இங்கிலாந்து விளம்பரப் பலகையில் பர்ஸானா ஹுஸைன்

24

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகள் (NHS) உறுப்பினர் டொக்டர் பர்ஸானா ஹுஸைன் லண்டனின் மாபெரும் விளம்பரப்பலகையில் காட்சிப்படுத்தப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளார். பிரிட்டிஷ்-பங்களாதேஷ் பிரஜையான இவர் தேசிய சுகாதார சேவைகளின் 72 ஆவது பிறந்த தினத்தையொட்டிய விளம்பரப் பலகையில் கொவிட் 19 இன் போதான அவரது சேவைகளுக்காக பிரபல்யப்படுத்தப்பட்டுள்ளார்.

லண்டன் நியுஹமில் த ப்ரொஜக்ட் சர்ஜரியில் கடமையாற்றும் இவர், 2019 ஆம் ஆண்டுக்கான பொது மருத்துவர் விருதை வென்றிருந்தார். தர மேம்பாடு, மருந்தகப் பிரதிநிதிகளுடனான உறவு மற்றும் மருத்துவர்களைச் சந்திப்பதற்கான நியமனங்களை ஒழுங்குபடுத்தல் ஆகியவற்றுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

கொவிட் 19 சூழலில் சிறப்பாகச் செயல்பட்ட 12 பேரை லண்டனின் பிரபல புகைப்படக் கலைஞர் நிலையமொன்று படம் பிடித்திருந்தது. இந்தப் போட்டோக்கள் லண்டனின் பஸ் தரிப்பு நிலையங்களிலும் பாதையோர விளம்பரப் பலகைகளிலும் பாதசாரிகள் நடமாடும் முக்கிய இடங்களிலும், முக்கியமாக உலகப் புகழ் பெற்ற மத்திய லண்டனின் பிகாடெல்லி லைட்ஸிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் டொக்டர் பர்ஸானா ஹுஸைன் கூறும் போது, எனது 19 ஆவது வயதில் நான் மருத்துவக் கல்லூரியின் முதலாம் தவணையில் இருந்த போது எனது தாய் கடுமையாகச் சுகவீனமுற்றிருந்தார். இருதய நோயின் கடைசித் தருவாயில் அவர் இருந்தார். வீட்டிலிருந்து 250 மைல்களைத் தாண்டி நான் அவரைப் பார்ப்பதற்கு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அவர் கடுமையான வருத்தத்தில் இருந்தார். திரும்பவும் மருத்துவக் கல்லூரிக்குப் போவதா தாயுடன் அருகில் இருப்பதா என்று நான் திண்டாடினேன். நான் நலமாகிவிடுவேன், நீ கட்டாயம் போக வேண்டும், நீ ஒரு வைத்தியராகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என என் தாய் என்னிடம் கூறினார். ஐந்து நாட்களில் அவர் மரணித்து விட்டார்.

இரண்டு தசாப்தங்கள் ஓடிவிட்டன. எனது தாயின் இறுதி ஆசையை நிறைவேற்றிய பெருமையை ஒவ்வொரு நாளும் கடமைக்குச் சென்று மக்களுக்கு உதவி செய்யும் போது நினைத்துக் கொள்வேன். ஒவ்வொரு நோயாளியைக் கவனிக்கும் போதும் அவர்கள் என்னுடைய குடும்பத்தார் என்ற நினைவே வரும்.

லண்டனின் மூலையொன்றில் நான் மருத்துவ நிலையமொன்று நடத்துகிறேன். பன்டமிக்கும் நாங்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களும் மருத்துவம் தொடர்பான எமது நம்பிக்கைகளில் எப்படித் தாக்கம் செலுத்தும் என எங்களிடம் வருபவர்கள் கேட்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில் என்னிடம் சிகிச்சைக்காக வருபவர்கள் அனைவருமே எனக்கு முக்கியமானவர்கள். அவர்களால் நான் உந்தப்படுகிறேன். அணமையில் நாங்கள் வாகனத்திலிருந்தே செய்து கொள்ளக் கூடிய சிறுவர்களுக்கான தடுப்பூசி முறையொன்றை எமது மருத்துவ நிலையத்தில் அறிமுகப்படுத்தினோம். சிறுவர்கள் யாரும் அப்பாய்ன்மென்ட் இல்லாமல் திரும்பிச் செல்லக் கூடாது என்பதற்காக. தொழிந்லுட்பத்தைப் பாவித்து ஒன்லைன் சிகிச்சையையும் ஆரம்பித்திருக்கிறோம். கொரோனாவின் அழுத்தத்தினால் உருவாகிய தேவைகள் நாங்கள் நீண்டகாலமாக சிந்தித்து வந்த பல அபிலாஷைகளையும் திட்டங்களையும் நடைமுறைச்சாத்தியமாக்கியது. டிரைவ் துரூவில் ஒரு குழந்தைக்கு நான் சிகிச்சையளித்த வேளை வெளிச்சூழலில் காற்று அதிகமாக வீசியதால் நான் அந்தக் குழந்தையின் தந்தையிடம் எனது வருத்தத்தைத் தெரிவித்தேன். அப்போது அவர் வருந்த வேண்டாம், இந்தச் சூழலை நாங்கள் ஒன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறோம், எங்களால் முடிந்ததில் உச்சத்தைச் செய்கிறோம் என்றார். அவர் சொன்னது சரி. எல்லாவற்றுக்குமே எங்களிடம் பதில் இல்லைதான். நாங்கள் துண்டுகளை இணைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான்.

ஒவ்வொரு நாளும் கடமைக்குச் சென்று மக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி இந்தப் பன்டமிக்குக்கு எதிராகப் போராடுவதில் நானடையும் ஆனந்தத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது.

எங்களது வைத்தியசாலைகளும் சமூகப் பணிகளும் பொது மருத்துவ சேவைகளும் மனிதாபிமானத்தினால் தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லுவதன் முக்கியத்துவத்தை நான் முன்னரை விட அதிகமாக உணர்கிறேன். ரான்கின்ஸின் புகைப்படம் (விளம்பரப் பலகையில் உள்ள புகைப்படத்தை எடுத்து புகைப்படக் கலை நிறுவனம்) இதனைச் சிறப்பான முறையில் வெளிக் கொணர்ந்திருக்கிறது என்று நான் கருதுகிறேன்.பொது மருத்துவரான டொக்டர் பர்ஸானா ஹுஸைனுடன் ஐசீயு மருத்துவ ஆலோசகர், கொவிட் 19 தீவிர சிகிச்சைப் பிரிவு தாதி, குடும்ப நல உத்தியோகத்தர், மனநல மருத்துவர், கொவிட் 19 வாட் துப்புரவாக்குபவர், துணை மருத்துவர், மருந்து விநியோகிப்பவர், மாவட்ட தாதி, 111 கோல் சென்டர் உத்தியோகத்தர், தகவல் அலுவலர் ஆகியோரும் இந்தப் பெருமைக்கு ஆளாகியுள்ளனர்.