மாஸ்க் மக்ஸத்

201

பிஎச்ஐ நாளை ஜும்ஆவுக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் நாளை ஜும்ஆவுக்கு வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து முஸல்லாவும் எடுத்து விட்டு வரவேண்டும். எங்கட ஆக்கள் தான் சட்டத்த மதிக்கிறல்ல. அடுத்தவர்கள் எல்லம் ஒழுங்கா இருக்கிறாங்க. அதனால நாளக்கி மாஸ்க்கும் முஸல்லாவும் இல்லாம வந்தா திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று வியாழக்கிழமை இஷாத் தொழுகைக்குப் பின்னர் இமாம் அறிவித்து விட்டார்.

இமாம் மட்டுமல்ல நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தும் உயர் அதிகாரிகள் கூட இப்படித்தான் மக்களை அறிவுறுத்துகிறார்கள். பிடித்துக் கூட்டில் போட்டு விடுவோம், 14 நாட்கள் தனிமையில் வைப்போம், தண்டப் பணம் அறவிடுவோம் என்றெல்லாம் பயங்காட்டித் தான் சுகாதார விதிகளை நடைமுறைப்படுத்துகிறார்கள். இப்பொழுதெல்லாம் மக்களுக்கு கொரோனா பற்றிய அடிப்படை அறிவு எல்லாம் எக்ஸாமுக்குப் பிறகு பாடங்களை மறந்து விடுவது போல அடியோடு மறந்து போய்விட்டது. கொரோனா எந்தப் பரப்பில் எவ்வளவு நேரம் இருக்கும் எப்படியெல்லாம் பரவும் என்ற சமன்பாடுகள் மக்களுக்கு நினைவில்லை. மண்டையில் உறைந்து போயிருப்பதெல்லாம் குற்றம், சட்டம், பொலிஸ்…

இதனால் மக்கள் ட்ரபிக் பொலிஸைக் கண்டால் மட்டும் ஹெல்மட்டை மாட்டிக் கொள்வது போல பொலிசுக்கு மரியாதைக்காகவே மாஸ்க் அணியப் பழக்கப்பட்டிருக்கிறார்கள். யாரும் பார்க்கவில்லை என்றால் கைகழுவாமலே நுழைந்து விடுவார்கள். மக்களுக்கு பிரச்சினையின் பாரதூரத்தை உணர்த்தாமல் சட்டத்தை அமுல்படுத்துவதனால் வருகின்ற விளைவு இது தான்.

ஹோட்டலுக்குப் போனால் யாரோ குடித்த கப்பில் குடிக்கக் கூடாது என்பதற்காக பிளேன்டி, டீயை ஒரு முறை பாவித்து வீசக் கூடிய பிளாஸ்டிக் கப்பில் சட்டத்தை மதித்து தருவார்கள். ஆனால் தண்ணீர் குடிப்பதற்கு ஒரே குவளையையே மாற்றி மாற்றித் தருவார்கள். மாஸ்க்கும் அப்படித்தான். மாஸ்க் அணிவது மூக்குக்கா வாய்க்கா என்ற திண்டாட்டத்தில் மூக்குக் கீழால் மாஸ்க் அணிபவர்கள் நம்மில் ஏராளம் இருக்கிறார்கள்.

பள்ளிவாசல்களின் நிலைமையும் இப்படித்தான். தொழுகைக்காக வருபவர்கள் தமக்கென முஸல்லா எடுத்து வர வேண்டும் என்ற சட்டம் மக்களுக்குக் கஷ்டமாக இருப்பதாகக் கருதிய களுத்துறை மாவட்டப் பள்ளிவாசல் ஒன்று முன் ஸப்பில் வரிசையாக முஸல்லாவை விரித்தே வைத்திருக்கிறார்கள் என ஒரு தகவல். வருகிறவர்கள் எல்லாம் அதிலே தொழுது விட்டுச் செல்கிறார்கள்.  ஜனாஸாத் தொழுகையில் முன்பு போல் ஸப்புகளுக்கிடையில் இன்னொரு ஸப்பை நுழைத்து இப்பொழுதெல்லாம் தொழுவிப்பதில்லை. இயன்ற வரையில் சமூக இடைவெளி பேணி ஜனாஸாத் தொழுகை நடத்துவார்கள். ஜனாஸாவில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பதால் இது சாத்தியமாகிறது. ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டு முடிந்தததும் வரிசையாக நின்று ஸலாம் கொடுத்துக் கொள்வார்கள். வந்திருக்கின்ற அனைவரது கைகளும் அடுத்தவரது கைகளோடு கட்டாயம் கலக்கும். ஸப்பிலே பிரிந்து நின்ற கூட்டம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தோளோடு தோள் உரசி வேடிக்கை பார்க்கும்.

இப்படி ஏன் செய்கிறோம், எதற்குச் செய்கிறோம் என்ற விவஸ்தை இன்றி காரியங்கள் நடத்தப்பட்டு வருவதால் மக்கள் அவற்றின் உண்மையான நோக்கத்தை அறிந்து செயல்படுபவர்களாக இல்லாமலிருக்கிறார்கள். தலைமைகள் அதற்கு வழிகாட்டாத போது மக்களாகவே அதன் தாத்பரியத்தை உணர்ந்து நடக்கத் தலைப்பட்டால் மக்களைக் குறை கூறத் தொடங்கிவிடுவார்கள். குறித்த கட்டளையினூடாக வரவேண்டிய விளைவுகள் வராது. இதனால் குர்பான் என்றால் மாடுதான், பித்ரா என்றால் அரிசி தான் என்பது போன்ற கோட்பாட்டு விதிகள் மக்கள் மீது திணிக்கப்படும். மீறினால் தலைமைக்கு மாறு செய்வதாக குற்றம் சாட்டப்படும். இதனை விடுத்து தலைமைகளுக்கு மட்டுமன்றி மக்களுக்கும் சிந்திக்கும் திறன் இருக்கிறது என்பதை தலைமைகள் ஏற்றுக் கொள்ள முடியுமானால் சமூகத்தில் நல்ல பல விளைவுகளைக் காண முடியும்.

கொரோனா தொடர்பில் மக்களது எதிர்வினையும் இப்படித்தான் இருக்கிறது. கொரோனாவில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதை விட சட்டத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வது தான் மக்களின் குறிக்கோளாக இருந்தது. காரணம் கொரோனா என்பதே ஒரு குற்றமாகத் தான் நாட்டில் காட்டப்பட்டது. கொரோனா தொற்றியவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்பட்டார்கள். கொரோனா தொடர்பான செய்திகளைக் காட்டும் போது வெளிநாடுகளில் எல்லாம் நோயாளிகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதைக் காட்டும் போது நமது நாட்டு ஊடகங்கள் நோயாளியின் வீட்டையும் அங்கிருந்தவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தலுக்காக ஜீப்பில் ஏற்றி அழைத்துச் செல்லப்படுவதையுமே செய்திகளில் காட்டின. இதனால் மக்களின் கவனம் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதை விட சட்டத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதிலேயே அதிகமாக இருந்தது. இப்படிச் செய்வதனால் சட்டம் ஒழுங்காக அமுலாகியிருப்பதாக தற்காலிகமாகப் பெருமைப்படலாம். ஆனால் நோயிலிருந்து முழுமையான பாதுகாப்புக் கிடைக்காது.

இதே தவறை எமது இமாம்களும் விடக் கூடாது. நோய்க்கான காரணத்தை களைந்து விடுவதிலேயே அவர்களது கவனம் இருக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் கட்டளை விதித்து சட்டத்தை கடுமையாக்குவதை விட அவற்றுக்கான மக்ஸதை மக்களுக்குக் காட்டிக் கொடுக்க முடிந்தால் அது தான் நிலையான விளைவைத் தரும். அதை விடுத்து சட்டத்தைக் கையிலெடுத்து சட்டம்பியார் வேலை செய்யத் தொடங்கினால் மக்கள் தலைமைகளிடம் இருந்து வெருண்டோடுவதைத் தவிர வேறொன்றும் நடக்காது.