Features அரசியல் பலஸ்தீன

நடுநிலைமை என்பது மௌனமாயிருப்பதல்ல. பலஸ்தீனுக்காக இலங்கை குரலெழுப்ப வேண்டும்

Written by Administrator
  • அமீன் இஸ்ஸதீன்

பலஸ்தீனியர்கள் அவசர செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பின்னரான மிகப் பெரும் நிலக் கொள்ளை என இதனைக் கண்டித்து சர்வதேசம் இதில் தலையிட வேண்டுமெனக் கோரி உலகின் சமாதானத்தை விரும்பும் மக்களை அவர்கள் அழைக்கிறார்கள். ஆனால் சர்வதேசத் தலையீடுகள் வெறும் அறிக்கைகளுடன் மட்டுமே சுருங்கியிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையால் பிரிக்கப்பட்ட பலஸ்தீனின் மேற்குக் கரையில் எஞ்சியிருக்கும் மூன்றில் ஒன்றுக்கும் அதிகமான பங்கை 1948 முதல் பலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுடன் இணைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த புதன்கிழமை செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் இஸ்ரேலின் கடும்போக்குவாத பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு சொன்ன “சியோனிச வரலாற்றில் மற்றொரு புகழ்பெற்ற அத்தியாயம்“ என்பது புதனன்று நடக்கவில்லை. மூன்றாவது தடவையாக மற்றுமொரு பலஸ்தீனிய இன்திபாதா எழுச்சியடையும் என்ற பயமாக இருக்கலாம் அல்லது உலகளாவிய எதிர்ப்பு அதிகரிக்கும் என்ற அச்சமாக இருக்கலாம்.

நெதன்யாகு தனது கூட்டணிப் பங்காளியும் அடுத்த பிரதமருமான பென்னி கிரான்ட்ஸுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உலக அளவில் எதிர்க்கப்பட்ட மத்திய கிழக்குக்கான “அமைதித்“ திட்டத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் இஸ்ரேல் தனது இறையாண்மையை பலஸ்தீன் நிலத்தில் அதிகரிக்கும் நாள் ஜூலை 01 ஆகும். ஜனவரியில் வெளியிடப்பட்ட டிரம்பின் திட்டம், பலஸ்தீன் பிரதேசங்களை சட்டவிரோதமாக இணைப்பதை சட்டபூர்வமாக்குவதற்கானதொரு சூத்திரத்தை இஸ்ரேலுக்கு வழங்கியது. ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமொன்றை இணைப்பது ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் ஜெனீவா உடன்படிக்கைகள் மீதான கடுமையான மீறலாகும். அதற்கும் மேலால், இன்னொருவருக்குச் சொந்தமான சொத்தை நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ பறிக்கும் நோக்கத்துடன் நேர்மையற்ற விதத்தில் ஒருவர் கையகப்படுத்தினால் எந்தவொரு நாகரிக தேசமும் அதனை திருட்டு என்கிறது. டிரம்பின் திட்டத்தின்படி பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட யூதக் குடியேற்றங்கள் உள்ள அனைத்து பலஸ்தீன் பிரதேசங்களையும் இஸ்ரேல் தன்னுடன் இணைக்கும். எஞ்சியுள்ள பிரதேசமே பலஸ்தீனாகப் பிரகடனப்படுத்தப்படும்.

இந்த நிலத் திருட்டின் சகபாடியான டிரம்ப் நிர்வாகம், 1967 போரில் இழந்த கிழக்கு ஜெரூஸலமை மீண்டும் பெறுவதற்கான பலஸ்தீனர்களின் வாழ்நாள் அபிலாஷையை நிராகரித்து ஜெருஸலம் முழுவதையும் இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, அதை அவர்களின் எதிர்காலத் தலைநகராகவும் அறிவித்தது. டிரம்ப் நெதன்யாகுவினால் கைவிட முடியாத ஒரு சியோனிச சொத்து. இதனால் நெதன்யாகு அவசரத்தில் உள்ளார். விரைவில் இந்த இணைப்பு நடைபெற வேண்டும் என அவர் விரும்புகிறார். ஏனெனில் நவம்பர் தேர்தலில் டிரம்ப் வெல்வாரா என்பது அவருக்கு நிச்சயமில்லை. டிரம்பின் ஜனாதிபதித் தேர்தல் போட்டியாளரான ஜோ பிடன் இணைப்பது தொடர்பிலான எந்தவொரு ஒருதலைப்பட்சமான முடிவையும் எதிர்ப்பவராக உள்ளார்.

