மக்களை அலட்சியம் செய்யும் அரசியல்

17

நாடு எதிர்கொண்டுள்ள பேரபாயம் முற்றாக நீங்காத நிலையிலேயே பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்துவது என்ற இணக்கத்துடன் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டு ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் என்பது நாட்டின் நிறைவேற்று அதிகாரத்துக்கு மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதற்கான செயற்பாடு என்ற வகையில் இங்கு மக்களே முக்கியம் பெறுகிறார்கள். அரசு என்பதும் ஆட்சி என்பதும் அரசியல் என்பதும் மக்களின் நலனுக்காக இல்லையென்றால் அதை விடுத்து மக்களின் நலனிலேயே கவனம் செலுத்தப்பட வேண்டும்.

சுகாதார விதிமுறைகளைப் பேணி தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் சொல்லித் தான் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால் இந்தச் சுகாதார விதிமுறைகள் இதுவரை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்படவில்லை என அவரே கூறியிருக்கிறார்.

தேர்தல் நடத்தப்படுவதாக இருந்தால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கும் வழிகாட்டலின் கீழேயே நடத்தப்பட வேண்டும் என நிபந்தனை விதித்து சுகாதார சேவைகள் பணி்ப்பாளர் வழிகாட்டல்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கியிருந்தார். தேர்தல்கள் ஆணைக்குழு இதனை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடும்படி சுகாதார சேவைகள் பணிப்பாளரை வேண்டியிருந்தது. பின்னர் இது சட்டமாக வரையப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுவதற்கு முன்னர் இந்த வழிகாட்டலில் உள்ளடக்கப்பட வேண்டிய திருத்தங்களைக் குறிப்பிட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும் சுகாதார அமைச்சிலிருந்து இதுவரை அந்தத் திருத்தங்களை உள்ளடக்கிய வழிகாட்டல் வெளியிடப்படவில்லை எனத் தெரிய வருகிறது.

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் சுகாதார விதிமுறைகளைத் தாராளமாக மீறி நடைபெற்று வருகின்றன. நாத்தாண்டிய பிரதேசத்தில் இனம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் தனது வீடு வந்து சேர்ந்த பின்னரான காலப்பகுதியில் இரு பிரதான கட்சிகளினதும் இரு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அங்கு நடந்திருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்திருக்கிறார்.

மக்கள் உயிருக்கஞ்சி முகத்தில் கவசம் அணிந்து சமூக இடைவெளி பேணி கைகளை அடிக்கடி கழுவி தம்மையும் நாட்டையும் பாதுகாப்பதற்காக, அத்தியாவசியத் தேவைக்கும் வெளியில் இறங்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். மதஸ்தலங்களுக்கும் திருமண வைபவங்களுக்கும் கல்வியைப் பெறுவதற்கான வகுப்புக்களுக்கும் எண்ணிக்கைகள் வரையறுக்கப்பட்டு ஒழுங்குவிதிகள் எல்லாம் பேணப்படுகின்றன. இந்த நிலையில் அரசியல்வாதிகள் இஷ்டம் போல கூட்டம் நடத்துவதற்கு இடமளித்திருப்பதும் இதனைத் தடுப்பதற்குச் சட்டம் இல்லை எனச் சொல்வதும் மக்களை ஏமாற்றுவதாகவே இருக்கின்றது. சுகாதார விதிகளைச் சட்டமாக்காமல் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாதிருக்கின்ற நிலையில் இன்னும் மூன்று வாரங்களே தேர்தலுக்கு எஞ்சியிருக்கின்ற நிலையில் இது ஏன் சட்டமாக்கப்படாமல் இருக்கின்றது என்ற கேள்வி மக்களை வாக்களிக்கச் செய்வதில் இருந்தும் பின்னடைய வைக்கும் நிலைக்கு இட்டுச் செல்லக் கூடாது.

மீண்டுமொரு இரண்டாவது அலை பற்றிப் பேசப்படும் சூழலில் தேர்தலை நடத்துவதற்கான ஒரே ஒரு நிபந்தனையையும் நிறைவேற்றாமல் தேர்தலை நடத்துவதாக இருந்தால் தேசியப் பாதுகாப்பு குறி்த்த வாக்குறுதிகளுக்கு அர்த்தம் தேட வேண்டியேற்படுகிறது.

தேர்தல் காலத்தில் தேர்தல் சட்டம் மட்டும் தான் அமுலாக வேண்டும் என்பதில்லை. அமெரிக்க இனவெறிக்கெதிரான ஆர்ப்பாட்டத்தைக் கலைத்தது போல இந்தக் கூட்டங்களையும் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்திக் கலைத்து விடுவதற்கு பொலிசாரால் முடியாமலில்லை.

தேர்தல் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் குறைந்த பட்சம் தாம் மக்களை நேசிப்பவர்கள் என்பதை தேர்தல் காலங்களிலாவது எடுத்துக் காட்டுவதற்கு அரசியல்வாதிகள் முன்வர வேண்டாமா ?