சோமாலியாவில் பிரதமர் பதவி நீக்கம்

17

கிழக்காபிரிக்க நாடான சோமாலியாவின் பிரதமர் ஹஸன் அலி கைர் அந்நாட்டு பாராளுமன்றத்தினால் பதவி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் மூலமே ஹஸன் அலி பதவி நீக்கப்பட்டார்.

நோர்வே மற்றும் சோமாலிய இரட்டைக் குடியுரிமை கொண்ட ஹஸன் அலி 2017 ஆம் ஆண்டிலிருந்து சோமாலியாவின் பிரதமராக இருந்து வந்தார். ஏற்கனவே அவர் சோமாலிய பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பதவி வகித்ததோடு நோர்வேயில் பள்ளிக்கூட ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

சோமாலியாவில் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அவர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும்.

1990 களுக்குப் பின்னர் சிவில் யுத்தத்திற்கு முகம் கொடுத்து வரும் இந்நாட்டில் பொருளாதார நெருக்கடி, வறுமை, தொற்று நோய், பட்டினிச் சாவுகள், பல்வேறு குழுக்களின் ஆயுத மோதல்கள் என்று நாடு பெருமளவு சீர்குலைந்துள்ளது. குறிப்பாக, நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

இந்நிலையில், பாராளுமன்றம் கொண்டு வந்த பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஜனாதிபதி முஹம்மத் அப்துல்லாஹ் முஹம்மத் ஆதரித்த நிலையிலேயே ஹஸன் அலி பதவி நீக்கப்பட்டுள்ளார். புதிய பிரதமர் மிக விரைவில் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.