வாக்களிப்பில் ஆர்வத்தை அதிகரித்தல்

38

கொவிட் 19 அச்சம் மக்களை விட்டும் இன்னும் அகலாத நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மக்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் தேர்தலை நடத்தி முடிப்பது என்ற முடிவில் உரிய அதிகாரிகளும் அரசாங்கமும் ஈடுபட்டு வருவது தெரிகிறது.

ஆனால் இந்தளவு ஆரவாரமும் ஆர்வமும் மக்களிடையே இருப்பதாகத் தெரியவில்லை. மக்களுக்குத் தேர்தலில் நாட்டமில்லை, அவர்கள் கொவிட் 19 க்குப் பின்னரான பொருளாதார நெருக்கடி பற்றியே அதிகமாகச் சிந்திக்கிறார்கள் என தேர்தல் கண்காணிப்பு நிலையமொன்றின் கள அவதானம் தெரிவிக்கிறது. அப்படியானால் தேர்தல் யாருக்கு ?

மக்கள் பாராளுமன்றத்துக்குத் தமது பிரதிநிதிகளாக யாரை அனுப்பி வைப்பது என்பதைத் தேர்வதற்காகவே தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான செயற்பாட்டில் மக்கள் சுதந்திரமாக ஈடுபட முடியாத நிலை ஒன்று இருக்குமானால் அந்தத் தேர்தலுக்கான அர்த்தம் என்ன ? யாருக்காக இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது ? அது மக்களுக்காக அல்ல, மக்களுக்கு அதில் ஆர்வம் இல்லை என்றால் ஏன் தேர்தலை நடத்த வேண்டும் ?

தேர்தலை நடத்துவது என்ற முடிவிலும் சரி, தேர்தலை நடத்துவதற்கான செயற்பாட்டிலும் சரி மக்களைப் பற்றிய கவலைகள் கருத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையை மாற்றும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருக்கிறது. தேர்தலொன்றின் வெற்றி அசம்பாவிதங்கள் இன்றித் தேர்தல் நடந்தது என்பதை விட தேர்தல் செயற்பாட்டில் மக்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது என்பதிலேயே தங்கி இருக்கிறது. இதனை அடைந்து கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா சூழலில் தேர்தல் நடத்துவதற்கு 100 கோடி அளவில் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கிருமி நீக்கத்துக்காக அல்கஹோல் வாங்குவதற்கு மட்டும் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் செலவாவதாகச் சொல்லப்படுகிறது. மக்கள தொழிலை இழந்து கல்வியை இழந்து கஷ்டப்படும் வேளையில் இந்தளவு செலவழித்து ஒரு தேர்தல் தேவையா என்ற மனோபாவத்தில் மக்கள் ஒதுங்கியிருக்கிறார்கள். தேர்தலை நடத்துவது என்று முடிவு எடுத்தவர்கள் ஒப்புக்காகத் தேர்தலை நடத்தாமல் மக்களின் மனோபாவத்தை மாற்றி பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது.

தேர்தல் செயற்பாடுகளில் இருந்து மக்கள் இம்முறை தூரமாகியிருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் இந்தத் தேர்தலின் போது மக்களின் அபிமானம் பெற்றிருந்த இரு பிரதான கட்சிகளினதும் உண்மை முகத்தை மக்கள் தெரிந்து கொள்ள முடியுமாக இருந்தமையாகும்.

இந்நிலையில் இதற்கான தீர்வை மக்கள் தான் தேட வேண்டும். இதற்கு தேர்தல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி நிற்பது ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதாகவே அமையும். அதனையும் விட தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தமது எதிர்ப்பையும் அதிருப்தியையும் எடுத்துக் காட்டுவதே விவேகமானதாகும்.

அந்த வகையில் வெற்றிகரமான தேர்தலுக்கு வெற்றிகரமான வாக்களிப்பு வீதம் அவசியமாகும் என்ற வகையில் இம்முறைய பாராளுமன்றத் தேர்தலை வெற்றிகரமானதாக மாற்றுவதில் அதிகாரிகளுக்கும் வாக்காளர்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது.