70 நாட்களின் பின் மீண்டும் கொரோனோ

12

நாத்தாண்டிய கொட்டராமுல்ல பிரதேசத்தில் இனம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரைத் தொடர்ந்து ஏப்ரல் 30 ஆம் திகதிக்குப் பின்னரான முதல் கொரோனா நோயாளி சமூகத்திலிருந்து இனம் காணப்பட்டுள்ளார்.

கந்தகாடு போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் போதனையாளராக கடமையாற்றிய இவர், அங்கிருந்து வெலிக்கடைக்கு மாற்றப்பட்டு பின்னர் கொரோனா தொற்றாளராகக் கண்டு பிடிக்கப்பட்டவருக்கும் போதனை நடத்தியுள்ளார்.

25 வயதான இந்தப் பெண் கந்தகாடுவிலிருந்து வீடு வரும் பொழுதே அவருக்கு காய்ச்சல், இருமல் போன்ற நோய் அறிகுறிகள் இருந்திருப்பதாக புத்தளம் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் தினூஷி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பின்னர் அவர் தனியார் வைத்திய நிலையமொன்றில் மருந்து எடுத்துள்ளார். இது தொடர்பில் அறிந்து கொண்ட பொதுச் சுகாதார அதிகாரி இவரை மாரவில வைத்தியசாலையில் அனுமதித்து பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட போதே இவருக்கு கொரோனா தொற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

கந்தகாடு முகாமிலிருந்து பொலன்னறுவைக்கு முகாமின் வாகனமொன்றில் இவர் கொண்டு வந்து விடப்பட்டுள்ளார். பொலன்னறுவையிலிருந்து குருநாகல், குருநாகலில் இருந்து நீர்கொழும்பு பஸ்ஸில் தங்கொட்டுவ, அங்கிருந்து நாத்தாண்டிய பிரதேசங்களுக்கு இவர் பஸ்ஸிலேயே பயணித்துள்ளார்.

இவரது உடனடித் தொடர்பாளர்களான தாய் தந்தையர் இருப்பதோடு இவர் பக்கத்து வீட்டுக்கும் தையற்காரர் ஒருவரிடமும் சென்றுள்ளார். இவர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 07 குடும்பங்களில் இருந்து 42 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இவர் பயணித்த பஸ்களில் வந்தவர்களை எம்மால் பின் தொடர முடியாது. இவர் பஸ்ஸில் பயணித்த நேரங்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம். இவர் மாஸ்க் அணிந்திருந்ததனால் பாதிப்பு குறைவாக இருக்கும் என நம்புகிறோம் எனவும் புத்தளம் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் தினூஷி பெர்ணான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க, இது சமூகப் பரவலா இல்லையா என்று சொல்ல முடியாது எனத் தெரிவித்தார். இதற்கு முன்னர் ஜிந்துப்பிட்டியில் கொரோனா தொற்றாளர் இனம் காணப்பட்ட போது இது சமூகப் பரவலல்ல என அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.