தேர்தல் முடியும் வரை ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நிறுத்துக

9

கருணாவுக்கு எதிரான மனு தள்ளுபடி          ரிஷாதுக்கு அழைப்பாணை

ரிஷாத்

பாராளுமன்றத் தேர்தல்கள் முடிவடையும் வரை தேர்தலில் போட்டியிடுபவர்களை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அழைப்பதை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த ஆணைக்குழு இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளது.

அடிக்கடி தான் விசாரணைக்கு அழைக்கப்படுவதன் ஊடாக தனது தேர்தல் பணிகள் பாதிக்கப்படுவதாக ரிஷாத் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.

இருந்த போதிலும் இம்மாதம் 27 ஆம் திகதி மீண்டும் சிஐடி முன்னிலையில் ஆஜராகும்படி ரிஷாதுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் உத்தரவி்ட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து வாக்கு மூலம் பெறுவதற்கு இரு தடவைகள் அழைக்கப்பட்ட போதும் சமுகம் தராமை தொடர்பில் சிஐடி கொழும்பு கோட்டை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ள நிலையிலேயே அவருக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. (ஆமிர்)

கருணா

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 3000 பேரை ஒரே இரவில் கொன்றதாகவும் (ஜூன் 20), தமிழ் அரசியல் தலைவர்களைக் கொலை செய்வதற்கு பிரபாகரன் தனக்கு உத்தரவிட்டதாகவும் தான் அதனைச் செய்திருந்தால் இன்று எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது (ஜூலை 03) எனவும் கருணா அம்மான் எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருந்த ரிட் மனு விசாரிக்கப்படாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடுவெல நகரசபையின் ஜாதிக ஹெல உருமய அங்கத்தவரும் டியூஷன் ஆசிரியருமான போசெத் கலஹேபதிரன என்பவரால் முன்வைக்கப்பட்ட இந்த மனுவில் கருணா அம்மான் தண்டனைக் கோவையின் 293,294 ஆவது விதிகளின் அடிப்படையிலும், பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் ஐசிசிபிஆர் சட்டங்களின் கீழும் அவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் முறையிட்டிருந்தார்.

தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களை தேர்தல் முடியும் வரை அழைத்து விசாரணை செய்வதை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவித்துள்ளதாக ஊடகங்களிலும் செய்தி வெளிவந்துள்ளதாலும், இது தொடர்பான பொலிஸ் விசாரணைகள் பூர்வாங்க கட்டத்தில் இருப்பதாகத் தெரியவருவதனாலும் இந்த மனுவை தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏஎச்எம் நவாஸ் தெரிவித்துள்ளார்.(லதீப்)