Features அரசியல்

முஸ்லிம் சமூகத்தில் அடிவருடிகளை உருவாக்கும் புதிய அரசியல்

Written by Administrator
  • ஜயதேவ உயங்கொட

அமெரிக்காவை மையப்படுத்தி உலகில் புதிதாக உருவாகியுள்ள அரசியல் செல்நெறியாகவிருப்பது அரசு சிறுபான்மையினரை சமமான பிரஜைகளாக நடத்தாமையை எதிர்த்துப் பரவும் மக்கள் இயக்கமே. கறுப்பினத்தவரை அமெரிக்க பொலிசார் குரூரமாக நடத்தியதை இனிமேலும் பொறுக்க முடியாத நிலையில் அமெரிக்காவின் ஏழைக் கறுப்பினத்தவர்களால் இயல்பாகவே எழுப்பப்பட்ட எதிர்ப்பு இப்பொழுது அமெரிக்காவிலும் ஐரோப்பாவின் பல நாடுகளிலும் முக்கிய அரசியல் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இந்தப் பின்னணியில் சிறுபான்மை உரிமைகள் பற்றிய கதையாடல்கள் உலக அளவில் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த இரு தசாப்தங்களிலும் சிறுபான்மை உரிமைகள் எனும் பேசுபொருள் பின்னடைவைச் சந்தித்திருந்தது. அதனுடைய பின்னரங்கில் அமெரிக்க அரசாங்கமும் அமெரிக்காவின் வலதுசாரி அரசியல் சக்திகளும் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்புக்கான உலக யுத்தத்தில் காணப்பட்ட முஸ்லிம் எதிர்ப்பு இருந்தது. இந்தக் கலந்துரையாடல் இலங்கை, இந்தியா,பர்மா போன்ற நாடுகளுக்கும் வந்து சேர்ந்துள்ளது.

இனத்துவ அரசியலும் இனரீதியான உறவுகளும் தொடர்பில் இலங்கையில் நிலவும் போக்கு எப்படியானது என்பதைத் தெரிந்து கொள்வது தற்போதைய உலக சூழ்நிலையில் விஷேட முக்கியத்துவம் பெறுகிறது. பொதுஜன பெரமுனவின் அரசியல் எழுச்சியும் அதனுடைய அஜன்டாவில் அரசுக்கும் சிறுபான்மைக்குமிடையிலும் மற்றும் பெரும்பான்மை – சிறுபான்மைக்கிடையிலும்  உறவை மீள ஒழுங்குபடுத்தும் செயற்பாடொன்றுக்கு முன்வந்திருப்பதையும் அவதானிக்க முடியும்.

சிறுபான்மையினர் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் உறவுகள் சற்றுச் சிக்கலானதாக அமைந்துள்ளது என இந்நாட்களில் வெளிப்படையாகவே கருத்துச் சொல்லப்படுகிறது. இது தொடர்பில் அரச தலைமைகளிடமுள்ள சிங்கள பௌத்த தேசியவாத கருத்துக்களையும்  அரசியல் செயற்திட்டங்களையும் முன்னெடுத்தலுக்கும் மற்றும் விரைவில் நடக்கவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் மூலமாக தமது அரசியல் பலத்தை நிறுவிக் கொள்வதற்கும் இடையில் உருவாகும் முரண்பாட்டின் விளைவே இது.

