Features பலஸ்தீன

இந்த நிலம் களவாடப்பட்டுள்ளது

Written by Administrator

– பலஸ்தீன் கிறிஸ்தவர்களின் திறந்த மடல்

நீதியுடனும் நியாயத்துடனும் செயல்படுங்கள். கொள்ளையடிக்கப்பட்ட எவரையும் ஒடுக்குபவரின் கையிலிருந்து விடுவியுங்கள் – எரேமியா 22: 3

பெத்லஹேம் பிரதேசத்திலுள்ள பல்வேறு கிறிஸ்தவ சமூகங்களினதும் ஆன்மீகத் தலைவர்களாகிய நாங்கள் எமது சக்திக்கெட்டிய வகையில் இதனை எழுதுகின்றோம். இஸ்ரேலிய அரசாங்கம் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனின் இன்னும் பல நிலங்களை இணைப்பதற்குத் திட்டமிடுகிறது. அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி ஜூலை 01 முதல் இது ஆரம்பமாகிறது. பலஸ்தீனுக்கும் பெத்லஹேமுக்கும் குறிப்பாக அதன் கிறிஸ்தவர்களுக்கும் இந்தப் புதிய இணைப்பு நடைமுறை கடுமையான பேரழிவாகும்.

1967 இன் ஆக்கிரமிப்புடன் பெத்லஹேமின் வடபகுதியில் உள்ள பெய்த்ஜாலா, பெய்த்ஸஹூர் பகுதியிலுள்ள 20,000 தனம்ஸ் (5000 ஏக்கர்) காணியினை சட்டவிரோத குடியிருப்புக்காக இஸ்ரேல் இணைத்துக் கொண்டது. இது சமூகங்களாக வாழ்வதற்கான எமது இயலுமைக்கு பாரிய தடங்கலாக அமைந்தது. பெத்லஹேமிலுள்ள மிக முக்கிய கிறிஸ்தவ சமயத்தலங்களில் ஒன்றான மார் எலியஸ் மடாலயத்தை ஏற்கனவே இணைத்து விட்டார்கள். புனித நிலத்திலான கிறிஸ்தவ மதத்தின் இரண்டாயிரம் வருட வரலாற்றில் முதற்தடவையாக ஜெரூஸலத்திலிருந்து பெத்லஹேமை அவர்கள் பிரித்து விட்டார்கள்.

எமது விரிவாக்கத்துக்கும் விவசாயத்துக்கும் குடும்பங்கள் இயற்கையை களிப்பதற்கும் எமக்கு எஞ்சியுள்ள சில பகுதிகளில் கிரிமீஸான் மற்றும் மஹ்ரூர் பள்ளத்தாக்குகள் சிலவாகும். எமது நகர்ப்புறத்தின் மேற்கில் அமைந்துள்ள இந்த இரு இடங்களும் இஸ்ரேலிய அதிகாரிகளின் தற்போதைய இணைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இதனால் நூற்றுக்கணக்கானவர்களின் பிரத்தியேக சொத்துக்கள் பாதிப்புக்குள்ளாகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மடாலயங்களுக்கு மேலாக சலீசிய கன்னியாஸ்திரிகளால் நடத்தப்படும் கல்விக் கூடமொன்றும் அங்குள்ளது. எமது மக்களில் சிலர் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகின்ற    மேற்கு பெத்லஹேம் நகர்ப்புறங்களும் அபாயத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நஹலினின் டென்ட் ஒப் நேஷன்ஸும் உள்ளடங்குகிறது. அதேவேளை அமெரிக்காவின் மூல வரைபடத்தின்படி, உள்ளுர் சமூகத்தின் தேவைக்கென சிறுவர் வைத்தியசாலையொன்று அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பெய்த் ஸஹூரின் அஷ் அக்ரப் பிரதேசம் உள்ளிட்ட பெத்லஹேம் கிழக்குப் பகுதியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. 

இந்தப் பிரதேசங்களை இணைப்பதனூடாக அதிகமான மக்கள் இடம்பெயர்வார்கள் என்பதே எமது பெரும் கவலையாகவுள்ளது. சுவர்களாலும் குடியிருப்புக்களாலும் சூழப்பட்டுள்ள பெத்லஹேம் ஏற்கனவே ஒரு திறந்த சிறைச்சாலை போலுள்ளது. இணைப்பு என்பது அந்தச் சிறைச்சாலை இன்னும் சிறியதாவது தான். அங்கு சிறந்த எதிர்காலத்துக்கான எந்த நம்பிக்கையும் இருக்காது.

இந்த நிலம் களவாடப்பட்டுள்ளது. வாரிசுரிமைகளாகப் பெற்று நூற்றுக்கணக்கான வருடங்களாக விவசாயம் செய்து வருகின்ற, பெருமளவில் தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமான, எங்களது குடும்பங்களுக்குச் சொந்தமான எமது நிலத்தைப் பற்றியே நாம் பேசுகிறோம்.

