பச்சை இனவாதத்திற்கும் வெறுப்புப் பிரச்சாரத்திற்கும் இடையில் தேர்தலுக்கு முகம் கொடுக்கும் முஸ்லிம் சமூகம்

16
  • மாலிக் பத்ரி

தேர்தலுக்கான தேதி அண்மித்து வரும் நிலையில் தேர்தல் களம் பிரச்சாரங்களால் சூடுபிடித்து வருகின்றது. கொரோனா சுகாதார நடைமுறைகள் அரச தரப்பு உள்ளிட்டு எதிர்க்கட்சிகளாலும் மீறப்பட்டு வருகின்றன. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஒரே வியூகம் வெறுப்புப் பேச்சு என்பதைப் போல் இந்தத் தேர்தலில் இனவாதத்தைப் பச்சையாகவே தூண்டும் செயற்பாடுகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன.

அரசாங்கத்திற்கு இத்தேர்தல் பல்வேறு வகையிலும் முக்கியமானது என்பதைப் போல சிறுபான்மைச் சமூகங்களின் இருப்புக்கும் கௌரவமான வாழ்விற்கும் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது.

தென்னிலங்கையில் சிங்கள வேட்பாளர்கள் முஸ்லிம் கிராமங்களுக்கு பிரச்சாரத்திற்கு வரும்போது ராஜபக்ஷர்களை கடுமையாக விமர்சித்து முஸ்லிம்களின் உணர்வுகளை உசுப்பி விடுவதன் மூலம் வெற்றி பெறத் தேவையான குறைநிரப்பு வாக்குகளைக் குறிவைக்கின்றனர். குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியினரும் டெலிபோன் தரப்பினரும் இதனையே செய்கின்றனர். தெற்கில் செல்லாக் காசாக உள்ள முஸ்லிம்கள் அவர்களது குறைநிரப்புக்கு பயன்படுகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் போன்று மொட்டுக் கட்சியினர் ஒவ்வொரு சிங்கள வீடாகச் சென்று பச்சை இனவாதத்தைப் பரப்புரை செய்தே வாக்குக் கேட்கின்றனர். மதுமாதவ அரவிந்த ஓர் உதாரணம். அவரது பிரச்சாரப் பரிவாரத்தில் உள்ள பெண்கள் கூட முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஜீஎல் பீரிஸ் தேர்தலுக்குப் பின்னர் அடிப்படை வாதத்தை ஒழிக்கும் வகையிலான புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் என்கிறார். பிரதமரின் கையாட்கள் மன்னர் புவனேகபாகுவின் அரசவையை உடைத்ததை நியாயப்படுத்துவதற்கு முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புப் பேச்சையே உத்தியாகக் கொள்கிறார். புவனேகபாகு தனது அரண்மனையில் வைத்திருந்த வைப்பாட்டிகளில் ஒருவராக கலேபண்டார எனப்படும் செய்யது இஸ்மாயிலின் தாயை இழிவுபடுத்துவதன் மூலம் சிங்கள வாக்குகளைக் கோருகிறார்.

விஜேதச ராஜபக்ஷ, உதய கம்மன்பில ஆகியோரும் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைப் பரப்பி வாக்குப் பிச்சை கேட்கின்றனர். தெற்கின் சிங்கள வாக்குகள் மூலமே ஜனாதிபதி தெரிவானார் என்பதைக் காட்டியது போல தெற்கின் தனிச் சிங்கள வாக்குகளால் புதிய சிங்கள பௌத்த பாராளுமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது என காட்ட வேண்டிய அரசியல் தேவை ராஜபக்ஷர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கான உத்தியாக வெறுப்புப் பிரச்சாரம் கையாளப்படுகின்றது.

இதிலுள்ள மிக ஆபத்தான பக்கம் என்னவென்றால் ஆளும் தரப்புக்கு குடைபிடிக்கும் ஊடகங்கள் அனைத்தும் போல இந்த வெறுப்புப் பிரச்சாரங்களையும் பேச்சுக்களையும் தீவிரமாகச் சந்தைப்படுத்துகின்றன. அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் என எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல.

சமீபத்தில் வெறுப்பூட்டும் பிரச்சாரங்களை பிரசுரிப்பதையோ ஒலி, ஒளி பரப்புவதையோ நிறுத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. பொதுத் தேர்தலின்போது அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வழிகாட்டல்களை அனைத்து ஊடகங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டியுள்ளது.