நீண்டகால விளைவைத் தரக் கூடிய அரசியல் திட்டமொன்றை முன்னெடுப்பதை ஆரம்பிப்பதே அரசின் குறுகிய கால அரசியல் நோக்கமாக இருக்கிறது. அதாவது இலங்கையை புதுவகையிலான சிங்கள –பௌத்த அதிகாரமிக்க அரசாக மாற்றுவது. பொதுஜன பெரமுனவும் அதனுடன் தொடர்புடைய அமைப்புக்களும் பேசுகின்ற அரசியல் மாற்றத்தின் அர்த்தம் இதுதான். இதற்காக இலங்கையில் தற்போதுள்ள அரசியலமைப்பை இல்லாதொழிப்பது அல்லது அதனது அடிப்படைச் சட்டகத்தை மாற்றுவது அவசியமாகவுள்ளது. இதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் சிலவேளை பின்னர் நடத்தப்படவிருக்கின்ற சர்வஜன வாக்கெடுப்பின் பெரும்பான்மையும் தேவைப்படுகிறது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு சிங்கள சமூகத்தின் பெரும்பான்மை வாக்குகளை பெறுவது மட்டும் போதாது என்ற கருத்து அரச தலைவர்களுக்கு இருக்கிறது. இதற்கு தமிழ், முஸ்லிம் மட்டுமன்றி கிறிஸ்தவ, கத்தோலிக்க வாக்குகளும் தேவைப்படுகின்றன. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் பொதுஜனபெரமுன முன்னெடுத்த முஸ்லிம் எதிர்ப்புக் கருத்துப் பிரச்சாரம் வெற்றியளித்துள்ளதால் பௌத்த மற்றும் கிறிஸ்தவ வாக்குகளில் பெரும்பான்மையை வெற்றி கொள்வதற்கு பொதுஜன பெரமுனவால் முடிந்திருக்கிறது. ஆனாலும் பௌத்த அரசாங்கம் தொடர்பிலான அரசாங்கத்தின் அர்ப்பணம் மிகவும் தெளிவாகத் தெரிகின்ற பாராளுமன்றத் தேர்தலில் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ வாக்குகள் அரசுக்குக் கிடைப்பதற்கான உறுதி தொடர்பில் அரசாங்கத்தின் தேர்தல் நிபுணர்களுக்கு மத்தியில் சந்தேகம் வளர்ந்திருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

இதற்கிடையில் முஸ்லிம்களின் வாக்குகள் தொடர்பில் பொதுஜன பெரமுன மிகவும் சிக்கலான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. தீவிர முஸ்லிம் எதிர்ப்பு, பொதுஜன பெரமுனவின் சிங்கள – பௌத்த அரசாங்கக் கோட்பாட்டின் பிரதான அம்சமாக இருப்பதோடு தற்போது அது அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய ஆயுதமாகவுமிருக்கிறது. ஆனால் அது இருபக்கமும் வெட்டும் ஆயுதம். அது பௌத்த மற்றும் கத்தோலிக்க மக்களுக்கு முகம் கொடுப்பதற்காக அரசாங்கத்துக்கு இடமளிக்கிறது. ஆனால் முஸ்லிம்கள் தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவிடமிருந்து தூரமாவதற்கு இது காரணமாக அமையும். அப்படியானால் முஸ்லிம்கள் தொடர்பில் பொதுஜன பெரமுனவிடம் காணப்படும் உபாயம் என்ன ?

தற்பொழுது தெளிவாகத் தெரிவதன்படி, முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே தமக்குத் தேவையான தமக்குக் கீழ்ப்படிகின்ற புதிய அரசியல் பிரிவொன்றை உருவாக்கி அந்தப் பிரிவின் தலைவர்களையும் உறுப்பினர்களையும் பாராளுமன்றத் தேர்தலில் வெல்ல வைத்து அவர்களை முன்னுக்குக் கொண்டு வருவதே அரசின் முக்கிய உத்தியாக இருக்கிறது. ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற Quisling என்ற சொல் முஸ்லிம் அரசியல் பிரிவை அடையாளப்படுத்துவதற்குப் பொருத்தமானது. ஆளும் தரப்பு தாம் அடிமைப்படுத்திய சமூகத்துக்குள் தமக்குப் பணிவிடை செய்வதற்கான பிரதிநிதிகளை நியமித்துக்கொள்வது என்பது இதன் அர்த்தமாகும். இந்தப் பிரதிநிதிகளுக்கு வரப்பிரசாதங்களும் அன்பளிப்புக்களும் கிடைக்கும். ஆனால் அது அடிமைப்படுதலுக்குக் கிடைக்கும் உத்தரவாதமே. இந்த முஸ்லிம் அரசியல் கட்சிகள் 1988 இலிருந்தே இலங்கையின் கட்சி அரசியலிலும் கூட்டணி அரசியலிலும் வெற்றிகரமாக இதனைத் தான் செய்திருக்கின்றன. மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் இந்தச் சிறுபான்மை குவிஸ்லிங் அரசியலை மிக வெற்றிகரமாக முன்னெடுக்கும் அரசியல் தலைமை உள்ள சிறுபான்மைச் சக்தியாகும்.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தொடர்பில் பொதுஜன பெரமுன தற்போது எதிர்நோக்கும் குறிப்பான சவாலொன்று இருக்கிறது. அது வடக்கு கிழக்கு தமிழ்ச் சமூகத்துக்கும் பொதுவான சவாலாகும். இந்த இரண்டு சமூகங்களிலும் தற்போது உள்ள அரசியல் தலைமைத்துவ பிம்பங்கள் தொடர்பிலான நம்பிக்கைகள் சிதைந்திருப்பதே அதுவாகும். இந்தப் பிரச்சினை தமிழ் சமூகத்தை விட முஸ்லிம் சமூகத்தில் வித்தியாசமான வடிவில் இருக்கிறது. முஸ்லிம் அரசியல் தலைமை 1994 இல் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்திருந்தாலும் அது உறுதியான உறவாக இருக்கவில்லை. அதேநேரம் ஐதேகவுடனும் கூட்டணியமைப்பது முஸ்லிம் கட்சிகளின் பொதுவான அரசியலில் காணப்படும் சகஜமான விடயமாகவுள்ளது. கடந்த வருடம் நிகழ்ந்த முஸ்லிம் இளைஞர்களின் பயங்கரவாத அரசியல் வெடிப்புடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் பாரம்பரிய முஸ்லிம் தலைமைகளுடன் மேற்கொண்டு வந்த உறவுகளும் வெடித்துச் சிதறியுள்ளதாகத் தெரிகிறது.

