கூட்டுக் குர்பான். சமூகத்தைக் காட்டும் கண்ணாடி

193
  • அபூ ஷாமில்

அல்லாஹ்வின் இல்லத்துக்கு வருமாறு நபி இப்ராஹீம் அறைகூவல் விடுத்த ஹஜ் நடந்ததோ இல்லையோ குர்பானுக்கான அறைகூவல்கள் இப்போதெல்லாம் இலங்கையில் அல்லாஹ்வின் இல்லங்களில் முழங்கத் தொடங்கியிருக்கின்றன.

புதிய இயல்பில் குர்பானி கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளுக்கும் தயாரான நிலையில் பள்ளிவாசல்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான வழிகாட்டல்களையும் வழிநடத்தல்களையும் வக்ப் சபை வழங்கியுள்ளது. இதன்படி உள்ளுர் அதிகாரிகளிடமிருந்து உரிய அனுமதி எழுத்து மூலம் பெறப்பட வேண்டும். பிரதேச பிஎச்ஐயிடம் அனுமதி பெற வேண்டும். தேவைப்பட்டால் பிரதேச பொலிஸிலிருந்து அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதியின் பிரதிகளை குர்பானி நடத்தும் போது அந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும். பிஎச்ஐயின் அறிவுரைப்படி கழிவுகளை அகற்ற வேண்டும். மொத்தமான குர்பானி வேலைகளும் அடுத்தவர்களுக்கும் அயலவர்களுக்கும் தொந்தரவில்லாமல் நடக்க வேண்டும். சுகாதார வழிகாட்டல்கள் அனைத்தும் பி்ன்பற்றப்பட வேண்டும் என்ற 07 விதமான வழிகாட்டல்களை வக்ப் சபைப் பணிப்பாளர் வழங்கியுள்ளார்.

இவற்றில் பெரும்பாலானவை வழமையானவைகளாக இருந்தாலும் தற்போதைய சூழலில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விடயங்களையும் இந்த வழிகாட்டல்கள் உள்ளடக்கியிருக்கின்றன. இத்தனை விடயங்களையும் நிறைவேற்றி குர்பானை மேற்கொள்வதற்கு பள்ளிவாசல்கள் தயாராகி கூட்டுக் குர்பானுக்கான அறிவித்தல்களையும் ஜும்ஆ தொழுகையில் இமாம் ஸலாம் கொடுத்தவுடனேயே எழுந்து நின்று அறிவித்து வருகிறார்கள். குர்பானியின் சிறப்பு பற்றிய போதனைகளையும் ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே முடுக்கி விட்டிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட வழிகாட்டல்களின் அடிப்படையில் குர்பானி கொடுப்பதற்காக பொலிஸ் நிலையம், பிஎச்ஐ, கிராம சேவகர் என்றெல்லாம் அலைந்து திரிந்து, குர்பான் கொடுக்குமளவு பசையிருப்பவர்களைத் தேடிச் சென்று அவர்களை தஷ்கீல் பண்ணி, ஒரு மாட்டுக்குத் தேவையான ஏழு பேரை எப்படியோ தேடிப்பிடித்து, நாட்டுப் புறத்தில் சென்று மாடு தேடி அவற்றை பள்ளிவாசல் வளவுக்குள் கட்டி தீனி கொடுத்து சாணி அள்ளி அறுத்து உரித்து பெருநாளென்றும் பாராமல் மாடுகளுடன் மல்லுக்கட்டி இல்லாத ஏச்சுப் பேச்சுக்களையும் தாங்கி பங்கிட்டு முடித்து பள்ளிவாசல் வளவு நாறாத வண்ணம் அதனைத் துப்புரவாக்கி கணக்குப் பார்த்து கணக்கறிக்கை வெளியிட்டு ஆடி அடங்கி …….. ஒரு பெரியதொரு வணக்கத்தை முடித்த திருப்தியுடன் பள்ளிவாசலில் இருந்து கொஞ்சம் நாளைக்கு ஒதுங்கி இருந்து… இப்படி ஏகப்பட்ட வேலைகளுடன் ஒரு வேளைக் கறிக்கான குர்பான் எனும் வணக்கம் நிறைவேற்றப்பட்டு முடிகிறது.

