பள்ளிகள் நமக்கெதற்கு

111
  • அபூ ஷாமில்

பள்ளிவாசலின் பரப்பளவுக்குள் அடங்குகின்ற எண்ணிக்கையில் தொழலாம் என்ற அறிவித்தல் வந்திருக்கின்றது. ஏற்கனவே ஒரு மீட்டர் விலகியிருந்து தொழுது வழக்கமாகிப் போயுள்ளதால் 100 பேர் வந்தாலே பள்ளிவாசலின் பரப்பளவு நிரம்பி விடுகிறது. அந்த வகையில் இந்த அறிவிப்பு பெரிய வித்தியாசத்தை தோற்றுவிக்கப் போவதில்லை. ஒன்றாய் பைக்கில் சேர்ந்து வந்து கூட்டுத் தொழுகையில் பிரிந்து தொழும் நிலைமை மாறும் வரை நமக்குள் புதிய இயல்பு பாதிப்புச் செலுத்திக் கொண்டுதானிருக்கும்.

புதிய இயல்புக்கு வருவதற்கான முதல் கட்டம் ஸல்லூ பீ புயூதிக்கும் அதானிலிருந்து நீங்கியது தான். ஓரிரண்டு மாதங்கள் வீடுகளை மஸ்ஜிதுகளாக்குங்கள் என்று தலைமைகள் வழிகாட்டின. ஐங்காலத் தொழுகைகளை மக்கள் வீடுகளில் தொழுதார்கள். எப்போதுமே கூட்டாகத் தொழ வேண்டிய ஜும்ஆத் தொழுகையை வீடுகளில் தொழுதார்கள். ரமழானின் கூட்டுத் தொழுகையான தராவீஹையும் கியாமுல் லைலையும் வீடுகளில் சேர்ந்து தொழுதார்கள். ஒன்று கூடுவது திடலிலா பள்ளியிலா என்று சண்டையே பிடித்து சமூகம் பிளவுபடுமளவு சேர்ந்து தொழுவது முக்கியப்படுத்தப்பட்ட பெருநாள் தொழுகையையே அக்கம் பக்கத்தாரோடு சேர்ந்து தொழுது முடித்துக் கொண்டார்கள்.

வீடுகள் அல்லாஹ்வை ஸுஜூது செய்யும் மஸ்ஜிதுகளாயின. இதுவே பழகி சிலவேளை வீட்டாரோடு தொழுவதில் இன்பமும் கண்டு பள்ளிவாசல்கள் சிலருக்கு மறந்தும் போயின, அதான் மட்டும் ஒலிக்காவிட்டால். படிப்படியாக மக்கள் புதிய இயல்புக்கு பழக்கப்படத் தொடங்கினார்கள். பள்ளிகள் நமக்கெதற்கு என்ற கேள்வி புதிதாக முளைக்கத் தொடங்கியது. உண்மையில் தொழுகைக்கான ஏற்பாடு தானே பள்ளிவாசல்களால் இவ்வளவு காலமும் செய்யப்பட்டு வந்திருக்கிறது !

பெருநாள் தொழுகை முடிந்து சில நாட்களில் பள்ளிவாசலின் டிரஸ்டி ஒருவர் ஜம்இய்யதுல் உலமாவுக்கு கோல் பண்ணி பள்ளிவாசல்கள் எப்போது திறக்கப்படும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் இதுவரைக்கும் இப்படிக் கேட்ட மிகச் சிலரில் நீங்களும் ஒருவர் என்று சொன்னதாக அந்த டிரஸ்டி கூறினார். அப்படியானால் மக்களுக்கு பள்ளிவாசல்கள் தேவைப்படவி்ல்லையா ?

எப்படித் தேவைப்படும் ? தொழுகைக்கு மட்டும் தான் பள்ளிவாசல்கள் என்றால் முஸ்லிமுக்கு பூமி முழுவதும் மஸ்ஜிது தான். தொழுகையை அவர்கள் எங்கென்றாலும் தொழுது கொள்வார்கள். அதற்கு இவ்வளவு பெரிய சுவர்களும் அலங்காரங்களும் அதனைப் பராமரிப்பதற்கென ஒரு கூட்டமும் ஆரவாரமும் எதுவும் அவசியமில்லை என்பதைத் தானே கொரோனா எடுத்துச் சொல்லியது ?