இந்தப் பின்னணியில் பொதுஜன பெரமுன தலைமைகள் முஸ்லிம் சமூகம் தொடர்பில் புதிய அரசியல் வியூகமொன்றை ஒழுங்கமைத்திருப்பதை அவதானிக்க முடியும். முஸ்லிம் சமூகத்தின் பழைய மற்றும் பிம்ப அரசியல் தலைமைகளை கைவிட்டு தமக்குச் சார்பான தமது கருத்துக்களை மட்டுமே ஏற்றுக் கொள்கின்ற புதிய அரசியல் தலைமையொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதே அந்த வியூகம். முன்வரும் பாராளுமன்றத் தேர்தல் இந்தப் புதிய அரசியல் தலைமை தோன்றுவதற்கான சந்தர்ப்பமாக அமையும்.

பொதுஜன பெரமுனவின் தலைமையின் உதவியுடன் தற்போது உருவாகி வரும் புதிய முஸ்லிம் தலைமைக்கு எவ்வாறான சமூக இயல்புகள் இருக்கின்றன என்பதும் எமது கலந்துரையாடலுக்குப் பயன்படும். அவர்களது சமூகக் கட்டமைப்பின் மூலம் கிழக்கின் முஸ்லிம் அரசியல் பிரபுக்களின் குடும்பங்கள் அல்ல. இப்பொழுது புலப்படுகின்ற வகையி்ல் முஸ்லிம் அரசியல் தரப்புக்கள் மேற்கிலும் தெற்கிலுமுள்ள துறைசார்ந்த முஸ்லிம்களையும் வர்த்தகர்களையும் உள்ளடக்கியது. அவர்கள் முஸ்லிம் சமூகத்தில் முன்வைக்கின்ற அரசியல் வாதங்கள், இந்தியாவில் பிஜேபி அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாதங்களை ஒத்தது. அதாவது, “இந்தப் புதிய அரசாங்கம் பல வருடங்களுக்கு ஆட்சியிலிருக்கப் போகும் மிகவும் பலமான அரசாங்கம். சிறுபான்மையாகிய எங்களது தலைவிதி அவர்களிடமே இருக்கிறது. அதனால் எமக்கிருக்கின்ற சிறந்த நடைமுறைச் சாத்தியமான மாற்றுவழி, அவர்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு அவர்களது அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு எங்களது வேலைகளைச் செய்து கொண்டு போவதுதான். இந்த அரசாங்கத்துக்கு வெளியில் இருப்பதால் முஸ்லிம்களுக்கு நட்டமேயன்றி எந்த வாசியும் இல்லை.“

தமிழ்ச் சமூகம்

இதற்கிடையில் புதிய சிங்கள-பௌத்த அரசாங்கத்துக்கும் வடக்கின் தமிழ்ச் சமூகத்துக்கும் இடையிலான உறவு எந்தவகையில் வளரப்போகிறது ? தமிழ்ச் சமூகத்திலும் குவிங்ஸ்லி தரப்பொன்றை புதிதாக உருவாக்குவது தான் பொதுஜன பெரமுனவின் உத்தியாகும். அது டிஎன்ஏக்குப் பகரமாகவே முக்கியமாகக் கட்டமைக்கப்படுகிறது. இது எல்ரிரிஈயைத் தோற்கடித்ததன் பின்னர் அப்போதைய ஜனாதிபதி முன்வைத்த அடியாகும். ஆனால் அப்போது அது சாத்தியமாகவில்லை. இம்முறைய பாராளுமன்றத் தேர்தலில் அந்த முயற்சி புதுப்பிக்கப்பட்டுள்ளது.

