Features அரசியல்

எம்சிசி ஒப்பந்தமும் தேச பக்தியும் தேர்தலும்

Written by Administrator
  • மாலிக் பத்ரி

‘‘அவர்கள் எங்களை வந்தடைந்த போது
அவர்களின் கையில் டொலரும்
எங்களது கையில் நிலமும் இருந்தன.
கண்ணை மூடி ஜெபிக்கச் சொன்னார்கள்
ஜெபித்து விட்டு கண்ணைத் திறந்தோம்
எங்கள் கையில் டொலரும்
அவர்களின் கையில் நிலமும் இருந்தது. ”

தேச பக்தி அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்பார்கள். அதுவே சிலபோது குருட்டுத் தேசியவாதமாகவும் இன, மத வெறியாகவும் படம் எடுக்கின்றது. இலங்கை இன்று தேச பக்தர்களின் அடைக்கலமாகியுள்ளது. இங்கு வாழ்பவர்கள் தேச பக்தி உள்ளவர்கள், தேச பக்தி இல்லாதவர்கள் என்றே வகை பிரிக்கப்படுகின்றனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எம்சிசி ஒப்பந்தத்தை எதிர்த்து நின்றவர்கள்தாம் உண்மையான தேச பக்தர்கள். இன்று அதில் கைச்சாத்திடத் துடிப்பவர்களே உண்மையான தேச பக்தர்கள். அன்று ஆளும் கட்சிக்கு தேர்தலை வெற்றி கொள்வதை ஒரு சவாலாகவும் பிரதான எதிர்க்கட்சியான மொட்டுக் கட்சியினருக்கு ஓர் அவலாகவும் இருந்த இவ்விவகாரம் இன்று மொட்டுக் கட்சியினருக்குச் சவாலாகவும் எதிர்க்கட்சிக்கு அவலாகவும் மாறியுள்ளது.

ஒரே விவகாரம் இவ்வாறு மாறி மாறி அவலாகவும் சவாலாகவும் இருப்பது இங்கொன்றும் வினோதமானதல்ல. ஆளும் வர்க்கச் சார்பு ஊடகங்களான ஹிரு, தெரண, சுவர்ணவாஹினி என்பன தேர்தலை ஒட்டி இதனை அடக்கி வாசிக்கின்றன. டெய்லி மிரர், லங்காதீப போன்ற அச்சு ஊடகங்களும் சிரச முதலான இலத்திரனியல் ஊடகங்களும் தேர்தலுக்கு அப்பால் நின்று இவ்விவகாரத்தை தேசியப் பிரச்சினையாக விவாதிக்கக் கிளம்பியுள்ளமை ஆரோக்கியமானதே. ஏனெனில், இது கட்சிப் பிரச்சினையல்ல. நாட்டின் இறைமையோடு தொடர்பான ஒரு தேசியப் பிரச்சினை.

பாராளுமன்றில் முன்னைய பிரதமர் ரணிலை ஒரு கென்சர் என்றும் அமெரிக்காவின் முகவர் என்றும் பச்சையாகவே முத்திரை குத்திய ஒரு காலத்திய இடதுசாரி வீரவன்ச இன்று எம்சிசி விவகாரத்திற்கு முன்னால் பெட்டிப் பாம்பு போல் அடங்கிப் போயுள்ளார். பௌத்த இனத் தேசியவாதியான கம்மன்பில எம்சிசியின் ‘நல்ல பக்கங்கள்’ குறித்து உரையாடி வருகிறார். இடதுசாரி முகாமில் முகிழ்ந்த வாசுதேவ வாலைச் சுருட்டிக் கொண்டு தலையை உள்ளே இழுக்கிறார்.

எட்டு மாதங்களுக்கு முன்னர் இவர்கள் பயங்கரவாதி ஸஹ்ரானின் ஈஸ்டர் தாக்குதலையும் எம்சிசி ஒப்பந்தத்தையும் வைத்தே ஜனாதிபதித் தேர்தலில் வென்றனர். இவர்களின் எம்சிசி தொடர்பான தீவிர எதிர்ப்பு குறிப்பிட்டளவு சிங்கள வாக்குகளை இவர்கள் பக்கம் திருப்பியது. அவர்கள் எட்டு மாதங்களுக்கு முன்னர் என்ன சொன்னார்கள் என்பது இன்னும் நினைவிருக்கிறது.

எம்சிசி ஒப்பந்தம் நாட்டை அமெரிக்காவுக்குத் தாரைவார்க்கும் திட்டம். அது கிழித்தெறியப்பட வேண்டும். அதனை ரணில் கிழித்தெறியும் வரை உன்னாவிரதம் தொடரும் என்று ஒரு தலை மழித்த மதகுருவை கண்டியில் களமிறக்கி பெரும் பரபரப்பை உருவாக்கினர். அதன் மூலம் சிங்கள மக்கள் பிழையாக வழிநடத்தப்பட்டனர். அதற்கெதிராக பொறி பறக்கக் கத்திய வீரவன்சவின் வாய்வீரம் கம்மன்பிலவின் தேசபக்த சூளுரை, வாசுதேவவின் எதிர்ப்புக் குரல் அனைத்துமே இன்று காற்றில் கரைந்து விட்டன.

இலங்கை குடிமக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு எம்சிசி ஒரு மூடு மந்திரம். பொது மக்கள் பார்வைக்கு வெளிவராத புதிர். உண்மையில் எம்சிசியின் உள்ளடக்கம் என்ன? அதனால் இலங்கைக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் எவை என்பது குறித்து இதுவரை அரசியல்வாதிகளுக்கே முழுத் தெளிவு இல்லை.

எம்சிசி (Mellenium Chellange Coroperation) 60 நாடுகள் பிணைக்கப்பட்டுள்ள ஒரு வலைப் பின்னல். சர்வதேச சட்டங்களால் ஆளப்படும் ஒரு சிக்கலான ஒப்பந்தம். இதுவரை இந்த ஒப்பந்தத்தில் 23 ஆபிரிக்க நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. அவற்றுக்கு 9 பில்லியன் டொலர்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. செனகல், பெனின், பேர்கினோ பெசோ, ஐவரிகொஸ்ட், எதியோப் பியா, கானா, கென்யா, லெசோதா, மாலாவி, லைபீரியா, மொரோக்கோ, மொசாம்பிக், மடகஸ் கார், நைகர், காம்பியா, தோகோ, தூனிசியா, சியரா லியோன் போன்ற நாடுகள் ஏற்கனவே இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

அதன் மூலம் அவை பெற்ற நன்மைகளை விட நீண்ட காலத் தீமைகளே அதிகம் என்பது நிரூபணமாகியுள்ளது. வறுமை ஒழிப்பு, கீழ்க் கட்டுமான அபிவிருத்தி, போக்குவரத்து முன்னேற்றம் போன்ற விம்பங்களை இவ்வொப்பந்தம் இந்நாடுகளில் உருவாக்கியபோதும், கோப்ரேட் கம்பனிகளுக்கு அரச மற்றும் தனியார் நிலங்களை தாரைவார்ப்பது இந்த ஒப்பந்தத்தின் பிரதான குறிக்கோளாய் இருந்துள்ளது.

பொதுவாக, ஊழல் மோசடி மிக்க, அரசியல் ஸ்திரமற்ற, குறைவருமான நாடுகளே அமெரிக்காவின் இலக்காக இருக்கின்றன. ஒருவகையில் நிதி முகாமையிலுள்ள ஒழுங்கீனங்கள் இத்தகைய ஒப்பந்தத்திற்கு வழிகோலுகின்றன. மக்களுக்குத் தெரியாமலேயே நிலங்கள் பல்தேசிய கம்பனிகளின் கீழ் கொண்டு வரப்படும் ஆபத்தை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஆபிரிக்க நாடுகள் எதிர்நோக்கி வருகின்றன.

அமெரிக்காவின் விவசாயத்துறை வியாபாரத்திற்கென இந்நாடுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் மடகஸ்கார். கிராமப்புற மலைவாசிகளின் காணிகள் அவர்களுக்குத் தெரியாமலேயே கோப்ரேட் கம்பனிகளுக்கு விற்கப்பட்டுள்ளன. தமது ஊழல் மோசடி மிக்க அரசாங்கம் 1.3 மில்லியன் ஹெக்டெயர் நிலத்தை கொரிய கம்பனியான தேவு லொஜிஸ்டிக் எனப்படும் கம்பனிக்கு ஒதுக்கியிருப்பதையும் மேலும் பல லட்சக்கணக்கான ஹெக்டெயர் காணிகளை வருண் எனப்படும் இந்திய கம்பனிக்கு ஒதுக்கியிருப்பதையும் தெரிந்துகொண்ட மடகஸ்கார் மக்கள் ஒரு கட்டத்தில் அதிர்ந்து போனார்கள்.

இலங்கையில் 480 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்காக நாக்கை வெளியே நீட்டிக் கொண்டு அலையும் அரசியல்வாதிகள் எம்சிசியினால் நாட்டு நலனுக்காக எதனைச் சாதிக்கப் போகிறார்கள்?

பேராசிரியர் லலிதசிறி தலைமையிலான நால்வர் அடங்கிய குழுவொன்று தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதி கோத்தாவிடம் கையளித்துள்ளது. அக்குழுவின் பரிந்துரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த நிபந்தனையுமின்றி எம்சிசி ஒப்பந்தம் நிராகரிக்கப்பட வேண்டும். இது கடனல்ல; நிதியுதவி. எவ்வாறாயினும், இலங்கை முன்னர் பெற்ற நிதியுதவிகளை விட முற்றிலும் வேறுபட்டது. இதற்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் பிரச்சினைக்குரியவை. அதேபோல அதனை நடைமுறைப்படுத்துவதற்காக குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளும் இலங்கைக்குப் பொருத்தமற்றவை. சாதாரண நிதிப் பரிமாற்றல் முறைமைகளுக்கு முரணானவை என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள 480 மில்லியன் டொலர்களில் 70 வீதமானவை போக்குவரத்துத் துறை மேம்பாட்டிற்கும் மிகுதி 30 வீதமானவை காணிகளைப் பதிவுசெய்வதற்கு எனவும் ஒதுக்கப்படவுள்ளது. இவ்வொப்பந்தத்திலுள்ள அடிப்படைப் பிரச்சினைகளை கீழ்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

1. எம்சிசி ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள சில நிபந்தனைகள் இலங்கையின் அரசியல் யாப்புக்கு நேர் முரணானவை.

2. இந்த ஒப்பந்தத்தின் கீழ் செயல்படும் அமெரிக்க அரசுக்கும் அதன் ஊழியர்களுக்கும் வழங்கப்படும் விதிவிலக்குகளினூடாக இலங்கையின் சட்டத் துறையில் நேரெதிரான தாக்கங்கள் ஏற்படும்.

3. உள்ளூர் சட்டங்களை மீறி இலங்கை -குறிப்பாக இலங்கையின் காணி விவகாரம் சர்வதேச சட்டத்திற்கு உட்படலாம்.

4. அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளும்போது நாட்டின் தேசிய சட்டங்கள், ஒழுங்கு விதிகள், நடைமுறைகளில் அது பெரும் தாக்கம் விளைவிக்கும்.

5. காணிகளை மின்னியல் முறையில் மீள் பதிவுசெய்தல் என்ற விவகாரம் இதிலுள்ள மிகச் சந்தேகத்திற்கு இடமான ஒரு விவகாரமாகும். அது ஒப்பந்தத்தில் உள்ளவாறு நடைமுறைக்கு வருமாயின், தேச வழமைச் சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம், கண்டிய சிங்களச் சட்டம் ஆகியவற்றில் உள்ளடங்கியுள்ள சொத்துரிமைச்  சட்டம் இயல்பாகவே செயலிழந்து போய்விடும் என்று எச்சரிக்கப்படுகின்றது.

பேராசிரியர் லலிதசிறி குணருவன், முன்னைநாள் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் முன்னாள் இலங்கைப் பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக்க, சிரேஷ்ட அரசியல் பகுப்பாய்வாளர் விக்டர் ஐவன் போன்றவர்கள் இவ்வொப்பந்தத்திலுள்ள ஆபத்தான கூறுகள் குறித்து எச்சரித்து விட்டனர். அவர்களின் கருத்தில் எம்சிசி சுயநலமில்லாத ஓர் அமைப்பல்ல. இலங்கையிலும் பிராந்தியத்திலும் அமெரிக்காவின் அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தொடர்வதற்கு வொஷிங்டன் கையிலெடுத்துள்ள பேராயுதமே எம்சிசி.

மேலைநாடுகள் குறிப்பாக, ஐக்கிய அமெரிக்க தனக்கு இலாபமில்லாத எந்தவொரு ஒப்பந்தத்திலும் மூக்கை நுழைப்பதில்லை. அது எப்போதும் தனது ஒருபக்க நலனில் குறியாய் இருப்பதும் டொலர்களின் வலையில் சிறிய அரசுகளை வீழ்த்துவதுமே அதன் வரலாறு. இது தேசபக்தர்கள் என்று கொக்கரிக்கும் பௌத்த இனத் தேசியவாதிகளான வீரவன்சவுக்கும் கம்மன்பிலவுக்கும் ஒன்றும் புரியாத விவகாரமல்ல. அவர்கள் ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்புப் பீரங்கிகளாக அறியப்பட்டவர்கள். என்ன செய்வது?

உலக வங்கி இலங்கையை கீழ்மட்ட வருமானம் பெறும் நாடாகத் தரமிறக்கும் அளவுக்கு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி யடைந்துள்ளது. மூச்செடுக்க முனைபவர்களுக்கு அமெரிக்காவின் 480 அமெரிக்க டொலர் மிகப் பெரும் வரப்பிரசாதமல்லாவர? அதனால் அவர்கள் எம்சிசி ஒப்பந்தத்தில்  கைச்சாத்திடுவதன் மூலம் மீளவும் தம்மை தேச பக்தர்களாக நிலைநிறுத்துகிறார்கள்.

முரண்பாடுகளின் மூலக் கூறுதான் அரசியல் என்பதற்கு இவர்களை விட வேறு ஆதாரம் எதுவும் நமக்குத் தேவையில்லை

வாழ்க தேச பக்தி!

வாழ்க ஜனநாயகம்!!

About the author

Administrator

Leave a Comment