ஐரோப்பா, ஜெர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் இந்த இணைப்புத் திட்டத்தை நிராகரித்துள்ள அதேவேளை, ஒருதலைப்பட்சமான எந்தவொரு முடிவும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமையும் என இஸ்ரேலுக்கு நினைவூட்டியுள்ளன. இருந்தபோதிலும் இந்த இணைப்புத் திட்டத்தை இஸ்ரேல் நடைமுறைப்படுத்தினால் அவர்கள் என்ன கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்பதனை எதிர்பார்த்தபடியே அவர்கள் சொல்லாமல் விட்டு விட்டார்கள். இஸ்ரேல் தொடர்பிலான மேற்கத்திய நாடுகளின் மெத்தனமான போக்கு, சட்டத்தை மீறுவதற்கும் பலஸ்தீன மக்களையும் அவர்களது சுதந்திரப்  போராட்டத்தையும் ஒடுக்குவதற்கும் இஸ்ரேலை விதிவிலக்காக்கியது.

அரபு நாடுகள் இணைப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளன. ஜோர்தான் ஒரு பாரிய மோதலையிட்டு எச்சரித்துள்ளது. பெரும்பாலும் அது 1994 இல் இஸ்ரேலுடன் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ளக் கூடும். பெருகிவரும் சர்வதேச அழுத்தத்தையும் அதன் இணைத்தல் திட்டத்துக்கான பலஸ்தீன தலைமையின் எதிர்வினையையும் வழிநடத்த அவகாசம் தேவை என இஸ்ரேல் இப்போது உணர்கிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நவம்பரில் இஸ்ரேலின் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நெதன்யாகுவின் போட்டியாளரான கிரான்ட்ஸ், கொரோனா வைரஸ் தொற்று முடியும் வரை இணைப்புக்கு காத்திருக்க நேரிடும் எனத் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் இது புதன்கிழமை நடக்க வேண்டும் என அவர் முன்னர் ஏற்றுக் கொண்டிருந்தார்.

இணைக்கும் திட்டத்தை எதிர்த்து புதன்கிழமை வீதிக்கு இறங்கிய பலஸ்தீன மக்கள், 750,000 க்கும் மேற்பட்ட பலஸ்தீன மக்களை தங்கள் வீடுகளில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் பலவந்தமாக வெளியேற வழிவகுத்த 1948 இன் பேரழிவு அல்லது இன்னொரு நக்பா என இதனை அழைத்தனர். இஸ்ரேலை மூலையில் தள்ளிவிடும் சில கடுமையான நடவடிக்கைகளை பலஸ்தீன் தலைமையும் எடுத்துள்ளது.

இணைப்புத் திட்டத்துக்கு முன்னதாக பலஸ்தீன் அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் பலஸ்தீன அதிகார சபை நிறுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் மக்களுக்கான உணவளிக்கும் பொறுப்பை இஸ்ரேலின் மீதே சுமத்துவதாகவும் தெரிவித்தார். இந்த முடிவை நடைமுறைப்படுத்தும் விதமாக பலஸ்தீன் அதிகார சபை சார்பாக இஸ்ரேல் வசூலிக்கும் வரி மற்றும் வர்த்தக வருமானத்தை 3 வீத கமிஷனில் பெற்றுக் கொள்ள பலஸ்தீன் அதிகார சபை மறுத்துள்ளது. இந்த வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு – மாதத்துக்கு 200 மில்லியன் டொலர் – மொத்த ஊழியர் படையில் 50 வீதமாக இருக்கின்ற பலஸ்தீனின் அரசதுறை ஊழியர்களின் சம்பளத்துக்காகச் செலவிடப்படுகிறது. பலஸ்தீனின் அரச ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் பெறாமல் பட்டினி கிடக்கிறார்கள். இல்லை, அவர்கள் கூட்டாக உண்ணா விரதமிருந்து இஸ்ரேலுக்கு ஒரு பலமான செய்தியைச் சொல்கிறார்கள்.