உண்மையில் இது ஒரு வணக்கம். சுன்னத்தான வணக்கம். ஹஜ்ஜைப் போல செய்யாமலும் விடலாம் என்கிற நிலையிலுள்ள ஒரு வணக்கம். கூட்டாகச் செய்வதற்கான சட்டங்களையெல்லாம் பார்ப்பதற்கு நேரமின்றி கூட்டாகச் செயற்படுத்துவதற்கான சிறப்புக்களையும் பொறுக்கியெடுத்து சமூகம் வலிந்து செய்கின்ற இபாதத் இது. இந்த வணக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு பந்தி வேலைகளையும் செய்வதற்கு இதனை முன்னெடுக்கும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தயாராகவே இருக்கிறார்கள். ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக அடுத்த வருடம் வரை காத்திருந்து நன்மைகளைக் கொள்ளை அடிக்கிறார்கள்.

ஒரு சுன்னத்தை நிறைவேற்றவே இவ்வளவு முயற்சியென்றால் பர்ளொன்றை நிறைவேற்றுவதற்கு மாஷா அல்லாஹ் இவர்கள் எவ்வளவு முயற்சித்திருப்பார்கள் ? அங்குதான் ஆச்சரியம் காத்திருக்கிறது. ஐந்து கடமைகளில் ஒன்றான ஸகாத்தைச் சேகரித்து நடைமுறைப்படுத்துவதற்கு எத்தனை பள்ளிவாசல்கள் முன்வந்திருக்கின்றன ? எத்தனை பள்ளிவாசல்களில் அதற்கான அறைகூவல் விடுக்கப்பட்டு ஸகாத் சேகரிக்கப்பட்டு ஜமாஅத்தாரின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன ?

பெரும்பாலான பள்ளிவாசல்கள் இதனைச் செய்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் கட்டாயமான சாரத்தை அவிழ்த்து உபரியான தலைப்பாகை கட்டும் வேலையைத் தான் பெரும்பாலும் செய்து கொண்டிருக்கிறார்கள். கடமையான ஸகாத்தை கூட்டாகச் செயற்படுத்துவதை விட்டு விட்டு சுன்னத்தான குர்பானை கூட்டாகக் கொடுப்பதிலேயே அவர்களது கவனம் இருக்கிறது. பள்ளிவாசல்களின் பெரும்பாலான பணிகள் இப்படித்தான் இருக்கின்றன.

மஸ்ஜித் என்பதற்கான ஸுஜூது செய்விக்கும் அடிப்படை வேலைகளைக் கூட அவர்கள் செய்வதில்லை. அதான் சொல்லுவார்கள். கேட்டவர்கள் சிலர் தாமாக வந்து தொழுது விட்டுச் செல்வார்கள். தலைப்புக் கிடைக்காத நாட்களில் கதீப்மார்கள் கொஞ்சம் தொழுகையைப் பற்றிப் பேசுவார்கள். தொழுகையை நிலைநாட்டுவது (தொழுவிப்பது அல்ல) என்ற அடிப்படைக் கடமையிலும் இவர்கள் இப்படித்தான் செயற்படுகிறார்கள்.

இதன் பிரதிபலிப்புத் தான் சமூகத்திலும் நிலவுகிறது. நிறைவேற்ற வேண்டிய அடிப்படைப் பணிகள் வெறுமனே விட்டு விடப்பட்டதன் பலனை சமூகத்தின் வீழ்ச்சி எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. இதே மனோபாவத்தில் தான் மக்கள் ஜனநாயகத் தேர்தலையும் எதிர் கொள்கிறார்கள். அடிப்படைக் கடமைகளையும் உரிமைகளையும் அப்படியே விட்டு விட்டு சுன்னத்தான கோரிக்கைகளுக்காக ஆலாய்ப் பறக்கிறார்கள்.

இந்தச் சமூகம் மாற வேண்டுமாக இருந்தால் சமூக மாற்றத்துக்கான தளமாக இருக்கும் பள்ளிவாசல்கள் சாரத்தை தலையில் கட்டும் வேலையிலிருந்து திருந்தி வர வேண்டும்.

அது வரை சமூகம் தலையை மூடி நிர்வாணமாகத் தான் இந்த நாட்டுக்குத் தெரியும்.