வடக்குத் தமிழர்களில் கட்டியெழுப்பப்படுகின்ற புதிய குவிங்ஸ்லி அரசியல் தரப்பு முக்கியமாக துறைசார் நிபுணர்களாலும் வர்த்தகர்களாலுமே கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தகர்கள் ஐரோப்பாவிலும் வர்த்தகம் செய்வதோடு உலகமயமாக்கலால் உருவாக்கப்பட்ட நாடு கடந்த தேசியத்தின் வர்த்தகப் பிரிவாகத் தெரிகிறது. இலங்கையின் அரச சக்திக்கு ஆதரவளிப்பது அவர்களது பொருளாதார வர்த்தக வெற்றிகளுக்கான படியாக அமைவது அவர்களது விஷேட இயல்பாகும். இந்த துறைசார் நிபுணர்களும் வர்த்தகர்களும் எல்ரிரிஈ, டிஎன்ஏ போலவே டக்ளஸ், சித்தார்த்தன் போன்றவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய பழைய தமிழ்த் தேசியவாதத்தை அரவணைத்தவர்கள் அல்ல. அவர்களது அரசியல் நிகழ்ச்சி நிரல் லிபரல் பொருளாதாரத்தினால் வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இனி,

முன்வரும் காலத்தில் இலங்கையின் இனத்துவ உறவுகள் எவ்வகையான வடிவத்தை எடுக்கும் என்பது தற்போது தெளிவாக இல்லை. அதற்குக் காரணம் இனங்களுக்கிடையிலான அரசியல் உறவுகள் நலிவடைந்து உருகிவடியக் கூடிய நிலையில் இருக்கின்றன. இலங்கையின் அரசு இனப் பெரும்பான்மைவாத மதப் பெரும்பான்மைவாத அரசாக மாறுவதற்கு தற்பொழுது வெளிக்காட்டும் போக்கு இந்த இயல்பின் உச்சியில் இருக்கிறது. தமிழ், முஸ்லிம்,கத்தோலிக்க சமூகங்களின் தலைவர்களும் இதனைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இது தொடர்பில் அவர்கள் ஒப்பீட்டளவில் மௌனம் சாதித்தே வருகிறார்கள். சிலர் இந்த அரசு மாற்றத் திட்டத்துடன் இணைந்து செல்வதற்குத் தீர்மானித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. அத்தோடு பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இனங்களுக்கிடையிலான அரசியல் தொடர்பில் இதைவிடத் தெளிவாக எம்மால் கண்டு கொள்ள முடியும்.

பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதியின் கட்சி இலகுவாக வெற்றி பெறவுள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எமது நாட்டின் அரசாங்கத்தின் போக்கு அடிப்படை மாற்றத்துக்கு உள்ளாகப் போகிறது. அரசுக்கும் சிறுபான்மைக்கும் இடையிலான உறவில் பெரும்பான்மைக்கும் சிறுபான்மைக்கும் இடையிலான உறவில் ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் மீள ஒழுங்குபடுத்தக் கிடைப்பது அரச மாற்றத்தின் ஒரு இயல்பாக அமையும். அதேபோல அமெரிக்காவில் நடப்பவற்றில் எமக்கும் ஒரு பாடம் இருக்கிறது. சிறுபான்மையினர் அடிமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அவர்களது பொறுமைக்கும் எல்லை இருக்கிறது. அரசின் இராணுவ அதிகாரத்தினால் மட்டும் இனங்களுக்கிடையிலான உறவை முகாமை செய்யலாம் என அரச தலைவர்களுக்கு தற்போது இருக்கும் நம்பிக்கை முன்வரும் காலங்களில் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் எனச் சொல்வதற்கு யாரும் தீ்ர்க்கதரிசியாக இருக்க வேண்டியதில்லை. அரசியல் சமத்துவம் இல்லாத சிறுபான்மைச் சமூகங்களைத் திருப்திப்படுத்துவது அவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சிலரை செல்வந்தராவதற்கு வாய்ப்பு வழங்குவதன் மூலம் செய்ய முடியாது என்பதும் புதிதாகச் சொல்ல வேண்டியதல்ல.

About the author

Administrator

Leave a Comment