இலங்கையின் நிலை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பலஸ்தீன் விவகாரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த போதிலும், பலஸ்தீன் பிரச்சினையின் போது இலங்கை எதுவுமே கேளாதது போல மௌனமாக இருக்கிறது. உலகளாவிய மோதல்கள் தொடர்பில் மௌனம் சாதிக்கும் வகையில் நம்மைத் தவறாக வழிநடத்தக் கூடிய அரசியல் யதார்த்தத்தின் பெயரால் எமது கொள்கை சார்பான வெளியுறவுக் கொள்கைகளை நாம் கைவிட வேண்டியதில்லை. கோதபாய ராஜபக்ஷ நிர்வாகமும் தாம் ஒரு “நடுநிலைக்“ கொள்கைக்காக அர்ப்பணித்துள்ளதாகவே கூறுகிறது.

நடுநிலைமையான அல்லது அணிசேராத வெளிநாட்டுக் கொள்கையொன்றைப் பேணுவது உலகளாவிய வல்லரசுகளும் பிராந்திய சக்திகளும் ஆடும் அதிகார விளையாட்டிலிருந்து விலகி இருக்க முயற்சிக்கும் ஒரு வளர்ந்து வரும் தேசத்துக்கு மூலோபாய ரீதியாக பாதுகாப்பானதாகத் தோன்றலாம். ஆனால் இலங்கையின் கடந்தகாலத் தலைவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் உலக நாடுகளின் தலையீடுகளை வேண்டிக் கதறும் போதெல்லாம் நடுநிலைமை என்பது மௌனம் சாதிப்பது அல்ல என்பதை எடுத்துக் காட்டினார்கள். குறிப்பாக எஸ்டப்ஆர்டி பண்டாரநாயக்க, இலங்கையின் நடுநிலைமை சுவிட்சர்லாந்தைப் போல இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நாட்டுக்கான தீவிர வெளியுறவுக் கொள்கைப் பாதையை வரைந்தார். அமைதி மற்றும் நீதியின் அடிப்படையிலான உலகளாவிய ஒழுங்கொன்றை நிறுவுவதற்கான செயற்பாட்டை ஈடுபடுத்தும் வகையிலான கொள்கையாக இது அமைந்தது.

அப்படியானால் அன்று ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்த செயற்திறன் மிக்கதொரு அணிசேராக் கொள்கை தற்பொழுது பின்பற்றப்படுவதற்கான சரியான கொள்கையாக அமையாது எனச் சிலர் வாதிடலாம். இது அபத்தமானது. நாஸி ஜேர்மனியைப் போன்றதொரு நாடு உலகில் அழிவை ஏற்படுத்த நாடினால் நாம் நடுநிலையாக இருப்பதா ? நமது நடுநிலைமை மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு உடந்தையாக அமையுமல்லவா ?

எனவே இஸ்ரேலின் இணைப்புத் திட்டத்தையும் அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தையும் கண்டித்து அரசாங்கம் ஓர் அறிக்கையை வெளியிட வேண்டும். இது தான் பின்பற்றுவதற்கான சரியான கொள்கை மட்டுமல்ல, மனித உரிமை மீறல்களுக்கான குற்றச்சாட்டுக்களால் கறைபடிந்துள்ள நாட்டின் உலகளாவிய பிம்பத்தை மேம்படுத்துவதற்கான ராஜதந்திர ரீதியான தேவையுமாகும். 

About the author

Administrator

Leave a Comment