நில அதிகாரத்தில் எம்மில் பலர் நம்பிக்கை இழந்துள்ளனர். அவர்கள் உதவியற்று நம்பிக்கையிழந்திருக்கிறார்கள். சுவர்களை விஸ்தரிப்பதற்கான பாதையைத் தயாரிப்பதற்காக இம்மாதம் இஸ்ரேலிய புல்டோஸர்கள் தனது நிலத்தை விழுங்குவதைக் கண்ணுற்ற ஒருவரின் வார்த்தைகளில் சொல்வதானால், “அது ஒரு பேரழிவு. நீங்கள் உங்களது நிலத்தை புல்டோஸர்கள் தரைமட்டமாக்குவதைக் காணுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது. அவர்களை யாரும் நிறுத்துவதில்லை.“

நீதிக்கும் சமாதானத்துக்குமாக யாராவது தைரியமாக முன்வந்து தனது கண்முன்னால் நடக்கின்ற மிகப் பெரும் அநியாயத்தை தடுத்து நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை இனி எம்மவரிடத்தில் இல்லை. பலஸ்தீனர்களின் மனித உரிமை பல தசாப்தங்களாகவே மீறப்பட்டு வருகிறது. எதிர்பார்ப்பு தான் நம்பிக்கையின் தூண். மத்திய கிழக்கிலுள்ள கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொள்பவர்களினால் இது சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. பலஸ்தீனில் கிறிஸ்தவ பிரசன்னத்தி்ன் சாத்தியம் என்று வரும் போது இணைப்பு என்பது கடைசித் துரும்பாகவே அமையும். சர்வதேச சட்டங்களுக்குட்பட்டு எமது தாயகத்தில் சமத்துவம், கௌரவம், சுயாதீனம், சுதந்திரமாய் வாழ்வதற்கான தேசிய அபிலாஷைகளினதும் கடைசித் துரும்பாக அமையும்.

பொதுவாகப் பலஸ்தீனிலும் குறி்ப்பாக பெத்லஹேமிலும் நடைபெறும் இணைப்பின் விளைவுகளைப் பற்றித் தெரியாது என்று யாரும் சொல்ல முடியாது. கிறிஸ்தவம் ஆரம்பித்த நிலத்தில் அதனுடைய பிரசன்னத்தை எமது தோள்களில் சுமந்து நிற்கும் வரலாற்றுச் சுமையை நாம் உணர்கிறோம். எமது எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் கடவுளிடம் பொறுப்புச் சாட்டி இந்தக் கொடிய அநியாயத்தைத் தடுத்து நிறுத்துமாறு உலகத் தலைவர்களை வேண்டிக் கொள்கிறோம். சமாதானத்துக்கும் நீதிக்கும் நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம். எங்களைப் பலப்படுத்திக் கொள்ள உலகெங்கிலுமுள்ள பலரதும் குறிப்பாக கிறிஸ்தவ தேவாலயங்களின் ஆதரவை நாடுகிறோம். இந்த அநியாயத்தை நிறுத்துவதற்கான உறுதியான தீர்க்கமான முடிவை உலகம் எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த நிலம் வழங்குகின்ற நீதி மற்றும்  சமாதானத்துக்கான எதிர்கால நம்பிக்கையை மீட்டெடுக்கும் சூழ்நிலையை அவர்கள் உருவாக்கித் தருவார்கள் என்றும் நம்புகிறோம்.

பாதிரியார் யாகூப் அபூ ஸபா – த தியோடோகோஸ் மெல்கைட் தேவாலயம், பெத்லஹேம்

பாதிரியார் ஈஸா முஸ்லி்ஹ் – போபாதர்ஸ் கிரீக் ஓதடொக்ஸ் தேவாலயம், பெய்த் ஸஹோர்

பாதிரியார் ஹனா ஸாலிம் – தேவ அறிவிப்புக்கான கத்தோலிக்க தேவாலயம், பெய்த் ஜாலா

பாதிரியார் புலூஸ் அல் ஆலம் – புனித மேரி கிரேக்க ஓதடொக்ஸ் தேவாலயம், பெய்த் ஜாலா

அருட்தந்தை அஷ்ரப் தன்னூஸ் – இவான்கலிகல் லுதேரன் சீர்திருத்த தேவாலயம், பெய்த் ஜாலா

பாதிரியார் சுஹைல் பகூரி – அவ லேடி ஒப் த ஷெபேர்ட் மெல்கைட் தேவாலயம், பெய்த் ஸஹோர்

அருட்தந்தை முன்தர் ஐசக் – எவாங்கிலிகல் லுதேரன் கிறிஸ்மஸ் தேவாலயம், பெய்த்லஹேம்    

About the author

Administrator

Leave a Comment