அப்படியானால் பள்ளிகள் எதற்கு ? அது தொழுவதற்கான இடம் மட்டுமல்ல. தொழுகையை நிலைநாட்டுவதற்கான இடம். முஸ்லிமுக்கும் முஸ்லிமல்லாதவருக்கும் இடையிலான வேறுபாடு தொழுகையென்றால் அனைவரையும் தொழுகின்ற முஸ்லிமாக மாற்ற வேண்டிய பணி பள்ளிவாசலுடையது. ஸ்பீக்கரில் அதானைச் சொல்லிவிட்டு தானாக வந்த கூட்டத்துக்கு தொழுகை நடத்துவது அல்ல.

சில நாடுகளில் அதான் சொன்னவுடன் கடைகளை மூடச் செய்து மக்களைத் தொழுகைக்காக விரட்டுவார்கள். இதனூடாக நகரின் பஸார் முழுவதும் பள்ளிவாசலின் கட்டுப்பாட்டில் இருப்பது அங்குள்ளவர்களுக்கு அடிக்கடி நினைவுறுத்தப்படுகிறது. நமது பள்ளிகள் மக்களைத் தொழுகையின் பால் அழைப்பதற்கு என்ன செய்கின்றன ? மஸ்ஜிதின் அடிப்படைப் பணியே இதுவென்றிருக்கும் போது மாலு இல்லாததை மாலு பனிஸ் என்று சொல்வது போலத் தான் பள்ளிவாசல்களை அழைக்க வேண்டியிருக்கிறது.

இஸ்லாமிய சமூகமொன்றை இந்த நாட்டில் பேரெடுக்கும் வண்ணம் கட்டியெழுப்புவதற்கு பள்ளிவாசல்களின் அடிப்படைப் பணி முறையாக நிறைவேற்றப்படுவது கட்டாயம். சமூகத்தைக் கட்டமைப்பதன் பல விடயங்கள் அதில் தங்கியிருக்கின்றன. உதாரணமாக உலகில் தலைவிரித்தாடும் போதைப் பொருள் பாவனைக்குரிய தீர்வினை பள்ளிவாசலினூடாக, தொழுகையினூடாகவே இஸ்லாம் நடைமுறைப்படுத்துகிறது. மது போதைக்குப் பழக்கப்பட்ட ஒருவருக்கு அந்தப் பழக்கத்தை இல்லாமல் செய்வதற்கான முதல் கட்டமாக போதையுடன் தொழுகைக்கு பள்ளிக்கு வர வேண்டாம் என்கிறது. இவர்கள் தொழுவதே இல்லையென்றால் எப்படி இஸ்லாமியத் தீர்வினை அமுல்படுத்துவது ? இதற்குத் தடையாக இருப்பது யார் ? அடிப்படைப் பணியையாவது செய்யாத பள்ளிவாசல் நிர்வாகங்கள் தானே ?

போதைக்கு அடிமையானவர்கள் பள்ளிவாசலிலிருந்து தூரமாகியிருக்கிறார்கள். தமது அடிப்படைப் பணியைச் செய்யாத அதிகாரப் போதை பிடித்தவர்கள் பள்ளிவாசல்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் போதை தான் பள்ளிவாசலுக்கு உள்ளும் வெளியிலும் சமூகத்தை ஆட்டிக் கொண்டிருக்கிறது. இதை எதனையுமே மாற்றாமல் ஆட்டம் காணும் சமூகத்தை தூக்கி நிறுத்துவற்கு முயற்சிப்பவர்கள் உண்மையில் சமூக மாற்றமொன்றை இந்த நாட்டில் செய்யவி்ல்லை.

சமூகம் உண்மையில் மாற வேண்டுமாக இருந்தால் பள்ளிவாசல்கள் தமது பணியைச் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் அதனது அடிப்படைப் பணியையாவது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பள்ளிவாசல் எனும் கட்டடங்களை இடித்து விட்டு ரேடியோ அதானில் ஸல்லூ பீ புயூத்திக்குமைத் தொடர்வதே சிறந்தது.