மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் நாட்டின் அரசியல் எதிர்காலமும்

16
  • மாலிக் பத்ரி

தேர்தல் தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகின்றது. தேர்தல் நடவடிக்கைகளின்போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான விஷேட வர்த்தமானியும் வெளிவந்து விட்டது. தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகத்தை இந்த வர்த்தமானி வெளியீடு நீக்கி விட்டது என்றே கருத வேண்டியுள்ளது.

பொதுத் தேர்தல் ஒரு தொற்று நோய் நாட்டில் பரவிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நடைபெறப் போகின்றது என்பது ஊன்றிக் கவனிக்க வேண்டிய விடயமாகும். ஏனெனில், தேர்தலில் மக்கள் எந்தளவுக்கு வாக்களிக்கும் நிலையங்க ளுக்குச் செல்வார்கள் என்பது பெருத்த கேள்வியாகும். இன்னொரு பக்கம் சுதந்திரமானதும் வெளிப்படைத் தன்மையுமுள்ள தேர்தலாக அது இருக்குமா என்பது மற்றொரு சந்தேகமாகும்.

இந்தத் தேர்தலில் அரசாங்கம் பெறுவதற்கு முனைப்புக் காட்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இலங்கையின் அரசியல் எதிர்காலத்தை எப்படி மாற்றப் போகின்றது என்பது மிகுந்த கரிசனைக்குரிய விடயமாகும்.

சிறுபான்மைச் சமூகங்களைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தல் முன்னொருபோதும் இல்லாத வகையில் தீர்மானகரமானதாக உள்ளதை யாரும் மறுத்துரைக்க முடியாது. சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் தலைவிதியோடு விளையாடும் ஆபத்து இந்தத் தேர்தலுக்குள் மறைந்திருக்கின்றது.

கொரோனாவுக்குப் பிந்திய இலங்கையில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதால் மக்கள் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அரச உயர் பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுவதனால் அரச சேவையில் உள்ளவர்களுக்கு மத்தியில் அரசாங்கத்தின் போக்குக் குறித்து அதிருப்தி அலையொன்று எழுந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மக்கள் அஞ்சுகின்ற ஒரு சூழலே நாட்டில் நீடிக்கின்றது.

இந்நிலைமைகளைக் கருத்திற் கொள்ளும் போது ஆளும் கட்சி அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை பெறுமா என்பது விவாதத்திற்குரிய விடயமாகும். காலம் தாழ்த்த தாழ்த்த மக்களின் அதிருப்தி அலைகள் அதிகரித்து வருவதை உணர்ந்துள்ள அரசாங்கம், எப்படியேனும் தேர்தலை அவசரமாக நடத்தி முடிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

நாட்டின் முன்னணி அரசியல் அவதானிகள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்துப்படி, அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் சாத்தியம் குறைவாகும். ஐ.தே.கட்சி பிளவுபட்டுள்ளதால் ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மொட்டுக் கட்சியினர் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளபோதும், மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவது சுதந்திரமான ஒரு தேர்தலில் சாத்தியமற்றது என்பதே பெரும்பான்மையான அரசியல் விற்பன்னர்களினதும் ஊடகவியலாளர்களினதும் கருத்தாக உள்ளது.

வாய்ப்புக்கேடாக, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மொட்டுக் கட்சி பெறுமாயின், அல்லது மாற்றுக் கட்சிக்காரர்களை கவர்ந்தேனும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை அரசு நிறுவுமாயின், அதன் எதிர்கால விளைவுகள் எப்படி இருக்கும் என்பது ஆய்வுக்குரியதாகும்.

தற்போதுள்ள ஜனாதிபதியும் பிரதமரும் தொடர்ந்தும் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருக்கும் நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை ஏன் கோருகின்றார்கள் என்பதை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும்.

19 ஆம் திருத்தம்

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றால் அரசாங்கம் செய்யவுள்ள முதல் வேலை 19 ஆம் திருத்தத்தில் கைவைப்பதாகும். கடந்த ரணில்-மைத்திரி நல்லாட்சியில் 19 ஆம் திருத்தத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதில் ஜனாதிபதியின் பதவிக் காலம் 05 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டதோடு, ஜனாதிபதி ஒருவர் இரு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்க முடியும் என்று மாற்றம் செய்யப்பட்டது. அதற்கு மேலதிகமாக சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படும் என்றும் 19 ஆம் திருத்தம் மாற்றத்திற்கு உள்ளானது.

1978 இன் அரசியல் யாப்பு ஜனாதிபதிக்கு எல்லை கடந்த அதிகாரங்களை வழங்குவதனால் நாடு பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளதாகவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மாற்றப்பட வேண்டும் எனவும் கடந்த காலங்களில் எழுப்பப்பட்ட நியாயமான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே 19 ஆம் திருத்தத்தில் இம்மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அவை நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாகவும் சட்டவாக்கத் துறையை (பாராளுமன்றத்தை) பலப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.

தற்போதைய அரசாங்கம் 1978 இல் இருந்தது போன்று மீளவும் ஒற்றை நபரின் கையில் அத்தனை அதிகாரங்களையும் குவிக்கும் வகையில் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட 19 ஆம் திருத்தத்தை தலைகீழாய் மாற்ற முனைகிறது. இது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும்.

எம்சிசி ஒப்பந்தம்

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றால் தற்போதைய அரசியல் அமைப்பில் தாம் விரும்புவது போன்ற மாற்றங்கள் அனைத்தையும் இலகுவாகக் கொண்டு வரலாம். எம்சிசி ஒப்பந்தத்தின் சில ஷரத்துகள் அரசியலமைப்பு மாற்றத்தை வேண்டி நிற்பவை. அம்மாற்றங்களினூடே அரசு எம்சிசி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது நிச்சயம்.

ஏனெனில், இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் பட்டியலிலிருந்து குறைவருமானம் பெறும் நாடுகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. உலக வங்கி நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கவனத்திற் கொண்டு இலங்கையை இவ்வாறு நிரல்படுத்தியுள்ளது. வெளிநாட்டு நிதியுதவிகள் இன்றி நாட்டை முன்கொண்டு செல்வது பாரிய சவாலாகும்.

இதனால், 480 மில்லியன் டொலர் அமெரிக்காவின் நிதியுதவியை அரசு இழப்பதற்கு முடிவு செய்யாது. ஆக, மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் மற்றொரு விளைவு எம்சிசி ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைச்சாத்திடுவதாகும்.

தேர்தல் முறையில் மாற்றம்

நாட்டில் பெரும்பான்மை இனத்தவர்களின் அரசாங்கமொன்றை நிறுவியுள்ளதாகக் கூறி வரும் மொட்டுக் கட்சியினர் எதிர்காலத்தில் தொடர்ந்தும் அவ்வாறானதோர் அரசாங்கம் நீடிக்கும் என்று சூளுரைத்து வருகின்றனர்.

சிறுபான்மைக் கட்சிகளின் பங்கேற்பு இல்லாத தனிப்பெரும் சிங்கள பௌத்த பாராளுமன்றத்தையே அவர்கள் பெரும்பான்மை மக்களுக்கு பரிந்துரைக்கின்றனர். இதற்கு ஒரு நீண்டகால மூலோபாயம் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை யாப்பு ரீதியில் குறைப்பதற்கான திருத்தங்களைச் செய்வதாகும்.

அந்த வகையில் 1989 பாராளுமன்றத் தேர்தலில் இருந்து இன்று வரை நடைமுறையிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் சிறுபான்மைக் கட்சிகள் தமது இன விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதி நிதிகளைப் பெற்று வருகின்றனர். அது அச்சமூகங்களின் பேரம் பேசும் ஆற்றலுக்கும் பாராளுமன்ற அரசியல் பங்கேற்புக்கும் சாதகமாக உள்ளது.

இந்நிலையை மாற்றி, கலப்புத் தேர்தல் முறை ஒன்றினை அரசியல் யாப்பில் உள்ளடக்குவதன் மூலம் சிறுபான்மைக் கட்சிகளின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்து விட்டது. தேர்தல் மாவட்ட வெட்டுப் புள்ளியை அதிகரித்தால் இயல்பாகவே சிறுபான்மைக் கட்சிகள் வெட்டப்படும் விடும் என்பதை அவர்கள் உய்த்துணர்ந்து செயல்படுகின்றனர்.

இராணுவ மயமாக்கும்

இராணுவத்திற்கு முன்னுரிமை என்ற பெயரில் அரச நிருவாகத் துறையில் இராணுவ அதிகாரிகளை நியமிக்கும் படலம் ஏற்கனவே தொடங்கி விட்டது. 19 ஆம் திருத்தம் மாற்றப்பட்டு, ஜனதிபதியின் அதிகாரம் உச்சளவில் குவிக்கப்படும்போதுதான் விரும்புகின்ற எந்த இராணுவ அதிகாரியையும் சிவில் நிருவாகப் பதவிகளுக்கு நியமிக்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும். இதனால் போதிய கல்வித் தகைமையோடு சிவில் நிருவாக சேவைகளுக்கு ஆட்கள் அமர்த்தப்படுவது குறையக் கூடிய நிலைமை ஏற்படும்.

இன்னொரு புறம், இராணுவ அதிகாரிகளால் சிவில் நிருவாகத்தை முன்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். இவையெல்லாம் நாட்டின் ஜனநாயகத்தின் மீது விழும் பெரும் அடியாகவே இருக்கும்.

முஸ்லிம் சிறுபான்மை

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவது நாட்டிலுள்ள ஏனைய சிறுபான்மைச் சமூகங்களை விட முஸ்லிம்களுக்கே பெரும் அறைகூவலாக இருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. ஜூலை 14 இற்கு முன்னர் மத்ரஸாக்கள் அனைத்தையும் மூடி விடுவதாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என கண்டியில் கர்ச்சித்துக் கொண்டிருந்தார் ரத்ன தேரர். சமீபத்தில் அவர் எழுதிய நீளமான கட்டுரையொன்றிலும் இந்தக் கோரிக்கையை காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மத்ரஸாக்களே தீவிரவாதத்தை வளர்த்து வருவதாக அரசியல்வாதிகளும் பௌத்த மதகுருக்களும் இனவாத ஊடகங்களும் தொடர்ந்தும் பரப்புரை செய்துவருகின்றன. இந்நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை அரசாங்கம் பெற்றால் மத்ரஸா கல்வி முறைமைக்கு என்ன நேரும் என்பது பற்றி ஓர் அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் நிலவுகின்றது.

குறைந்தபட்சம் மத்ரஸாக்களை சட்டபூர்வமாக மீளப் பதிவுசெய்தல் என்ற நடவடிக்கையின் பெயரில் அவற்றை இழுத்து மூடுவதற்கான அழுத்தத்தை அரசாங்கம் மறைமுகமாகப் பிரயோகிக்கக் கூடும்.

முஸ்லிம் தனியார் சட்டம்

மத, இன குரோதத்தை வளர்த்து வரும் ஊடகங்களும் மதவாதிகளும் சில அரசியல்வாதிகளும் நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளும் பொதுவான ஒரே சட்டத்தின் கீழ் ஆளப்பட வேண்டும் என்றும் முஸ்லிம் தனியார் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்கிக் கொள்தல் என்பது அரசுக்கு சவால் நிறைந்தது. ஏனெனில், வடக்குத் தமிழர்களுக்கு தேச வழமைச் சட்டம் இருப்பது போன்று கண்டிய சிங்களவர்களுக்கு கண்டியச் சட்டம் உள்ளது. ஆனால் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றால் அரசியல் அமைப்பில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரலாம். ஆக, முஸ்லிம் தனியார் சட்டமும் குறிப்பாக, விவாக-விவாகரத்துச் சட்டமும் அதனைத் தழுவிய காதி நீதிமன்ற நடைமுறைகளும் தொடர்ந்தும் அமுலில் இருக்குமா என்பது இன்னொரு கேள்வியாகும்.

முஸ்லிம் தனிப் பாடசாலைகள்

ஒவ்வொரு இனத்திற்கும் தனிப் பாடசாலைகள் அமைந்திருப்பது இனப் பிளவுகளுக்கு வழிகோலுகின்றது என்ற ஒரு பிழையான கருத்தை ஆளும் தரப்பின் சில அரசியல்வாதிகள் கொண்டிருக்கின்றனர். இதற்கு மேல் இன ரீதியான பாடசாலைகள் உருவாக்கப் போவதில்லை என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

இதனால், முஸ்லிம்களின் கல்வித் தேவைகளுக்கு ஏற்பவும் மாணவர் தொகைக்கு ஏற்பவும் முஸ்லிம் தனிப் பாடசாலைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகுமோ என்ற அச்சமும் முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது.

இவ்வாறு அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது நாட்டின் தேசிய அரசியலிலும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட மாவட்டங்களிலும் தொகுதிகளிலும் முஸ்லிம்களின் வாக்குகளைத் சிதறடிப்பதற்கு ஏற்கனவே பல தந்திரோபாயங்களை அரசாங்கம் செய்துவருகின்றது.

அம்பாறை மாவட்டம் இதற்குச் சிறந்த உதாரணம். சிறுபான்மைச் சமூகங்களை தொடர்ந்தும் பெரும்பான்மை மக்களின் எதிரிகளாக நிலைநிறுத்தும் அரசியலே தமது பிழைப்பு வாதத்திற்கான ஒரே உத்தரவாதம் என்று ஆளுந் தரப்பு எண்ணுவதனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் அவர்களால் எந்த ஆட்டத்தையும் அரங்கேற்றலாம். ஆனால் அது நாட்டுக்கோ மக்களுக்கோ நலமானதாய் இருக்கப் போவதில்லை.