ரானின் நிலைப்பாடாகும். ஆனால், சர்வதேச பொலிஸ்காரனைப் போல ஈரானின் இறைமையைக் கவனத்திற் கொள்ளாது ட்ரம்ப் நிருவாகம் முடிவுகளை அறிவித்துக் கொண்டிருக்கிறது. இது டெல்அவிவ்வையும் ரியாதையும் திருப்திப்படுத்தும் நோக்கிலானது என்று ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.

ட்ரம்ப் கைதுசெய்யப்படுவாரா இல்லையா என்ற வாத விவாதங்களுக்கு அப்பால், அவர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டிய ஒரு குற்றவாளி எனும் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு வழங்குவதே ஈரானின் நீதித் துறையின் நோக்கம் என அவதானிகள் நம்புகின்றனர்.

மிகச் சரியான நேரத்தில் மிகத் துணிகரமான தீர்ப்பை தெஹ்ரான் வெளியிட்டுள்ளது என்று ஈரான் ஆதரவு சக்திகள் கருதுகின்றன. ஜனாதிபதி ஹஸன் ரூஹானியின் மிதவாதக் கட்சியினர் இப்பிடியாணை குறித்து முழுமையாகத் திருப்தியடையவில்லை என்றும் ஆனால், பழைமைவாத கடும்போக்குவாதிகளை இத்தீர்மானம் குதூகலிக்க வைத்துள்ளது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான சொற்போர் கடந்த காலங்களிலும் உக்கிரமடைந்துள்ளது சுலைமானி கொல்லப்பட்டபோது அமெரிக்கப் படையினரைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது. அதற்கப்பால் ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கும் எந்த செயற்பாட்டிலும் ஈரான் இறங்கவில்லை. எனவே, வொஷிங்டனை இராணுவ ரீதியில் எதிர்கொள்ளும் எந்தத் துணிவும் வலிமையும் தெஹ்ரானுக்கு இல்லை. ஆக, ஈரான் நீதிமன்றத் தீர்ப்பு அரசியல் தன்மை வாய்ந்ததே ஒழிய இராணுவத் தன்மை வாய்ந்ததல்ல என்று கூறப்படுகின்றது.

எது எப்படிப் போயினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேர்மையற்ற ஒரு கிரிமினல் என்பதும் விசாரித்துத் தண்டிக்கப்படக் கூடிய குற்றவாளி என்பதும் பிடியாணையின் மூலம் உறுதியாகியுள்ளது.

About the author

Administrator

Leave a Comment