Features சர்வதேசம்

தலைவனின் மனக்கோளாறினால் தடுமாறி நிற்கும் வல்லரசு

Written by Administrator
  • Dr. றவூப் ஸெய்ன் (Ph.D)

எல்லோரும் அமர்நிலை எய்தும் நன்முறையை
அமெரிக்கா உலகிற்கு அளிக்கும் – ஆம்
அமெரிக்கா உலகிற்கு அளிக்கும் – ஆம்
அமெரிக்கா உலகிற்கு அளித்து விட்டது.

பொக்ஸ் நியுஸிற்கு சமீபத்தில் டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய பேட்டியில் சொன்ன வார்த்தைகள் அவரதும் அவரது வல்லரசினதும் மனோநிலை குறித்த பெரும் சர்ச்சையொன்றைக் கிளப்பியுள்ளது. “நாம் இரண்டு அழகான உலக யுத்தங்களை வெற்றி கொண்டோம்” என்பது ட்ரம்பின் வார்த்தை.

உலக யுத்தங்கள் ஏற்படுத்திய மனித அழிவும் சொத்தழிப்பும் இன்று கற்பனை கூடப் பண்ணி பார்க்க முடியாதவை. ஆனால், ட்ரம்ப் அதனை ‘அழகான’ என்று வர்ணிக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதியிடமிருந்து நாம் கேட்கும் இந்த குரூரமான சொல் நமக்குப் புதிதல்ல. ஒரு முன்னேற்றகரமான நாட்டின் ஜனாதிபதி உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் நாகரிகமாகவும் பண்பட்டதாகவும் இருக்க வேண்டும். பெரும் அழிவை ஏற்படுத்திய உலக யுத்தங்களை அழகானது என்று அவர் வர்ணித்திருப்பது ஒன்றில் அவரது இரத்தக் காட்டேறித் தனத்தை வெளிப்படுத்த வேண்டும், அல்லது வயது முதிர்ந்தால் ஏற்படக் கூடிய டென்மன்சியா எனப்படும் மனக்கோளாறை வெளிப்படுத்த வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் குறித்து நூலொன்றை எழுதிய அவருக்கு நெருக்கமாக இருந்த ஒருவர், அமெரிக்காவை நிருவகிக்கும் மன ஆரோக்கியம் ட்ரம்பிற்கு இல்லை என்பதை அந்நூலில் நிறுவியிருந்தார். அந்நூலின் கருத்துக்களை உண்மைப்படுத்துவது போன்று ட்ரம்பின் அன்றாட செயற்பாடுகளும் நிலைப்பாடுகளும் மாறி வருகின்றன.

கொரோனா தொற்றினால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட முதல் நாடு அமெரிக்கா. மரணங்களும் அங்கேதான் அதிகம். தொற்று தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்க, மாநில கவர்னர்கள் கட்டாயப்படுத்திய சுகாதார நடைமுறைகள் அனைத்தையும் ட்ரம்ப் கேலிக்கூத்தாக்கினார். முகக் கவசம் கட்டாயம் என்று 50 மாநிலங்களின் கவர்னர்களும் சட்டம் பிறப்பித்தபோது ட்ரம்ப் அதனை கட்டாயமானதல்ல என்று அறிவித்தார். பாடசாலைகளைத் திறக்குமாறு தொடர்ந்தும் அழுத்தி வருகிறார் அவர். லொக் டவுன் நடைமுறைகள் எதுவும் நாட்டுக்கு அவசியமில்லை என்கிறார் ட்ரம்ப்.

அவரது சொற்கள் ஒவ்வொன்றும் தறுதலையானவை, புறநடையானவை. அதிரடியான அவரது நிலைப்பாடுகள் யதார்த்தத்திற்கும் கள உண்மைகளுக்கும் முரணானவை. அவர் பதவிக்கு வந்ததிலிருந்து மேற்கொண்ட நடவடிக்கைகளும் எடுத்த சில நிலைப்பாடுகளும் அமெரிக்காவை மட்டுமன்றி முழு உலக மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

உலக சுகாதார அமையம் சீனாவுக்குச் சார்பாக இயங்குவதாகக் கூறி அதற்கு நிதி ஆதரவு வழங்குவதை சடுதியாக நிறுத்திக் கொண்டார். ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து விலகிக் கொண்டார். நேட்டோவிற்கான செலவீனத்தின் பெரும் பகுதியை நிறுத்திக் கொண்டார். காங்கிரஸ்காரர்களின் எதிர்ப்பையும் பெரும்பான்மையான அமெரிக்கர்களின் எதிர்ப்பையும் மீறி தான்தோன்றித்தனமாக முடிவுகளை அறிவித்த வண்ணம் உள்ளார்.

தற்போது சீனாவுடன் கடுமையாக முறுகிக் கொண்டிருக்கிறார். வுஹான் மாகாணத்துக்கான அமெரிக்கத் துணை தூதரகத்தை மூடியுள்ள ட்ரம்ப் அமெரிக்காவில் செயல்படும் சீனாவின் துணைத் தூதரகமொன்றையும் இழுத்து மூடியுள்ளார். அவர் பதவிக்கு வந்தவுடனேயே மத்திய கிழக்கு தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகள் அனைத்தும் இதுவரையான அமெரிக்க ஜனாதிபதிகளின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் நேர் முரணானவை.

இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராகப் பிரகடனம் செய்தார். சிரியாவுக்குச் சொந்தமான கோலான் குன்றுகளை இஸ்ரேலுக்குச் சொந்தமானவை என்று வாய் கூசாத பொய்களை அவிழ்த்து விட்டார். இன்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையை இஸ்ரேலுடன் இணைப்பதற்கு மைக் பொம்பியோ ஊடாக லைசன் வழங்கியுள்ளார்.

மத்திய கிழக்கு தொடர்பான ட்ரம்பின் கொள்கை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது. வரலாற்று உண்மைகளுக்குப் புறம்பானது. சித்த சுயாதீனம் கலங்கிய, பைத்தியக்காரத்தனமான இந்த நிலைப்பாடுகளுக்குப் பின்னால் உலக வல்லரசின் தலைவன் என்ற கர்வமும் இறுமாப்பும் மட்டுமே உள்ளது.

‘அழகானது’ என்ற சொல்லை ட்ரம்ப் எதிரும் புதிருமான ஒன்றுப் பின் ஒன்று முரண்பட்ட இடங்களில் கையாண்டு வருகிறார். பெல்ஜியம் ஒரு அழகான நகரம் என்று கூட்டத்தில் வைத்து ஒரு முறை அவர் குறிப்பிட்டபோது அங்கிருந்தவர்கள் குபீர் என்று எக்களம் கொட்டினார்கள். இது 2016 இல் நடந்தது. பெல்ஜியம் என்பது ஐரோப்பாவிலுள்ள ஒரு நாடு என்பதை அவரைப் பீடித்துள்ள டெமன்சியா மறைத்து விட்டது.

மெக்சிகோ நாட்டவர்கள் ஐக்கிய அமெரிக்க எல்லைப் புறமாக நாட்டுக்குள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கு அவர் எழுப்பிய சட்டவிரோத சுவரையும் ‘அழகான’ சுவர் என்றே அவர் வர்ணித்தார். 2017 இல் மத்திய கிழக்கிற்கு அவர் மேற்கொண்ட முதல் விஜயத்தின்போது பல பில்லியன் டொலர் பெறுமதியான அழகான ஆயுதங்களை கட்டாருக்கும் ஏனைய  செல்வந்த அறபு நாடுகளுக்கும் விற்பனை செய்தார். ஆனால், கட்டாருக்கு எதிராக சவூதியும் அமீரகமும் பஹ்ரைனும் பொருளாதாரத் தடை விதித்தபோது ட்ரம்ப் ‘அழகான’ அமைதி காத்தார். கட்டார் மீதான நெருக்குவாரங்களை நீக்குவதற்கு எதனையும் செய்யாமல் பிராந்தியத்தில் அழகான பதட்டத்தையும் குழப்பங்களையும் ஏற்படுத்தக் காரணமானார்.

ஈரானில் காசிம் சுலைமானியைப் படுகொலை செய்வதற்கு தனது இராணுவத் தளபதிகளுக்கும் அழகாகக் கட்டளையிட்ட ட்ரம்ப், ஈரானோடு போர் செய்வதற்கு இரண்டு ட்ரில்லியன் டொலர்கள் ஒதுக்கத் தயார் என்றார். 24 ஆம் திகதி ஈரானின் பயணிகள் விமானமொன்றை அமெரிக்கப் போர் விமானமொன்று உரசிச் சென்றதனால் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ட்ரம்ப் ஒரு முரடன் போன்றும் சண்டியன் போன்றுமே மத்திய கிழக்கில் செயல்படுகிறார்.

பொய்களையும் போலியான குற்றச்சாட்டுக்களையும் சொல்லிப் பழகிய அவரது நாவு சில நேரங்களில் அசாதாரணமாகப் பிறந்து அவரது மனோநிலையை காட்டிக் கொடுக்கின்றது. 2018 இல் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொன் உன் உடன் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட ட்ரம்ப் அழகான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதன் பின்னர் “வடகொரிய ஜனாதிபதி அணுவாயுதத்தைக் கைவிடத் தயாராகின்றார். எனவே, அமெரிக்கர்கள் இனி நிம்மதியாகத் தூங்க முடியும் என மனக்கோட்டை கட்டினார். ஆனால், கிம் ஜொன் ஏவுகணைப் பரிசோதனையை கைவிட்ட பாடில்லை.

சவூதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ட்ரம்பிற்கு அழகான பிறந்த நாள் வாழ்த்தொன்றை அனுப்பினார். அதில் ஜனநாயகப் போராளியும் உலகப் புகழ் பெற்ற பத்திரிகையாளருமான கஷூகியின் அழகான இரத்தக் கறை படிந்திருந்தது.

இன்று வெனிசுவேலாவில் ட்ரம்ப் அழகாகத் தலையிட்டு அந்நாட்டில் பெரும் அரசியல் குழப்பதை விளைவித்துக் கொண்டிருக்கிறார். ட்ரம்பின் அரசியல் முடிவுகளுக்கும் அவரது உள ஆரோக்கியத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பது கண்கூடு. 2016 தேர்தலில் அமெரிக்காவின் அறிவுஜீவிகளை முந்திக் கொண்டு வணிகர்கள் செய்த அரசியல் தவறின் விளைவுகளை அமெரிக்கர்கள் மட்டுமன்றி முழு உலகுமே அனுபவிக்க வேண்டிய துரதிஷ்டமான நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவோடு மருந்து மாத்திரைகள் குறித்து பகையைத் தோற்றிவித்த ட்ரம்ப், சீனாவுடன் முறுகி வருகிறார். உள்நாட்டில் பெரும்பான்மையான கவர்னர்கள் அவரைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். யார் என்ன சொன்னாலும் தலைவன் மனக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க வல்லரசுக் கனவை நீடிப்பது சாத்தியமில்லை என்ற உண்மையை இப்போது அமெரிக்கர்கள் வெகுவாக உணர்கின்றனர். இது நிச்சயம் எதிர்வரும் தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதில் துளியளவும் ஐயமில்லை. அதன் பின்னர் ட்ரம்ப் என்ற பாத்திரம் அமெரிக்க வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டு விடும்.

இன்றைய உலகச் சீரழிவுக்கு பிரதான காரணமாக உள்ள வல்லரசின் எதிர்காலம் சித்த சுயாதீனமுள்ள ஒருவரின் கையிலேயே தங்கியிருக்கிறது என்ற உண்மையை அமெரிக்கர்கள் இனியாவது புரிந்து செயல்படுவார்கள். இதுதான் அகிலத்தின் பிற நாட்டு மக்களது பெரிய எதிர்பார்ப்பாகும்.

About the author

Administrator

Leave a Comment