இஸ்ரேலின் ஒருதலைப்பட்சமான இணைப்பைக் கண்டிக்கிறோம்

19

பலஸ்தீனில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் சட்டவிரோத இணைப்பைக் கண்டித்து இலங்கையிலுள்ள பலஸ்தீன் நட்புறவுக் குழுவினர் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். பலஸ்தீன் நட்புறவுக் குழுவினரின் சார்பாக ஜேவிபி, தேசிய மீனவர் நட்புறவு இயக்கம், வைஎம்சீஏ பமுனுகம, ஜனஅவபோதய கேந்திரய, கிதுஸர குழு, ஜீஸஸ் டுடே குழு, போர்ன் டு வின் ரிலேஷன்ஷிப், லெப்ட் வொய்ஸ், ஐக்கிய தொழிலாளர் சங்கம், நாட்டின் விடுதலைக்கான மக்கள் கட்சி, தேசிய ஒற்றுமைக்கான மதங்களுக்கிடையிலான கூட்டணி, சுதந்திர ஊடக இயக்கம், பால்ட்ரா, உலக நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் சங்கம், ஸ்ரமாபிமானி நிலையம், சமாதானத்துக்கும் நட்புறவுக்குமான இலங்கை அமைப்பு ஆகியன இதில் கைச்சாத்திட்டுள்ளன.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,  

இறையாண்மை தொடர்பான இஸ்ரேலின் பொய்யான உரிமை கோரலை நடைமுறைப்படுத்துவது இணைப்பதற்கானதொரு சூழ்ச்சியேயன்றி வேறில்லை. ஆக்கிரமிப்புச் சக்தியான இஸ்ரேல் சர்வதேச சட்டங்களைக் கடுமையாக மீறுவதை மறைப்பதற்கும், சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்துவதற்கும் பயன்படுத்தும் சொல்லே இதுவாகும்.

சியோனிச அரசு பலஸ்தீன மண்ணின் சட்டபூர்வத் தன்மையைப் புறக்கணிக்கிறது. ஐநா பாதுகாப்புக் கவுன்ஸில், சர்வதேச நீதிமன்றம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச மைய அமைப்புக்களின் கண்டனத்தையும் பொருட்படுத்தாமல் அது பலஸ்தீன் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து வருகிறது. “இணைத்தல் சர்வதேச சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல, பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்கான முக்கிய காரணியுமாகும்“ என ஐநா தொடர்ந்தும் கூறி வருகிறது.

1967 இல் ஒருதலைப்பட்சமாக இணைக்கும் செயல்முறையைத் தொடங்கிய சியோனிச அரசு, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் அதன் காலனித்துவத் திட்டங்களை விரிவுபடுத்துவதையும் ஒருங்கிணைப்பதையும் தொடர்வதோடல்லாமல் அமெரிக்க நிர்வாகத்தின் ஆதரவுடன் அதன் மோசமான நகர்வுகளை நியாயப்படுத்த முயற்சிக்கிறது. உண்மைக்குப் புறம்பானவற்றைத் தொடர்ந்து திணிப்பதற்காக இஸ்ரேல் முன்னெடுக்கும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் பலஸ்தீனின் இருப்பையும் சுய நிர்ணய உரிமையையும் தடுக்கின்றன.இஸ்ரேலிய இணைப்புச் சுவர் மற்றும் “குடியேற்ற முகாம்கள்“ என்பது காலனித்துவமயமாக்கலின் திட்டமிட்ட கொள்கையின் ஒரு பகுதியாகும். இது சுயாதீனமான பலஸ்தீனுக்கான வாய்ப்புக்களை அழிப்பதை நோக்காகக் கொண்டுள்ளது. 

