மூன்றில் இரண்டுக்கு எதிராக வாக்களியுங்கள்

16
  • பேராசிரியர் தயான் ஜயதிலக

அரசுக்கு மூன்றிலிரண்டு கிடைத்தால் நாட்டுக்கு மீண்டெழ முடியாத அளவுக்கு பாரிய அழிவொன்று ஏற்படும். இரண்டு காரணங்களுக்காக நான் இதனைச் சொல்கிறேன். ஒன்று எமது அரசியல் வரலாறு. இரண்டாவது இந்த அரசாங்கத்தில் இருக்கும் நிலையான விஷேட கருத்துப் போக்குகளும் குணாம்சங்களும்.

இலங்கையில் முதலாவது மூன்றிலிரண்டு பலம் 1970 இல் ஸ்ரீமாவோ அம்மையாரின் அரசாங்கத்துக்குக் கிடைத்தது. இரண்டாவது 1977 இல் ஜேஆருக்குக் கிடைத்தது. இரண்டுமே இரத்தக் களரியில் தான் முடிவடைந்தது. 70 இன் ஸ்ரீமாவோ அரசாங்கம் மூன்றிலிரண்டுடன் அதிகாரத்துக்கு வந்தபோதும் ஐதேக அதிகாரத்தைக் கைவிடாமலிருந்ததை முன்னிறுத்தி ஜேவிபி ஆயுதரீதியாகப் பலம் பெற்றது. ஜேவிபி 70 இன் கூட்டரசாங்கத்தை ஆதரித்தது. இந்த நிலையில் தம்மை அதிகாரத்தில் நிலைநிறுத்திய இளைஞர் அணியுடன் ஐக்கிய மக்கள் முன்னணி பேச்சுவார்த்தை நடத்தியிருக்க முடியும். ஆனால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தந்த அகங்காரத்தினால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. மூன்றிலிரண்டு கிடைத்தால் இந்த அகங்காரம் வரும். இதனால் அவர்களை அழிக்க முடிவெடுத்தார்கள். இது தெற்கின் நிலை.

வடக்கில் 1970 தேர்தலில் தனியான அரசாங்கம் கேட்ட ஒரே வேட்பாளரும் தோல்வியடைந்தார். பெடரல் கட்சி சமஷ்டியை வேண்டியது. அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் 1976 ஆகும் போது பெடரல் கட்சி வட்டுக்கோட்டை மாநாட்டில் தனிராஜ்ஜியக் கோட்பாட்டைத் தழுவிக் கொண்டது. 1977 இல் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை உருவாக்கின. அவர்களது கோஷம் ஒன்றுதான். சுயாதீன சுயாதிக்க தமிழ் ஈழம் வேண்டும். 1977 இல் வட மாகாணம் முழுவதும் கிழக்கின் சில பகுதிகளிலும் இந்தக் கோஷம் வெற்றியடைந்தது.

இந்த மாற்றத்துக்கு தாக்கம் செலுத்தும் வகையில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் அரசியல் யாப்பொன்றைக் கொண்டு வந்தது. தமிழர் ஐக்கிய முன்னணித் தலைவர் செல்வநாயகம் ஆறு அம்சக் கோரிக்கை ஒன்றை முன்வைத்தமையே பிரச்சினையானது. அது தீவிரமயமாதல். பிரிவினைவாதம் அங்கு இருக்கவில்லை. அரசாங்கம் அதனை ஏறிட்டும் பார்க்கவில்லை. காரணம், அவர்களுக்கு மூன்றில் இரண்டு இருந்தது. அவர்களது கோரிக்கையை புறந்தள்ளிவிட்டு சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்தது. பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கி சோல்பரி யாப்பில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை உடைத்தெறிந்து ஏகாதிபத்தியவாத யாப்பைக் கொண்டு வந்தது. இதற்கெதிராக கறுப்புக் கொடி தூக்கிய தமிழ் இளைஞர்களை பல வருடங்களுக்கு சிறையிலடைத்தது. 1972 அரசியல் யாப்பின் குழந்தையாகவே புலிகள் அமைப்பு அந்த வருடத்தில் பிறந்தது.

77 வரையான பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் அரைப்பட்டினியிலேயே வாழ்ந்தார்கள். ஐக்கிய முன்னணியின் இந்தப் பொருளாதாரக் கொள்கையினால் தான் ஜேஆருக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மை கிடைத்தது. இதனால் தான் பொருளாதாரத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடிந்தது. இதே பெரும்பான்மைப் பலத்தை வைத்து காலத்தை ஓட்ட அரசாங்கம் எண்ணியதால் பிரிவினைவாதமும் தெற்கின் முதலாவது கிளர்ச்சியும் இந்தக் காலப்பிரிவில் தோன்றியது.

