இம்முறை தேர்தலில் வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகம்

57

மனாஸ் மக்கீன் – நிறைவேற்றுப் பணிப்பாளர் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான இயக்கம் – CaFFE

  • தேர்தல் கன்காணிப்பு என்ற அடிப்படையில் நீங்கள் இந்தத் தேர்தலை எப்படிப் பாக்கின்றீர்கள்? இதில் வன்முறைகள் எவ்வாறு ஏற்படுகின்றது?

இந்தத் தேர்தலில் வந்திருக்கின்ற விடயம்தான் 196 பேரை மாவட்ட ரீதியாக தேர்ந்தெடுப்பதற்காக வேண்டி 7458 பேர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவற்றில் நீண்டகாலமாகக் காணப்பட்ட பிரதான இரு கட்சிகள் தற்போது பல கட்சிகளாகப் பிரிந்துள்ளன. அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியினர்  இரண்டாகப் பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தி என்று ஒரு குழுவினரும், அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும் பகுதியினர் பிரிந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்று பிரிந்து செயற்படுகின்றமை முக்கியமாகும். அவ்வாறு பிரிந்திருந்தாலும் ஒவ்வொரு கட்சியினருக்கும் இடையிலுள்ள கொள்கைகள் கட்சிகளுக்குக் கட்சி வித்தியாசமாக இருக்கின்றது. இதில் பிரதானமாக வெறுப்பூட்டும் (Heart speech)  பேச்சுக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது. இவ்வாறான வெறுப்பூட்டும் பேச்சுக்கள் வன்முறைகளைத் தூண்டுவதோடு, பிரச்சினைகளை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

குறிப்பாக மாவட்ட ரீதியாக நோக்குகின்றபோது, அம்பாறை மாவட்டத்திலேயே அதிகமான கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மேலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக மற்றும் அமைச்சர்களாக இருந்தவர்களும் இத்தேர்தலில் பிரதான கட்சிகள் தவிர்ந்து ஏனைய கட்சிகளிலும் போட்டியிடுகின்றனர். உதாரணமாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தேசிய காங்கிரஸில் போட்டியிடுகிறார். அவ்வாறே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றது. மேலும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து போட்டியிடுகிறார்கள். அதே போல் ஹஸன் அலி போன்றோரும் தனியாகப் போட்டியிடுகின்றனர்.

இதன் அடிப்படையில் சமூக ஊடகங்களிலும், எங்களது தேர்தல் கண்காணிப்பாளர்களின் மூலமாக எமக்குக் கிடைத்த தகவலின் படி பிரதானமாக பொத்துவில், அக்கரைப்பற்று, சாய்ந்தமருது ஆகிய மூன்று பிரதேசங்களில் ஆகக் கூடுதலான வேட்பாளர்கள் வெறுப்பூட்டும் பேச்சுக்களைப் பேசுவதால் வன்முறைகள் வரலாம் என தேர்தல் திணைக்களத்திடம் அறிவித்திருந்தோம். அதேபோல், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஜனாப் தவத்தின் வாகனம் தாக்கப்பட்டிருந்தது. அத்தோடு, பொத்துவிலில் ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளரின் வீட்டைத் தாக்கியுள்ளனர். அதில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதான் இப்போதைய நிலவரம். இதில் பிரதானமாக வெறுப்பூட்டும் பேச்சுக்களை கட்டுப்படுத்தவில்லையாயின் இவ்வன்முறை அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதில் பிரதானமாக சமூக ஊடகங்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி செயற்படுகின்றமை பிரதான காரணமாக அமைகின்றது.

  • அம்பாறை மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வன்முறை செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன?

அம்பாறை மாவட்டத்தில் குறிப்பிட்ட மூன்று இடங்களோடு, கீழ்வரும் இடங்களில் வன்முறைகள் ஏற்படுவதற்கான விடயங்கள் அதிகமாக காணப்படுகின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியில் சமூக ஊடகங்களின் செயற்பாடு வெறுப்பூட்டும் செயற்பாட்டை அதிகரித்துள்ளது. அதேபோல், கிண்ணியாவில் ஒரே கட்சியில் முக்கிய அரசியல்வாதிகள் மூன்று பேர் போட்டியிடுகிறார்கள். அவர்கள் தங்களது விருப்பு வாக்குக்காக வெறுப்பூட்டும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றார்கள். அடுத்து, பொலன்னறுவை அங்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் எதிர்க்கிறார்கள். மேலும், குருனாகல், நாவலப்பிட்டி, தெனியாய ஆகிய பிரதேசங்களிலும் வன்முறைகள் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக காணப்படுகின்றன.

