உலக செய்திகள்

டெல்லியில் நான்கு பேரில் ஒருவருக்கு கொரோனா

Written by Administrator

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வசிப்பவர்களில் நான்கு பேரில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் எனப் பரவலாக எடுக்கப்பட்ட ஆண்டிபாடி பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

டெல்லியில், 21,387 பேரிடம் எடுக்கப்பட்ட கோவிட்-19 ‘ஆண்டிபாடி’ பரிசோதனையில் 23.48 சதவீதம் பேரின் உடலில் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு அணுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள எண்ணிக்கையை விட, டெல்லியில் கொரோனா தொற்று இன்னும் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி டெல்லியில் சுமார் 1,24,000 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. சுமார் 2 கோடி மக்கள் தொகை கொண்ட டெல்லியில், கொரோனா பாதிப்பு விகிதம் ஒரு சதவீதத்தை விடக் குறைவு.

டெல்லியின் மக்கள் தொகையில் 23.48 சதவீதம் என்றால், கிட்டத்தட்ட 46.5 லட்சம் பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

பெரும்பாலான மக்கள் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றைக் கொண்டிருக்கின்றனர் என அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் பல பகுதிகள் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள நிலையில், 23.48 சதவீதம் பேருக்குப் பாதிப்பு என்பது ஒப்பிட்டளவில் குறைவுதான் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில், ’’கணிசமான எண்ணிக்கையிலான மக்கள், தொற்று ஏற்படும் ஆபத்தில் உள்ளனர். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு மிக முக்கியம் என்றும், தொற்று எப்படிப் பரவியுள்ளது என்பதை அதிகாரிகள் உணர்ந்துகொள்ள இது உதவும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பரிசோதனை வசதிகளை மேம்படுத்தவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் சார்ந்த கொள்கைகளை வகுக்கவும் இந்த ஆய்வு அதிகாரிகளுக்கு உதவும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட டெல்லியில், கடந்த ஜூன் மாதம் மருத்துவமனை படுக்கையில் பற்றாக்குறை ஏற்பட்டது.

அப்போது முதல் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டது. தினமும் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களாகத் தினமும் 1,200 முதல் 1,600 புதிய தொற்றுகள் உறுதிப்படுத்தப்படுகிறது. ஜூன் மாத கடைசி வாரத்தில், டெல்லியில் தினமும் கிட்டதட்ட 3000 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

பரிசோதனை, கண்காணிப்பு, தனிமைப்படுத்துதல் போன்றவற்றால் டெல்லியில் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே போல இறப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

(BBC)

About the author

Administrator

Leave a Comment