நாட்டில் காணப்படும் வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களிடையே வெறுப்பூட்டும், அவர்களை பொறுமையிழக்கச் செய்யும் வகையிலான பிரச்சாரங்களை ஒலி/ஒளி பரப்புதல், பிரசுரித்தல் தவிர்க்கப்பட வேண்டும் என ஆணைக்குழு அழுத்தமாகக் கூறியுள்ளது. இவ்வறிக்கையை ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 104 ஏ (5) உறுப்புரைக்கமைய ஜூன் மாதம் 03 ஆம் திகதி அதிவிஷேட வர்த்தமானி மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு ஊடகங்களுக்கான வழிகாட்டல் நெறிகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெற்கில் சிங்கள சமூகத்தை வெறுப்புப் பிரச்சாரத்தால் மொட்டுக் கட்சியினர் உசுப்பேத்துவது போல கிழக்கிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் சில தமிழ் அரசியல் வேட்பாளர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அவர்களுள் கருணா அம்மான் இப்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த கருணா அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்டு களமிறக்கப்பட்டு கோடீஸ்வரனின் பாராளுமன்ற உறுப்புரிமையை இல்லாதொழிப்பதற்கு சூழ்ச்சி நடப்பதாக கோடீஸ்வரன் கூறி வருகிறார். ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரான கருணாவின் பிரச்சாரம் மிகவும் விகாரமானது. வெறுப்பூட்டக்கூடியது. முஸ்லிம்களுக்கெதிராக மட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களை விழித்து கருணா உதிர்க்கும் வார்த்தைகள் அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையும் சண்டாளத் தனத்தையுமே வெளிக்காட்டுகின்றன.

தேர்தலுக்குப் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையூடாக தேர்தல் முறை சீர்திருத்தம் என்ற பெயரில் சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கான சதித்திட்டத்தை மேற்கொள்ள விஜேதாச ராஜபக்ஷ போன்றவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தலிலேயே முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கான சாத்தியமான சகல சூழ்ச்சிகரமான உத்திகளையும் ஆளும் தரப்பு கையாள்கின்றது.

அம்பாறை மாவட்டம் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டம். பாராளுமன்ற ஒதுக்கீட்டு ஆசனங்களில் பெரும்பாலானவற்றை முஸ்லிம்களே இம்மாவட்டத்தில் பெற்று வருகின்றனர். 1989 தேர்தலுக்குப் பின்னர் இதுவே நடந்து வந்தது. ஆனால் இன்று அம்பாறை மாவட்டத்தை வெற்றி கொள்வதற்கு மொட்டுக் கட்சியினர் பல்வேறு சூழ்ச்சிகளை அமுல்படுத்தியுள்ளனர். அதாவுல்லாவை அவரது குதிரைச் சின்னத்தில் களமிறக்கியுள்ள ஆளும் வர்க்கம், மயோன் முஸ்தபாவின் மகனையும் களமிறக்கி முஸ்லிம் வாக்குகளைச் சிதறடிக்கும் தந்திரத்தில் இறங்கியுள்ளது.

வன்னியிலும் புத்தளத்திலும் ஒன்றுசேர்ந்த ஹக்கீமும் ரிஷாதும் அம்பாறையில் இணைந்து கேட்க முடியாமல் போனதால் பாரிய அரசியல் தவறை இழைத்துள்ளனர். வாக்குகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் தேசிய காங்கிரஸிற்கும் முஸ்லிம் ஐக்கிய கூட்டமைப்புக்கும் என சிதறடிக்கப்படும் பேரத்து இம்மாவட்டத்தில் தலைதூக்கியுள்ளது. இதன் இறுதி விளைவு முஸ்லிம்களின் அரசியல் பலத்தை காயடிக்கத் துடிக்கும் பேரினவாதிகளின் கையை பலப்படுத்துவதாக இருக்கும்.