“இணைப்பதை நிறுத்துவதற்காக அமெரிக்க திட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பலஸ்தீனர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்“ என்ற சியோனிஸ்டுகளின் கூற்று, ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் பிரதேசத்தை இணைப்பதை நியாயப்படுத்தவும் சுதந்திரம், நீதி, சமத்துவத்தின் அடிப்படையிலான பலஸ்தீன மக்களின் நியாயமானதும் நீடித்த அமைதியை உருவாக்குவதற்குமான தயார் நிலையைத் தூக்கி எறிவதற்குமான தந்திரமாகும். ஜோர்தானின் எல்லையிலுள்ள பிராந்தியத்தின் உணவுக்களஞ்சியமான மூலோபாய ரீதியானதும் வளமானதுமான ஜோர்தான் பள்ளத்தாக்கினையும், பிரதான குடியிருப்புக்களையும் உள்ளடக்கிய மேற்குக் கரையின் மூன்றில் ஒரு பகுதியை இஸ்ரேலுடன் இணைப்பதற்கு அனுமதிப்பதே அமெரிக்காவின் திட்டமாகும்.

எவ்வாறாயினும் 1967 அரபு-இஸ்ரேலிய யுத்தத்தில் ஜோர்தானிடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றிய பிரதேசங்களும் கிழக்கு ஜெரூஸலமைத் தலைநகராகக் கொண்ட எதிர்காலப் பலஸ்தீனின் முக்கிய பிரதேசமாகும் என பலஸ்தீனர்கள் கருதுகின்றனர். சியோனிஸ துருப்புக்கள் தங்கள் எஜமானரின் முதலில் சுடு, பின்னர் கேள் கொள்கையையே முழுவதுமான விதிவிலக்குடன் தொடர்ந்தும் பின்பற்றுகின்றன. பலஸ்தீன உயிர்களையும் உரிமைகளையும் இழிவாகவும் வெறுப்புடனும் நடத்துகின்ற கட்டமைக்கப்பட்ட வன்முறையின் மிருகத்தனமானதும் இனவெறி பிடித்ததுமான அமைப்பே இது.

சியோனிச அரசின் இந்த நோக்கம் இன அழிப்புக்கான ஒரு செயல்முறையேயன்றி வேறில்லை. இந்தப் பிரதேசங்களில் உள்ள பலஸ்தீனர்களை மெல்ல இனச்சுத்திகரிப்புச் செய்வதன் மூலமும் இணைப்பதன் மூலமும் பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய இனவெறி தேசத்தில் நாடற்றவர்களாக மாற்றப்படுவார்கள். மேலும் இந்தப் பிரதேசங்களில் வாழும் பலஸ்தீனர்கள் எந்த எல்லைகளையும் அணுக முடியாமல் நிலத்தால் சூழப்படுவார்கள்.

அனைத்துக்கும் மேலாக இந்த நடவடிக்கை மனித வாழ்க்கை, மனித உரிமை, சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் புறக்கணிக்கிறது. மேலும் இது பேச்சுவார்த்தைகளைப் புதுப்பிப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் இல்லாமல் செய்து பிராந்தியத்தில் கடுமையான பதற்றத்தையும் தோற்றுவிக்கப் போகிறது.

அமெரிக்க நிர்வாகத்தால் ஆதரவளிக்கப்படும் சியோனிஸ்டுகளின் நெருடும் திட்டத்தைக் கண்டிப்பதற்கும், பலஸ்தீனை அதன் மக்களுக்காக விடுவிப்பதற்கான போராட்டத்தில் பலஸ்தீன் மக்களுடன் எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து ஜனநாயகவாதிகளுக்கும் முற்போக்குவாதிகளுக்கும் சமவுடமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

கீழே ஒப்பமிட்டுள்ள இலங்கை அமைப்புக்களான நாங்கள், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கும் அதன் மோசமான நிகழ்ச்சி நிரலுக்கும் எதிராகப் போராட தங்களது சக்திகளை பலப்படுத்தவும் இந்த உலகத்தை அனைவரும் வாழக் கூடிய இடமாக மாற்றுவதற்காக அதனைத் தோல்வியடையச் செய்யவும் நாம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

பலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளுக்கு வெற்றி கிட்டுவதாக !

சுதந்திரமான இறையாண்மையுள்ள பலஸ்தீனின் விடுதலை வெற்றி பெறுவதாக !