77க்குப் பின்னர் வந்த அரசாங்கம் அப்பட்டமான பொய்யொன்றை அடிப்படையாக வைத்து ஜேவிபியை தடை செய்தது. 1983 முற்பகுதியில் நடத்தப்பட வேண்டிய பாராளுமன்றத் தேர்தலை நடத்தாமல் வன்முறையும் ஏமாற்றும் நிறைந்த சர்வஜன வாக்கெடுப்பு 1982 இறுதியில் நடத்தப்பட்டது. திருமதி பண்டாரநாயக்கவின் பிரஜா உரிமையைப் பறித்து எதிர்க்கட்சி பலவீனப்படுத்தப்பட்டது. விஜயகுமாரதுங்க சிறையிலடைக்கப்பட்டார். பொதுத் தேர்தல் நடக்காததால் ஐதேக அறிமுகப்படுத்திய பொருளாதாரக் கொள்கை ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வுகள் வெளிப்படுத்தப்படுவதற்கான ஜனநாயக வெளியொன்று கிடைக்கவில்லை. இந்த வேளையில் சிரில் மத்தியூ போன்றவர்கள் இந்த எதிர்ப்பை இனவாதமாகத் திசை திருப்பி விட்டார்கள். இதனால் 83 ஜூலைக் கலவரம் உருவானது. இந்த வேளையில் தான் இந்தியாவின் ரோ உளவுச் சேவை பிரிவினைவாதிகளுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தது.

பின்னர் தெற்கின் கிளர்ச்சி வெடித்தது. இதற்கிடையில் இந்தியாவின் அமைதி காக்கும் படை வந்திறங்கியது. இவை அனைத்துமே ஆறில் ஐந்து பெரும்பான்மை வழங்கிய திமிரினாலேயே நடந்தது. இந்தத் தொடரில் 70 இலிருந்து மூன்றிலிரண்டு பெரும்பான்மை இரத்தக் களரியையே கொண்டு வந்திருக்கிறது. வடக்கிலும் கிளர்ச்சி. தெற்கிலும் கிளர்ச்சி. வெளிநாட்டுப் படைகளின் வரவு.

ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் செய்து வெவ்வேறான விளைவுகளை எதிர்பார்ப்பதுவே பைத்தியத்துக்கான வரைவிலக்கணம் என ஐன்ஸ்டீன் கூறுகிறார். இரண்டு முறை மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொடுத்து நடந்தவைகளைக் கண்டிருக்கிறோம். மூன்றாவது முறையும் அதையே செய்தால் அப்படி நடக்காது என்று சொல்பவர்கள் பைத்தியக்காரர்கள் மாத்திரம் தான். அடுத்தது எந்தக் கட்சியும் அப்படிக் கேட்பதும் இல்லை. இதற்கு முன்னரான இரு தடவைகளிலும் என்ன நடந்தது என்பது இந்த அரசாங்கத்துக்கும் தெரியும். இறுதியில் அரசாங்கம் நடத்தியவர்களுக்கும் கூட எந்த நன்மையும் விளையவில்லை. திருமதி பண்டாரநாயக்கவுக்கு மீண்டும் எப்போதுமே அதிகாரத்துக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. 17 வருடங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தது. மூன்றிலிரண்டு அதிகாரம் இருந்த வேளையிலான திமிரே அதற்குக் காரணம். ஐதேகவுக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கும், பிரேமதாசவின் ஜனரஞ்சகம் இல்லாதிருந்தால். ஐதேகவும் அதிகாரத்தை இழந்த பின்னர் 20 வருடங்கள் தூரமாகி இருக்க வேண்டி வந்தது. தமது நன்மைக்காக வேண்டிச் சிந்தித்தாலும் சுயபுத்தியுடன் எந்தக் கட்சிதான் மூன்றில் இரண்டு கேட்க முடியும் ?

அரசாங்கம் சொல்வது போல 19 ஐ இல்லாமல் செய்வதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கேட்பதற்கு தர்க்க ரீதியான நியாயங்கள் எதுவுமில்லை. 19 இல் திருத்தம் வேண்டுமென்றால் 13 இல் திருத்தம் கொண்டு வந்தது போல செய்து கொள்ளலாம். 19 ஐக் கொண்டு வந்ததும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அல்ல. 2015 இன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையில்லாத அரசாங்கம் மஹிந்த தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியே 19 க்கான பலத்தைப் பெற்றுக் கொண்டது. இந்த வகையில் முக்கியமான திருத்தங்களுக்காக பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அடுத்ததாக 19 ஐ இல்லாமல் செய்ய வேண்டுமென்றால் அதற்கு அப்போது மஹிந்த தரப்பு ஆதரவு வழங்கியது ஏன் ? மஹிந்தவின் ஆதரவுடன் தானே அனைவரும் 19 க்கு ஆதரவளித்தார்கள். கடும் இனவாதியான சரத் வீரசேகர மட்டும் தான் இதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச அனைவரும் 19க்கு சும்மா கை தூக்கவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து படித்து திருத்தங்களைக் கொண்டுவந்து தான் அவர்கள் இதற்கு ஆதரவளித்துக் கை தூக்கினார்கள். இது இவ்வளவு மோசமானதென்றால் ஏன் கைதூக்க வேண்டும் ? அன்று அது தவறல்ல என்றிருந்தால் இன்று எப்படித் தவறானதாக முடியும் ? இந்தக் கேள்வியை யாராவது கேட்க வேண்டும்.