இம்முறை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மிகுந்த விவேகத்துடன் வாக்களிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே இம்மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பல நெருக்குவாரங்களை ஆளும் வர்க்கம் நிலுவையில் வைத்துள்ளது. பொத்துவில் முஹுது விகாரைக்கு உரியவை என எல்லையிடப்பட்டுள்ள முஸ்லிம்களின் காணி விவகாரம் அதில் குமுறிக் கொண்டே இருக்கிறது. இன்னும் பல காணிகள் தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகப் போகின்றன. இந்நிலையிலேயே ரிஷாதும் ஹக்கீமும் முஸ்லிம்களின் முக்கிய பிராந்தியமான அம்பாறையில் விவேகமில்லாத, சந்தர்ப்பவாத அரசியலை நடாத்தி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்குத் துணைபோயுள்ளனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இரண்டு மாவட்டங்களில் ஒன்று அம்பாறை (திகாமடுல்ல). அதன் முழு அதிகாரத்தை சிங்களவர்களின் கைகளுக்கு மாற்றுவதற்கு முஸ்லிம் சில்லறைத் தலைவர்கள் சிலர் முயற்சிப்பது பெரும் அரசியல் துரோகமாகும். விட்டுக் கொடுப்புடன் செயல்பட்டால் இந்த சமூகத் துரோகத்தை அவர்களால் தவிர்க்க முடியும்.

முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகளால் முஸ்லிம்களுக்குப் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. ஆனால், பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையைப் பாதுகாப்பது அவசியம் என்ற வகையில் இந்தக் கருத்து இங்கு முக்கியப்படுகின்றது. முஸ்லிம் கட்சிகளின் தொகை கடந்த தேர்தலை விடப் பெருகியிருப்பதோடு சுயேச்சை உட்பட வேட்பாளர்களின் தொகையும் முன்பை விட அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமான அரசியல் அறிகுறி அல்ல. இதன் மூலம் பேரினவாதிகளுக்கு இலாபம் கிடைக்கப் போகின்றது.

தேர்தல் மேடைகளில் வெறும் வாய் வீரம் பேசும் ஹக்கீம், ரிஷாத் போன்றவர்கள் உள்ளிட்டு அதாவுல்லா, பஷீர் சேகுதாவூத் அனைவரும் போல் சந்தர்ப்பவாத, சுயநல அரசியலைத்தான் முன்னெடுக்கின்றனர்.

ரணிலின் தலைமையிலான கூன்விழுந்த யானையை மரத்தில் கட்டுவதாக வாய் வீரம் பேசிய ஹக்கீம் அவரது அமைச்சுப் பதவியினால் முஸ்லிம்களுக்கு எதையும் சாதிக்கவில்லை. ரிஷாத் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இந்நிலையில், ஹஸன் அலியும் சேகுதாவூதும், அதாவுல்லாவும் ஹிஸ்புல்லாவும் மொட்டை ஆதரிப்பது தமது வசதிக்கான எதிர்நிலை அரசியலே. அதன் மூலம் வாக்குகள் சிலவற்றை சிதறடிக்கின்ற கைக்கூலிகளாக அவர்களால் இருக்க முடியும்.

கலாநிதி ஜயதேவ உயன்கொட கூறுவது போன்று பேரினவாத ஆளும் தரப்பினரால் முஸ்லிம் சமூகத்திற்குள் உருவாக்கப்பட்டுள்ள அடிவருடிகளே இவர்கள். இதே நிலைமை இன்று சக தமிழ் சிறுபான்மை மக்களிடையேயும் தோன்றியுள்ளது. உண்மையில் அது இயல்பாகத் தோன்றியதல்ல. திட்டமிட்டு உருவாக்கப்பட்டது துரதிஷ்டவசமாக முஸ்லிம் சமூகம் கூன் விழுந்த யானைக்கும், பச்சை இனவாதத்தை பகிரங்கமாகவே கொட்டும் மொட்டுக்கும் இடையில் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஒவ்வொரு தேர்தலையும் நிர்ணயகரமானது என்றும் தீர்மானிக்கக் கூடியது என்றும் கொக்கரிக்கும் எமது சில்லறை அரசியல் தலைவர்கள் அடிப்படையான அரசியல் உண்மையை வசதியாக மறந்தே போகின்றனர். முன்பை விட இந்தத் தேர்தல் முக்கியமானதுதான். ஆனால், ஒன்றுபட்டுச் செய்ய வேண்டியதைப் புறக்கணித்து விட்டு தேர்தல் மேடைகளில் வெறும் வாய்வீரம் பேசுவதனால் எதுவும் நிகழப் போவதில்லை.

முஸ்லிம் மக்கள்தான் அரசியல்வாதிகளைப் புரிந்துகொண்டு இந்தத் தேர்தலில் சரியான தெரிவை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சிவில் சமூக நிறுவனங்கள் கட்சிச் சார்பின்றி இதற்கான வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், எங்களுக்கும் இந்தத் தேர்தல் முக்கியமானதுதான்.