லிபியாவில் எகிப்தின் தலையீடு நெருக்கடியை மேலும் கூர்மைப்படுத்தும்

22
  • Dr. றவூப் ஸெய்ன் (Ph.D)

பழம் கோத்திரத் தலைவரான கலீபா ஹப்தர் லிபியப் பிரச்சினையில் எகிப்து இராணுவ ரீதியில் தலையீடு செய்ய வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கைக்கு எகிப்தின் ஜனாதிபதி ஸீஸி சாதகமாகப் பதில் வழங்கியுள்ளார். அவ்வாறான ஒரு நிலை ஏற்படுமாயின் லிபிய நெருக்கடி மேலும் சிக்கலடையும் என்று துருக்கிய ஜனாதிபதி அர்தூகான் எச்சரித்துள்ளார்.

கடந்த வாரம் திரிப்போலி அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்ட வான் மற்றும் தரைவழித் தாக்குதல்கள் மூலம் பெங்காஷியின் சட்டவிரோத இராணுவக் கும்பலை முக்கிய நகரங்களிலிருந்து பின்வாங்கச் செய்துள்ளது. லிபியாவில் நடந்து வரும் ஹப்தரின் ஆயுத கிளர்ச்சிக்கு அமீரகம் மற்றும் சவூதி என்பன ஆதரவளித்து வரும் நிலையிலேயே ஹப்தர் படை முக்கிய நகரங்களிலிருந்து பின்வாங்கியுள்ளது.

இந்தத் தோல்வியை ஈடுகட்டுவதற்கு ஹப்தர் ஸீஸியை உதவிக்கு அழைத்திருப்பது லிபியாவின் இருண்ட எதிர்காலத்திற்கான அடையாளம் என அங்காரா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏன் அவர்கள் குருட்டுத் தனமாகவும் விடாப் பிடியாகவும் ஒரு முரட்டுக் கும்பலுக்கு பணத்தையும் படையுதவிகளையும் தாரைவார்க்கின்றனர் என அர்தூகான் கேள்வியெழுப்பியுள்ளார்.

வட ஆபிரிக்க நாடாகிய லிபியாவில் கனிசமான அளவு பெற்றோலிய வளமும் எரிவாயுவும் உள்ளன. 40 ஆண்டுகளுக்கு மேலாக கேர்ணல் கடாபி அதன் ஆட்சியாளராக இருந்து வந்தார். அவரது ஆட்சியில் எந்தக் கோத்திரமும் ஆயுத ரீதியில் கிளர்ந்தெழாத வகையில் கடுமையான அடக்குமுறையைக் கையாண்டார். 2011 இல் லிபியாவில் ஏற்பட்ட அறபு வசந்தம் கடாபியின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அவரது ஆட்சியின் போது முறையான பொருளாதாரக் கொள்கைகள் இல்லாதபோதும் எண்ணெய் வளம் தேசிய வருமானத்தின் அச்சாணியாக விளங்கியது. நாட்டில் பேரளவிலான அரசியல் அமைதி நிலவியது.

கடாபிக்குப் பிந்திய லிபியாவில் அதன் பழைய காலனித்துவ சக்திகளும் சில அறபு நாடுகளும் எண்ணெய் வளத்தை குறிவைக்கத் தொடங்கினர். அதற்கான மூலோபாயங்களில் ஒன்றாக திரிப்போலி அரசாங்கத்திற்கு எதிரான உள்ளூர் ஆயுதக் கிளர்ச்சியொன்றை அவை ஊக்குவித்தன. அதற்குப் பொருத்தமான நபராக கலீபா ஹப்தர் தெரிவுசெய்யப்பட்டார்.

கடாபிக்குப் பிந்திய லிபியா ஒரு ஜனநாயக நாடாக மாறிவிடக் கூடாது. பிற அறபு நாடுகள் போல இராணுவ சர்வதிகாரம் அல்லது மன்னராட்சி போன்ற ஒன்று அங்கு நிலைக்க வேண்டும் என சூழவுள்ள அறபு நாடுகள் விரும்புகின்றன. இந்தப் பின்னணியிலேயே சவூதியும் அமீரகமும் ஹப்தரை ஆதரித்து வருகின்றன.

எகிப்தைப் பொறுத்தவரை அதன் தலையீட்டுக்கான நோக்கம் முற்றிலும் மாறுபட்டது. அந்நாட்டின் கஜானா கடும் ஊழல் மோசடிகளால் காலியாகக் கிடக்கின்றது. எகிப்தின் ஸீஸி கஜானாவை நிரப்புவதற்கு லிபியாவின் எண்ணெய் வளத்தை இலக்கு வைக்கின்றார். ஸீஸியும் ஹப்தரும் ஒரே இராணுவ மனப்பான்மையுள்ளவர்கள். ஸீஸிக்கு தேவைப்படுவது லபியாவின் பெற்றோலியம். ஹப்தருக்குத் தேவைப்படுவது லிபியாவின் அதிகாரம். இரண்டு சர்வதிகாரிகளும் இதற்காக வேண்டி லிபியாவின் அமைதியைக் குலைத்து ஆயுதக் கிளர்ச்சியைத் தீவிரப்படுத்துகின்றனர்.

இந்த யுத்தத்தில் எகிப்து தலையீடு செய்வது பிரச்சினையை மென்மேலும் சிக்கலாக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், பழைய காலனித்துவ நாடுகளான பிரான்ஸ், ரஷ்யா என்பன ஹப்தரை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்து வருகின்றன. ஜனநாயக ரீதியில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற திரிப்போலி அரசாங்கத்திற்கு எதிராக இந்நாடுகள் செயற்படுவதன் மூலம் இராணுவ ஆட்சியை ஆதரிப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதல்ல.

குறிப்பிட்ட இந்நாடுகள் தமக்கு வசதியான அரசியல், பொருளாதார, நோக்கங்களை வைத்து செயற்படுகின்றன. ஐக்கிய அமெரிக்கா எந்தப் பக்கம் நிற்கின்றது என்பது மங்கலாகவே உள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பெரும்பான்மையானவை திரிப்போலியைத் தளமாகக் கொண்ட, ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்தையே ஆதரிக்கின்றன.

நிலைமை இவ்வாறிருக்க, எகிப்து, அமீரகம் மற்றும் சவூதி என்பன விடாப் பிடியாக ஹப்தருக்குத் தேவையான படைப் பலத்தை ஆயுதங்களையும் விநியோகித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

லிபியாவின் அரசியல் இரண்டக நிலை வரலாற்றில் முன்பொருபோதும் இல்லாதவாறு சிக்கலடைந்து வருகின்றது. கிழக்கு லிபியாவின் முன்னாள் ஆட்சியாளர் கடாபியின் கோத்திரத்தைச் சேர்ந்த ஹப்தர் பலமான இராணுவப் படை யொன்றை இயக்கி வருகிறார். திரிப்போலியைத் தளமாகக் கொண்ட மற்றொரு அரசாங்கம் தனது சொந்த அரச படையோடு செயல்படுகின்றது. ஒரே நாட்டில் இரு இராணுவ அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் மோதலில் வெளிநாடுகளும் தத்தமது பங்கிற்கு தலையிட்டு வருகின்றன.

கடாபியின் பிறந்தகமான சிர்த்தேயிலுள்ள ஜுஸ்ரா எல்லைக் கோட்டை திரிப்போலி அரச படை தாண்டி முன்னேறினால் எகிப்திய இராணுவம் லிபியப் பிரச்சினையில் தலையீடு செய்யும் என்று எகிப்தின் இராணுவ ஆட்சியாளர் அப்துல் பத்தாஹ் ஸீஸி அறிவித்துள்ளார். துருக்கியின் வான் வழி ஆதரவின் மூலமே திரிப்போலி அரசாங்கம் ஸ்திரமாக நிலைத்து நிற்கின்றது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். துருக்கி மாத்திரமே திரிப்போலி அரசாங்கத்திற்கு மானசீக ரீதியாகவும் படையுதவி அடிப்படையிலும் ஆதரவளிக்கின்றது.

லிபியப் பிரச்சினையில் தலையீடு செய்யும் சில நாடுகள் லிபியாவுக்கான ஆயுத ஏற்றுமதியைத் தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அது பெங்காஷி அரசுக்கான ஆயுத ஏற்றுமதியா, திரிப்போலி அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதத் தடையா என்பது தெளிவாக இல்லை. மொத்தமாக லிபியாவை மோதலில் ஈடுபட்டுள்ள எந்தத் தரப்புக்கும் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படக் கூடாது என்கிறது ஜேர்மன்.

தலையீடு செய்யும் அனைத்து நாடுகளும் பொதுவாக விட்டுள்ள மிகப் பெரிய அரசியல் தவறு யாதெனில், லிபியாவில் ஒரு சுதந்திரமானதும் வெளிப்படையானதுமான தேர்தலை ஊக்குவிக்க அவை தவறுகின்றன. ஓர் ஸ்திரமான, மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற ஜனநாயக அரசு லிபியாவில் நிலைகொள்வதற்கான வாய்ப்பை மேலைநாடுகள் ஏன் ஊக்குவிக்க மறுக்கின்றன என்பதுதான் இங்குள்ள மிகப் பெரிய கேள்வியாகும்.

தத்தமது அரசியல் பொருளாதார நோக்கங்களுக்கேற்ப மேலை நாடுகள் லிபியாவை ஓர் ஆயுத மோதல் களமாக மாற்றியுள்ளமையும் பக்கச்சார்பாக செயற்படுகின்றமையும் லிபியாவின் அரசியல் எதிர்காலம் குறித்த பாரிய சந்தேகத்தை எழுப்புகின்றன.

இக்கொதிப்பான தருணத்தில் எகிப்தின் இராணுவம் நேரடியாகக் களமிறங்குவது மிகப் பெரும் அழிவையும் அரசியல் நெருக்கடியையும் கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை.