ஹஜ்ஜுப் பெருநாள் ஆகஸ்ட் 01 இல்

27

இம்முறைய ஹஜ்ஜுப் பெருநாளை ஆகஸ்ட் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று (21) நடைபெற்ற தலைப்பிறைபார்க்கும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வக்பு சபை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட மாநாட்டிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நேற்றைய தினம் நாட்டில் எந்தப் பகுதியிலும் தலைப்பிறை தென்படாததால் துல்கஃதா மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்து நாளைய (23) தினத்தை துல்ஹஜ் முதலாம் தினமாகக் கொள்வது எனவும், துல்ஹஜ் 10 ஆம் நாளாகிய ஆகஸ்ட் முதலாம் திகதி ஹஜ்ஜுப் பெருநாளுடைய தினமாக அமையும் எனவும் இந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை நாட்டின் எந்தப் பகுதியிலும் பிறை தென்படாததால் துல்கஃதாவை 30 ஆகப் பூர்த்தி செய்து ஹஜ்ஜுப் பெருநாளை ஜூலை 31 வெள்ளிக்கிழமை அனுஷ்டிப்பதற்கு சவூதி உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அந்த வகையில் அரபா தினம் ஜூலை 30 ஆம் திகதியாக அமையும் எனவும் சவூதி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இம்முறை 1000 பேருக்கு மட்டுமே ஹஜ் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஹஜ்ஜுக்கு வரும் யாத்திரிகர்கள் ஹஜ்ஜுக்கு முன்னும் ஹஜ் முடிந்த பின்னும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர். அந்த வகையில் இம்முறை ஹஜ் செய்பவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் 07 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.