உலக செய்திகள் சர்வதேசம்

பொஸ்னியா : செரப்ரேனிகா இனப்படுகொலையின் 25 ஆண்டு துயர நினைவு

Written by Administrator

பொஸ்னியாவின் செரப்ரேனிகா நகரில் சுமார் 8000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு ஜூலை 11 உடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் பொஸ்னிய முஸ்லிம்கள் செரப்ரேனிகா இனப்படுகொலையை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

1995 ஜூலை 11 இல் சேர்பிய இராணுவம் செரப்ரேனிகா நகரை முற்றுகையிட்டு, ஆண்களையும் குழந்தைகளையும் குரூரமாகக் கொன்று குவித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நிகழ்ந்த மிகப் பெரிய இனப்படுகொலை இதுவாகும். 1990 களில் பொஸ்னியா ஹெஸகோவினா ஐ.நா. பாதுகாப்பின் கீழ் இருந்த வேளையிலேயே சேர்பிய இராணுவம் இவ் இனச் சுத்திகரிப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட 8000 முஸ்லிம்களில் 6900 பேரின் உடல் எச்சங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது அடையாளமும் இனம் காணப்பட்டுள்ளது. 80 பொது மயானங்களில் அவர்களது ஜனாஸாக்கள் அடக்கப்பட்டுள்ளன.

1992 முதல் 1995 வரை சேர்பிய இராணுவம் பொஸ்னிய, குரோஷிய இன முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தில் சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதில் கிழக்கு பொஸ்னிய நகரான செரப்ரேனிகாவில் இடம்பெற்ற இனப் படுகொலையில் ஒரே நாளில் 8000 முஸ்லிம்களை சேர்பிய இராணுவம் சுட்டுக் கொன்றது. இப்படுகொலைகளை நடத்திய ரடோவான் கரட்சிக் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

கடந்த 25 ஆண்டுகளாக முஸ்லிம்கள் செரப்ரேனிகா மயான பூமியை தரிசித்து வருகின்றனர். நீதி அவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. பொஸ்னிய அரசாங்கம் சேர்பிய இராணுவத்தை எதிர்த்துப் போராடுவதற்கு ஆயுதம் வேண்டியபோதும் அவர்களுக்கு அது வழங்கப்படவில்லை. ஐ.நா. சர்வதேச பாதுகாப்புப் படையின் பிரசன்னத்தின் முன்பாகவே இத்துணை படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டமை ஐரோப்பிய நாடுகளின் மனித உரிமை தொடர்பான இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக் காட்டுவதாக பொஸ்னியாவுக்கான அல்ஜஸீரா செய்தியாளர் தாரிக் துர்மிசவிக் குறிப்பிடுகின்றார்.

இப்படுகொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதுவரை முறையான கணிப்புக்கு உட்படவில்லை. ஐரோப்பாவின் இதயத்திலிருந்து இஸ்லாத்தை துடைத்தழிப்பதே இந்த இனப்படு கொலைகளின் நோக்கமாக இருந்தது என்றும் அதனாலேயே ஐரோப்பிய சமூகம் பராமுகமாக இருந்தது எனவும் சனிக்கிழமை இடம்பெற்ற நினைவு வைபவத்தில் முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று முதலைக் கண்ணீர் வடிக்கும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அன்று அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மண்ணில் நிகழ்ந்த மிகக் கொடூரமான இனப்படுகொலை இதுவாகும். எனினும், பொஸ்னிய முஸ்லிம்களுக்கு 25 ஆண்டுகள் கடந்தும் நீதி கிட்டவில்லை. அப்போது சேர்பிய இராணுவத்திற்குத் தலைமை தாங்கிய ரெட்கோ மிலாடிக் இன்றும் ஒரு ஹீரோவாகவே பார்க்கப்படுகிறார். 2017 இல் போர்க் குற்றங்களுக்காக அவர் வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால், மேன்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்துள்ள மிலாடிக் இன்னும் சுதந்திரமாக சுற்றி வருகிறார்.

ரடோவான் கரட்சிக், ஹேக் சர்வதேச நீதிமன்றத்தில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளார். அவர்களுக்கெதிரான வழக்கு இன்னும் முடியவில்லை. 8000 பேரின் உயிரைப் பலியெடுத்த இரண்டு பேருக்கு சிறைத் தண்டனை வழங்குவதுதான் நீதியா என்ற கேள்வியை செரப்ரேனிகாவின் மயான பூமி எழுப்பிக் கொண்டே இருக்கிறது. கால் நூற்றாண்டு கால அந்தக் கேள்விக்கு இன்னும் விடை இல்லை.

About the author

Administrator

Leave a Comment