பயங்கரவாதத்துக்கு நான் நிதியளித்ததாகக் கூறுவோருக்கு எதிராக நடவடிக்கை

14

ஈஸ்டர் தாக்குதலுக்கு தான் நிதியுதவி அளித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியதாக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்து அப்பட்டமான பொய் என முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ரிஷாத் முறையற்ற விதத்தில் சம்பாதித்ததாகச் சொல்லப்படும் பணம் ஈஸ்டர் தாக்குதலை நடத்திய ஸஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்குக் கிடைத்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக நேற்று முன்தினம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரிஷாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நான் என்னுடைய ஒரு ரூபாய் பணத்தையும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தவில்லை. ஸஹ்ரான் உட்பட இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய எவரையும் எனக்குத் தெரியாது. இன்சாப் இப்ராஹீம் அஹமடுடன் வியாபாரத் தொடர்பு தவிர்ந்த வேறெந்தத் தொடர்புகளும் எனக்கில்லை. இந்நிலையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறானதொரு விடயத்தைத் தெரிவித்திருந்தால் அதனை உடனடியாக அவர் வாபஸ் பெற்று உண்மையினை இந்த நாட்டுக்குச் சொல்ல வேண்டும். ஒரு வாரத்துக்குள் அவர் அதைனைச் செய்யாவிட்டால் அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.