சர்வதேச மனிதாபிமானச் சட்டப் போட்டியில் இலங்கை மாணவர்கள் சாதனை

55

கடந்த மார்ச் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜீன் பிக்டெட் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் (Jean-Pictet International Humanitarian Law (IHL) Competition) போட்டியில் இலங்கையின் இரண்டு பல்கலைக்கழகங்களில் இருந்து கலந்து கொண்ட  ஆறு மாணவர்கள் போட்டி ஒழுங்கமைப்பாளர்களின் வெகுவான பாராட்டுதல்களைப் பெற்றுள்ளனர்.

ஜீன் பிக்டெட் போட்டி என்பது சர்வதேச மனிதாபிமானச் சட்டம் தொடர்பில் சட்டம், அரசியல் விஞ்ஞானம், இராணுவக் கல்வி போன்ற துறைகளைச் சேர்ந்த மாணவர்களை பயிற்றுவிக்கும் போட்டி நிகழ்வொன்றாகும். ஒரு அணியில் மூன்று பேர் பங்குபற்றுவார்கள். பொதுவாக ஐந்து கண்டங்களிலும் இருந்து 48 அணிகள் தெரிவு செய்யப்படுவர். இவர்களுக்கு முதலில் தொலை தூரப் பயிற்சி வழங்கப்படும். பின்னர் அவர்கள் போட்டிக்காக வேண்டி ஓரிடத்தில் ஒன்று சேர்வார்கள். இந்த இடம் ஒவ்வொரு வருடமும் மாறுபடும். ஒரு கற்பனையான ஆயுத மோதலைச் சுற்றி இவர்கள் பாத்திரப் படைப்புக்களை ஏற்று உருவகப்படுத்தல்கள், பாத்திரமேற்று நடித்தல் மூலமாக போட்டியில் ஈடுபடுவார்கள். ஆயுத மோதலில் சம்பந்தப்படுகின்ற படைவீரன், மனிதாபிமானப் போராளி, அரசியல்வாதி, சட்டத்தரணி போன்றவர்களின் பாத்திரமேற்று இவர்கள் நடிப்பார்கள். ஒரே வகையான சட்டச் சூழலை விட பலதரப்பட்டதாக இந்தச் சூழல் அமையும். அவர்களுடைய செயற்பாடுகள் ஜூரிக்களால் மதிப்பீடு செய்யப்படும். அனைத்துமே வாய்மொழிப் பரீட்சைகள் தான். விண்ணப்பம் தயாரிப்பது மட்டும் தான் எழுத்தில்.

இந்தப் போட்டிகளின் 33 மற்றும் 34 ஆம் பதிப்பு தான் இந்தோனேஷியாவின் டென்பஸாரில் இவ்வருடம் மார்ச்சில் நடந்தது. இதுவரை கலந்து கொண்டுள்ள 3901 மாணவர்களின் கருத்துப்படி இது ஒரு தனித்துவமான அனுபவம்.

கொவிட் 19 உலகைத் தாக்கிய போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தைச் சேர்ந்த மாணவர்களான அமன்டா ஹாலிடே, அம்ரா இஸ்மாயில், பாக்யா சமரகோன் ஆகியோரும், கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஸ்ரா பஷீர், பிரியந்திமா பெரேரா, ஷெஹானி ஆரச்சிகே ஆகியோரும் தீர்க்கமானதொரு முடிவை எதிர்கொண்டனர். பல மாத கால தயாரிப்புக்களுக்கும் தெரிவுகளுக்கும் பிறகு இவர்கள் போட்டியின் 34 ஆவது பதிப்பில் 90 க்கும் மேற்பட்ட அணிகளில் ஒன்றாக இணைந்து கொண்டனர்.

கொழும்பிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் (ICRC)  பிரதிநிதிகள் பட்டதாரி மாணவர்களிடையே சர்வதேச மனிதாபிமான சட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் வருடாந்தம் வாத நீதிமன்ற (moot court) போட்டிகளை ஏற்பாடு செய்கிறார்கள். வருடாந்தம் தெரிவாகும் இரு அணிகளுக்கும் பயிற்சிகளை வழங்கி அவர்களின் பயணத்துக்கான நிதி ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கிறார்கள். 2019 இலிருந்து 09 மாணவர்கள் இவ்வாறு பயன்பெற்றிருக்கிறார்கள்.

முதல் தடவையாக அரை இறுதிக்குத் தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் கொழும்புப் பலகலைக்கழக அணியைப் பாராட்டிய ஜூரர்கள், தீர்க்கமான கருத்துக்கு வரு முன்னர் வாதங்களைத் திறமையாகச் செவிமடுத்த விதத்தை குறிப்பாகப் பாராட்டினர். இந்தப் போட்டியில் இவ்வருடத்துக்கான ஜில்பர்ட் அபொல்லிஸ் பரிசை அமன்டா ஹாலிடேயும் மலேஷியாவைச் சேர்ந்த முனீரா பின்த் காலிதும் சுவீகரித்தனர்.