தேர்தலில் சமனான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்

32

கொரோனா அபாயத்துக்கு மத்தியிலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. தேர்தல் நெருங்க நெருங்க வேட்பாளர்கள் தமது பிரச்சாரங்களில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். இறுதி நேரத்தில் சூறாவளிப் பிரச்சாரம் செய்யக் காத்துக் கிடந்தவர்களும் தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில் தமது இறுதிக் கட்டப் பிரச்சாரங்களை ஆரம்பித்திருக்கிறார்கள். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் பெரும்பாலும் இறுதிக் கட்டப் பிரச்சாரங்கள் அரசியலின் போக்கை மாற்றிய சந்தர்ப்பங்கள் அனேகமாக உண்டு.

இம்முறைய பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனைத்தும் 03 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. அதுவரை வேட்பாளர்களும் கட்சிகளும் கூட்டங்களையும் பிரச்சாரங்களையும் நடத்த முடியும். இறுதி நேரம் வரை மக்கள் தமக்கான பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தபால் மூல வாக்காளர்களுக்கு இந்த வாய்ப்பு அற்றுப் போவதை அவதானிக்க முடிகிறது. அடுத்த மாதம் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்கள் இம்மாதம் 13 ஆம் திகதியே ஆரம்பித்து விட்டன. அரசாங்க ஊழியர்களில் ஒரு தொகுதியினர் அன்றைய தினம் வாக்களித்தனர்.

தேர்தலுக்கு 20 நாட்கள் இருக்கும் நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதால் இந்தத் தேதியில் தமது பிரச்சாரம் களைகட்டத் தொடங்க முன்னரே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது தமக்கிழைக்கப்பட்ட அநீதியாக வேட்பாளர்கள் கருதுகின்றனர். தபால் மூல வாக்களித்தவர்களுக்கும் ஏனைய வாக்காளர்களுக்கும் தமது பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்கான சமமான அவகாசம் வழங்கப்படுவது இதன் மூலம் மறுக்கப்படுகிறது. தேர்தலின் இறுதித் தினம் வரை சிலருக்கு தெரிவுக்கான அவகாசம் இருக்கையில் சிலர் அதற்கான வாய்ப்பில்லாமல் வாக்களித்து விட்டு வருகின்றனர். மறுபுறத்தில் பெரும்பான்மையான வாக்காளர்களுக்கு தேர்தலுக்கு ஒரு நாள் முன்பே தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் தபால் மூல வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடிக்கு அழைத்துச் செல்லப்படும் வரையில் பிரச்சாரம் நடக்கிறது. இது ஒருவகையில் ஒருசாராருக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும். இதனை நிவர்த்திப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு ஆவன செய்ய வேண்டும்.

தேர்தல் பிரச்சாரங்களுக்கு சமய வழிபாட்டுத் தலங்கள் பாவிக்கக் கூடாது என்றிருப்பது போல தேர்தல் பணிகளுக்கும் சமய வழிபாட்டுத் தலங்கள் பாவிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இனத்துவ அரசியல் கூர்மையடைந்து வரும் இலங்கையின் அரசியல் சூழலில் மத அடையாளங்கள் கூட தேர்தலில் வாக்களிப்பதில் செல்வாக்குச் செலுத்துவதற்கு வாய்ப்பிருக்கின்றது. அந்த வகையில் மத வழிபாட்டுத்தலங்கள் தேர்தல் பணிக்காகப் பயன்படுத்தப்படுவதும் மற்றுமொரு சாராருக்கு விளைவிக்கப்படும் அநீதியாக அமைய முடியும். அதனால் முடிந்தவரை பொதுவான இடங்கள் வாக்களிப்பு நிலையங்களாக அமைக்கப்படுவதில் கரிசனை செலுத்தப்பட வேண்டும். பொதுவான இடங்கள் இல்லாத பட்சத்தில் தற்காலிகக் கொட்டில்கள் அடைக்கப்பட்டாவது தேர்தலை நடத்த முடியுமென்றிருந்தால் அது நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்குப் பலம் சேர்க்கும்.