தேர்தல் முறையில் மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்காகத் தான் ஆதரவளித்ததாகச் சொல்வதாக இருந்தால் எஞ்சியுள்ள இந்தப் பகுதியை அவர்களால் கொண்டு வர முடியும் தானே. அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவையில்லையே. கலந்தாலோசித்து 19 ஐக் கொண்டு வந்தது போல கொண்டு வர முடியும்.

2015 இன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரத்தில் இருத்துவதற்கு நான் முன்னின்று முயற்சித்தேன். 19 இன் காரணமாக மஹிந்தவுக்கு மீண்டும் ஜனாதிபதியாக முடியாத நிலை அப்போது இருந்தது. ஆனாலும் இந்தத் திருத்தத்தினால் பிரதமர் பதவி பலப்படுத்தப்பட்டது. நாங்கள் மஹிந்தவை பிரதமராக்கும் வேலைத்திட்டமொன்றையே முன்னெடுத்துச் சென்றோம். இந்தவகையில் மஹிந்த தற்பொழுது பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். இனி எதற்கு 19 ஐச் சுரண்டி அந்த அதிகாரத்தை இல்லாமலாக்கிக் கொள்ள வேண்டும் ? மஹிந்தவை பியூனாக வேலை செய்ய வைக்கும் அதிகாரம் கொண்ட பிரதமராகவாக்கவா முயற்சி எடுக்கப்படுகிறது ? 19 ஐச் சுரண்டி பலம் வாய்ந்த பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை கொண்டு வருவதாக ஏன் சொல்லப்படுகிறது ? இதன் இரகசியம் என்ன ?

தற்போதைய அரசாங்கத்தின் பலம், அதிகாரம் அனைத்தையும் இனவாத, சர்வாதிகாரக் குழுக்களே கைப்பற்றியிருக்கின்றன. அவர்களது வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி முறையை நிறைவேற்றதிகாரமுள்ளதாக மாற்ற வேண்டும். ஜேஆர் உருவாக்கியதையும் விட பலம் வாய்ந்த ஜனாதிபதி முறை வேண்டும். ஜேஆரின் ஜனாதிபதி முறையில் குறைந்த பட்சம் இரண்டு தடவைகளே ஜனாதிபதியாக முடியும் என்றாவது இருந்தது. மேலும் பலவந்தமாகவேனும் 1987 இல் 13 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தார். அதன் மூலம் ஏதோ ஒரு அளவில் அதிகாரத்தைப் பரவலாக்கினார். தற்போது 13 ஐயும் சுரண்டி அதிகாரத்தை மையத்திலேயே குவிப்பதற்கே முயற்சி எடுக்கப்படுகிறது. அதன் பின்னர் இலங்கையில் எப்போதுமே இருந்திராதவொரு சர்வாதிகாரமே நாட்டில் நிலவப் போகிறது. அதற்கு இராணுவ முகமொன்றும் இருப்பதை இப்பொழுது எம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

முன்னாள் மற்றும் இந்நாள் இராணுவ அதிகாரிகள், புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய தம்முடையதேயான பிரதமர் தலைமையிலான அமைச்சரவையையும் புறந்தள்ளிச் செயலாற்ற முடியுமான ஏராளமான செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ அதிகார பீடங்களிலும் எந்த அறிவும் அனுபவமும் நிபுணத்துவமும் இல்லாத இராணுவ அதிகாரிகள் அல்லது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தான் புதிய அதிகாரக் கட்டமைப்பின் எலும்புக் கூடு. இதற்குத் தசை போர்த்தி இரத்தம் பாய்ச்ச வேண்டும். இதற்காகத் தான் அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்படப் போகிறது. எங்களது கண்முன்னால் தெரியும் புதிய விலங்கின் எலும்புக் கூட்டுக்கான யாப்பொன்றை உருவாக்குவதற்குத் தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கேட்கப்படுகிறது. அப்படிக் கொடுத்தால் நாடு பாரிய அழிவையே சந்திக்கும்.

மூன்றிலிரண்டு கிடைத்தால் மக்களில் அது என்ன பாதிப்பைச் செலுத்தும் என்பதைப் பொறுத்தவரையில் பொருளாதாரம் இதை நிலையில் பேணப்படும், எந்தப் பயமும் சந்தேகமுமின்றி சம்பளம் உட்பட அனைத்திலும் வெட்டுக்கள் விழும். இவை அனைத்தையும் கண்முன்னால் வைத்துக் கொண்டே மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்காக விடுக்கப்படும் வேண்டுகோளுக்கு மக்கள் எதிராக நிற்க வேண்டும். இதனை எதிர்த்து அனைவரும் வாக்களிக்க வேண்டும். அழிவுக்கு அப்பால் இந்தப் பயணத்துக்குக் கடிவாளமிட முடியுமான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்.

தரிந்து உடுவரகெதர அனித்தாவுக்கு எடுத்த பேட்டியிலிருந்து