குறிப்பாக, விருப்பு வாக்குகளுக்கான போட்டிகளே அதிகமாக காணப்படுகின்றன. அதாவது. ஒரே கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தங்களது வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக அவரோடு சேர்ந்து போட்டியிடுகின்ற அடுத்த வேட்பாளரை கடுமையாகத் தாக்கிப் பேசுகிறார்கள். இச்செயற்பாடு வாக்காளர்களையே பாதிக்கும். அவர்கள் தேர்தல் முடிந்ததும் பாராளுமன்றம் சென்று ஒன்றாக இருக்கப் போகிறார்கள். ஆனால், சாதாரண பொது மக்கள் பாதிப்படையக் கூடும். எனவே, பொது மக்கள் மிகவும் அவதானமாகச் சிந்தித்து செயற்பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.

  • தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் செயற்பாடு எவ்வாறு இருக்கின்றது? குறிப்பாக வடமாகாணத்தில் வன்முறை செயற்பாடு எவ்வாறு உள்ளது?

எவ்வாறு ஏனைய பிரதேசங்களில் ஒரு கட்சியாக இருந்தவர்கள் பல கட்சியாக பிரிந்து விருப்பு வாக்குக்காக போட்டியிடுகிறார்களோ அவ்வாறே வடக்கிலும் காணப்படுகின்றது. முன்னர் தமிழ்த் தேசிய முன்னணி மாத்திரம் காணப்பட்டது. ஆனால், இப்போது தமிழ் தேசிய முன்னணியில் இருந்து பிரிந்து செயற்படுபவர்தான் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன். அவர் தனியான கட்சியில் போட்டியிடுகிறார். அதேபோல், கஜேந்திர குமார் போன்ற பலர் பிரிந்து செயற்படுவதால் இங்கும் வாக்குப் பிரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அங்கும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் அதிகமாக காணப்படுகின்றன.

ஆனால், வடக்கில் வன்முறைகள் குறைவாக காணப்பட்டாலும் சாதி ரீதியான பிரிவுகளினால் சில சமூகத்தவர்கள் பாதிப்படைகின்றனர். அவ்வாறே கத்தோலிக்க மற்றும் ஹிந்துக்கள் என்ற பிரச்சினை காணப்படுகின்றது. கத்தோலிக்க ஹிந்து பிரச்சினை மன்னாரிலேயே அதிகமாக காணப்படுகின்ற. இது குறித்த ஆதாரபூர்வமான பல தகவல்கள் எமக்குக் கிடைத்தன.

விஷேடமாக மன்னாரில் மடு தேவாலயப் பகுதியில் ஹிந்துக்களுக்குச் சொந்தமான சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே, ஹிந்து மக்கள் ஹிந்து வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது. அவ்வாறே, முசலிப் பெருமக்களே, மன்னார் வாக்காளப் பெருமக்களே என பல ஆதாரபூர்வமான விடயங்கள் எமக்குக் கிடைத்துள்ளன. இவைகள் யாவும் வெறுப்பூட்டும் பேச்சுக்களாகவே இருக்கின்றன. இது பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.

  • இவ்வாறான வன்முறைகளை பொது மக்கள் எங்கு தெரிவிக்கலாம்?

கபே நிறுவனத்திற்கு அறிவிக்கலாம். 0114341524, 0112866224 (Fax), caffesrilanka@gmail.com

  • பாதிக்கப்பட்ட பொது மக்கள் உங்களுக்கு அறிவித்தால் எப்படி அவர்களுக்கு நியாயம் கிடைக்கும்?

தேர்தல் கண்காணிப்பில் வன்முறை என்பது ஒரு பகுதி. அதேபோல், அரச  சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தல், வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்குதல்,  சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள், தாக்குதல் மற்றும் கட்டிடங்களைச் சேதமாக்குதல் ஆகியன தேர்தல் வன்முறைகளோடு சம்பந்தப்பட்டதாகும். இவைகளையே நாம் கண்காணிக்கிறோம். இவைகளை நாம் ஏன் கண்காணிக்கிறோம் என்றால்? எல்லா வேட்பாளர்களுக்கும், எல்லா கட்சிகளுக்கும், எல்லா சுயேச்சைக் குழுக்களுக்கும் சம அந்தஸ்தை வழங்கி நீதியான களத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே தேர்தல் கண்காணிப்பின் பிரதான நோக்கமாகும்.

மேலும், ஒரே கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் விருப்பு வாக்குக்காகப் போட்டியிடுகின்றபோது அவர்களுக்கும் சமமான களத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே மிகப் பிரதானமாகும்.

உதாரணமாக: ஒருவர் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்கிறார் என்றால், பொது மக்கள் கபே அமைப்புக்கு முறைப்பாடு செய்யலாம். அதனை நாம் எமது மாவட்ட கண்காணிப்பாளர் மூலம் உறுதிப்படுத்துவோம். அவ்வாறு உறுதிப்படுத்தியதன் பின்னர் அம்முறைப்பாட்டை குறித்த அரச சொத்தின் பிரதான அதிகாரிக்கு அனுப்புவோம். அதன் பின்னர் அம்முறைப்பாட்டை அம்மாவட்டத்தில் உள்ள தேர்தல் அலுவலருக்கு அனுப்புவோம். உடனே அம்மாவட்ட தேர்தல் அலுவலகர் குறித்த நபரை கைது செய்வார்.

அதே மாதிரிதான் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல். அதாவது, வாக்காளரின் இறுதி மனநிலையை மாற்றுவதற்காக வேண்டி லஞ்சம் கொடுத்தல் மிகப் பெரிய தேர்தல் வன்முறையாகும். அதாவது. ஒருவர் ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பதற்காக எண்ணியிருப்பார். ஆனால், தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் உங்களது வீட்டுக்கு வந்து உங்களது பிள்ளைக்கு வேலை எடுத்துத் தாரேன் அல்லது இன்ன வேலையை செய்து தாரேன் என்று கூறி முதற்கட்டமாக ஒரு குறிப்பிட்ட தொகையைத் தருகிறார். இது தேர்தல் விதியை மீறும் செயலாகும். இதனால், ஒழுக்க விழுமியங்களை உடைய, நல்ல பண்பாடுகளைக் கொண்ட பணமில்லாத வேட்பாளருக்கு இவ்வாறான செயற்பாடு பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும். இவ்வாறு இருந்தால் குறித்த செயற்பாடு முடிவதற்கு முன்னர் அறிவித்தால் அதனை உடனடியாக நிறுத்துவதற்கான வழிமுறைகள் காணப்படுகின்றன.

  • இத்தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் வருவார்களா? அவர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கும்?

பொதுவாக கபே அமைப்பு சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை எடுப்பதில்லை. ஆனால், பொதுநலவாய நாடுகளின் அமைப்பு மற்றும் ஐரோப்பிய யூனியன் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருவது வழமை. ஏனெனில், இவ்வாறு நடைபெறுகின்ற தேர்தல் நீதியானதும்  சுதந்திரமானதுமான தேர்தலாக நடைபெற்றதா என்பதை அவதானிப்பதற்காக சர்வதேச ரீதியாக அவர்கள் போவது வழமை. அவ்வாறு அவர்கள் வருவதால் நீதியும் சுதந்திரமுமான தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே, பல கட்டுப்பாடுகளும் நடைபெறுகின்றன. அத்தோடு, சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களின் வருகையினால் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் பக்கச் சார்பில்லாமல் நடப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

ஆனால், இம்முறை கொரோனா காரணமாக அதிகமான தேர்தல் கண்காணிப் பாளர்கள் வருவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றது. அதேபோல் தேர்தல் திணைக்களமும் அவர்களை அழைப்பதற்கான எந்த ஏற்பாடுகளையும் இதுவரை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால், சில தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் சிலரை அழைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். அவர்கள் வந்தோ வரவில்லையோ சர்வதேச கண்காணிப்பாளர்கள் உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மூலம் ஒவ்வொரு நாளும் தகவல்களைப் பெற்றுக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

  • கொரோனா காரணமாக கடந்த காலங்களில் வாக்களிப்பு நடைபெற்றது போல் இத்தேர்தலிலும் வாக்களிப்பு வீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?

பொதுவாக பொது மக்கள் இத்தேர்தலில் வாக்களிப்பதற்கு ஆர்வமாக உள்ளார்கள். அதேநேரம் தேர்தல் திணைக்களம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும்       சென்று வாக்களிக்கும் முறையை பரீட்சித்துப் பார்த்தார்கள். அதன் அடிப்படையில் தேர்தல் திணைக்களம் சிறந்த முறையில் தேர்தலை நடாத்தத் திட்டமிட்டுள்ளது. அதேநேரம், இப்போதைக்கு கொரோனா பயம் குறைந்துள்ளது. ஏனெனில், எவ்வித பயமும் இன்றி மக்கள் பயணிக்கின்றனர்.

இந்நிலையில் தேர்தல் திணைக்களம் மக்கள் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் பல புதிய உபாயங்களை ஏற்படுத்தியுள்ளார்கள். அதற்காக சுமார் 300 முதல் 400 கோடி ரூபாய்களை அதிகரித்துள்ளனர். ஏனெனில், ஒவ்வொரு மனிதனுக்கும் இனம், மதம், சாதி பார்க்காமல் இலவசமாகக் கிடைக்கின்ற ஜனநாயக உரிமையே வாக்களிப்பாகும். அதனை உரிய முறையில் வழங்குவதற்கு திணைக்களம் பாரிய முயற்சிகளை முன்னெடுக்கின்றது.

இவ்வாறு பல முயற்சிகளை முன்னெடுத்தாலும், வாக்காளர்களுக்கு கிடைக்கின்ற இலவச ஜனநாயக உரிமையை உரிய முறையில் பயன்படுத்தவில்லையாயின் நல்ல பிரதிநிதிகள், நல்ல சிந்தனை கொண்ட மனிதர்கள் தெரிவு செய்யப்படாமல், ஒழுக்க விழுமியங்கள் குறைந்த, படிப்பறிவு அற்றவர்கள் தெரிவுசெய்யப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.

  • வாக்கெண்ணும் செயற்பாடு வெளிப்படைத் தன்மையாக, நீதியாக நடைபெறுமா என்ற சந்தேகம் இருக்கின்றது. இதனை எவ்வாறு நோக்குகிறீர்கள்?

முன்னரை விட இப்போது வாக்கெண்ணும் செயற்பாடு மிகவும் வெளிப்படைத் தன்மையாக இருக்கின்றது. அதேபோல், தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அதனை அவதானிக்க முழு அதிகாரத்தையும் வழங்கியுள்ளார்கள். எனவே, வாக்காளர்கள் இதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

  • இறுதியாக வாக்காளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் பொய்யான செய்திகளைப் பரப்புவதை தவிர்ப்பதற்காக உள்ளூராட்சி உறுப்பினர்கள், மதகுருமார்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை அழைத்து இது குறித்து விழிப்புணர்வு செய்கிறோம். அதன் மூலம் நீதியும் சமாதானமுமான தேர்தலை நடாத்த முடியும்.

மேலும், தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் வாக்காளர் களுக்கு பொய்ப் பிரச்சாரங்கள் மற்றும் பொய் வாக்குறுதிகளை மேற்கொள்ள வேண்டாம் என வேட்பாளர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உதாரணமாக வடக்குக் கிழக்கை இணைப்போம், கரையோர மாகாணம் பெற்றுத் தருவோம், தோட்டத் தொழிலாளிகளுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுத் தருவோம் எனக் கூறுவது பொய்யான வாக்குறுதியாகும்.

அதேபோல், வாக்காளர்கள் வேட்பாளர்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களிக்காமல் நல்ல, நேர்மையான, சட்டத்தை மதிக்கின்ற வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது முக்கியமாகும். தற்போது கொரோனா நிலமை காணப்படுவதால் வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லாமல் இருந்திட வேண்டாம். ஏனெனில், தேர்தல் திணைக்களம் மேலதிகமாக பல கோடி ரூபாய்களை செலவழித்து வாக்களிப்பு நிலையங்களுக்கு சிறந்த பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி தங்களது ஜனநாயக உரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.