உலக செய்திகள் சர்வதேசம்

கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் தொடரும் உய்குர் முஸ்லிம்களின் அவல நிலை

Written by Administrator

சீனாவில் வாழும் உய்குர் சிறுபான்மை முஸ்லிம்கள் சிங்கியாங் மாநிலத்தில் தொடர்ந்தும் சிறைவைக்கப்பட்டுள்ளமை உலகக் கவனத்தை ஈர்க்காதது ஏன்?

சீன அரசாங்கம் சுமார் ஒரு மில்லியன் முஸ்லிம்களை உலகப் பார்வையிலிருந்து தனிமைப்படுத்தி லொக் டவுன் பண்ணியுள்ளது. அவர்கள் மீது இனப்படுகொலை, இனப்பெருக்கக் கட்டுப்பாடு, உளவியல் ரீதியான சித்திர வதை என்று மிகக் கொடூரமான இன அழிப்பு நடவடிக்கைகளில் சீன அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்கு மீளக் கல்வியளிக்கும் முகாம்கள் என்று சீனா பெயரிட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலவும் தீவிரவாத நிலையை இல்லாதொழிப்பதே இதன் நோக்கம் என்று சீனா அறிவித்துள்ளது.

கடந்த வாரம் அமெரிக்க செனட் சபை உய்குர் முஸ்லிம்களின் உரிமை மீறல்கள் தொடர்பாக நான்கு உயர் மட்ட சீன அதிகாரிகள் மீது பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதித்துள்ளது. ஆயினும், கம்யூனிஸ அரசு செனட் சபை தீர்மானங்களுக்கு மசிவதாக இல்லை.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வணிக நடவடிக்கைகளில் காணப்பட்ட நெருக்கடி கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து முடிவுக்கு வந்துள்ள போதும் சீனாவின் மனித உரிமை மீறல்களை அமெரிக்கா தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றது.

இன்று உலகில் முஸ்லிமல்லாத பெரும்பான்மை நாடுகளில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் அரசியல் நோக்கங்களுக்காக கடும் அடக்குமுறைக்கும் இன அழிப்பிற்கும் உள்ளாக்கப்படுகின்றனர். அவர்களில் சீனாவின் உய்குர் முஸ்லிம்களும் மியன்மாரின் ரோஹிங்யர்களும் இந்தியாவின் அஸாமியர்களும் முக்கியமானவர்கள்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு 22 நாடுகள் ஒப்பமிட்டு அனுப்பி கடிதத்தில் உய்குர் முஸ்லிம்களின் வதைமுகாம்களை மூடுமாறு சீனாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு இந்நாடுகள் வேண்டுகோள் விடுத்தன. ஆனால், 37 நாடுகள் சீனாவின் கொள்கைகளை ஆதரித்து ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு எதிர்க் கடிதமொன்றை அனுப்பின. இந்நாடுகளில் அநேகமானவை முஸ்லிம் அறபு நாடுகள் என்பது வெட்கக் கேடானது.

தமது அரசியல் அதிகாரத்திற்காக அமெரிக்காவில் தங்கியிருக்கும் அறபு முஸ்லிம் நாடுகள் பொருளாதாரப் பிழைப்புக்காக சீனாவில் தங்கியுள்ளன. சீனா மனித உரிமை விவகாரத்தில் மிக மோசமான பதிவினைக் கொண்ட நாடாக மாறியுள்ளது. இத்தகைய சர்வதேச அசமந்தப் போக்கினால் உய்குர் முஸ்லிம்களின் நிலை மிகக் கவலைக் கிடமானதாக மாறி வருகின்றது. அவர்கள் குறித்து இந்த உலகம் காக்கும் மௌனம் மிகவும் குரூரமானது.

டிசம்பரில் மத்திய சீன நகரான வுஹானில் கொரோனா வைரஸ் பரவிய போது உய்குர் முஸ்லிம்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்வந்த சில மாதங்களில் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் அடைபட்டுக் கிடக்கும் வதை முகாம்களிலும் கொரோனா வைரஸ் பரவியது. பல்லாயிரக்கணக்கான உய்குர் முஸ்லிம்கள் அதனால் உயிரிழந்தனர். தொடர்ந்தும் கொரோனா அச்சுறுத்தலுக்கு அவர்கள் ஆளாகி வருகின்றனர்.

உலக வல்லரசுகள் அவர்களைக் கைவிட்டு விட்டன. அறபு முஸ்லிம் நாடுகளும் சீனாவை ஆதரித்து நிற்கின்றன. இந்நிலையில் சீன சிறுபான்மை முஸ்லிம்களான உய்குர் இனத்தவர்கள் கல்வி, சுகாதாரம், மருத்துவ உதவிகள், போஷாக்கான உணவுகள், போதுமானளவு கிடைக்காத நிலையில் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளதாக துருக்கிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனா நடத்தி வரும் வதை முகாம்களுக்கு எந்த ஊடகவியலாளரும் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், திரைமறைவுக்குப் பின்னால் சீன அரசாங்கம் உய்குர் முஸ்லிம்களை எப்படி நடத்துகின்றது என்ற விடயம் மொத்தமாகவே உலகப் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் ஆன்சாங் சூகி முன்வைக்கும் அதே போலி நியாயத்தை சீன ஜனாதிபதியும் தனது இனப்படுகொலைக்கு முன்னிறுத்துகிறார். அதாவது, உய்குர் முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதிகள் உள்ளனர் என்பதே அந்த நியாயமாகும். இதன் மூலம் மில்லியன் கணக்கான அப்பாவி உய்குர் முஸ்லிம்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் நிலை உருவாகியுள்ளது. அவர்கள் இஸ்லாத்தை தமது அடையாளமாகக் கொண்டுள்ளனர் என்பதே சீனா இத்துணை அட்டூழியங்களை அவர்கள் மீது கட்டவிழ்ப்பதற்குக் காரணமாகும்.

இரும்புத் திரைக்குப் பின்னால் ஆட்சி செய்யும் சீன கம்யூனிஸ அரசில் மதச்   சுதந்திரத்திற்கோ கலாசார சுதந்திரத்திற்கோ ஒரு துளியும் இடமில்லை என்பதற்கு உய்குர் முஸ்லிம்களை சீனா நடத்தி வரும் விதம் தெளிவான ஆதாரம் என்கிறார் இமாம் உமர் ஸுலைமான். இவர் ஓர் அமெரிக்க இஸ்லாமிய புத்திஜீவி ஆவார்.

உலகம் உய்குர் முஸ்லிம்கள் குறித்து விரைவான கவனத்தைக் குவிக்க வேண்டும். தவறும் தருணத்தில் உய்குர் முஸ்லிம்களை கொரோனா காவுகொண்டு விடும். சீனாவின் மனித உரிமை மீறல்களை இந்த உலகம் கண்டிப்பதற்கு முன்வர வேண்டும். அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதுவே முஸ்லிம் உலகின் ஆழ்ந்த எதிர்பார்ப்பு.

About the author

Administrator

Leave a Comment