உயிர்த்தெழும் 83 இன் மறுபிறவி

0
3
  • பியாஸ் முஹம்மத்

வயதானவர்களால் முன்னெடுக்கப்பட்டு இளைஞர்கள் செத்து மடியும் ஒரு யுத்தத்தின் முடிவிலேயே அரசியல் இருப்புக்கள் நீண்டு செல்கின்றன. இது எப்போதும் போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முன்னைய சிரில் மத்திவ் ஞானசார தேரராலும் ஜேஆர் ஜயவர்தன கோதபாய ராஜபக்ஷவினாலும் பதிலீடு செய்யப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட இலங்கையொன்றுக்கான எந்த எதிர்பார்ப்பையும் இந்த இருசாராருமே விட்டு வைக்கவில்லை. இலங்கையின் பல்லின, பல்மத பண்பாடுகளைப் பேணிக்காத்து மதிப்பளித்து எமது அரசியல் நிர்மாணத்தை அதன் மீது கட்டியெழுப்புவதை இருசாராருமே ஏற்றுக் கொள்ளவில்லை என கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து 83 கலவரம் தொடர்பில் அண்மையில் க்ரௌன்ட் வீவ்ஸ்க்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகின்றார். (https://groundviews.org/2020/07/20/the-significance-of-1983/)   

1983 ஜூலைக் கலவரம் நிகழ்ந்து 37 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையிலும் நிகழ்வுகள் மீண்டு வருவதற்கான சாத்தியங்களை அவர் இங்கு கோடிட்டுக் காட்டுகிறார். 1983 க்கு முன்னரான நிலைமைகள் மீண்டும் இலங்கையில் கருக்கட்டியிருப்பதை பலரும் கட்டியம் கூறி வருகின்ற நிலையில், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இனவாதத்தைப் பயன்படுத்துவதில் ஜேஆரும் ஜீஆரும் ஒன்றுதான் என்பதை திஸரணீ குணசேகரவின் அண்மைய கட்டுரையொன்று எடுத்துக் காட்டுகிறது. (https://groundviews.org/2020/07/13/the-night-on-the-horizon/) “உருவாகிவரும் (கொரோனா) இரண்டாவது அலையை அடக்கி வைக்க முடியாவிட்டால் அரசாங்கம் தனது அரசியல் பிரச்சார முட்டைகளை இன மத ரீதியான இனவாதக் கூடைகளில் வைக்க வாய்ப்புள்ளது. இதற்கான முயற்சிகள் இப்போது நடந்து வருகின்றன. இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் வடக்கில் குண்டு கண்டுபிடிக்கப்படும். இனவாதக் கூண்டுகள் நாலாபுறங்களிலும் திறந்து விடப்படும். தமிழ்ப் புலிகளிலும் இஸ்லாமியத் தீவிரவாதிகளிலும் மற்றும் பிரிவினைவாத அச்சுறுத்தலிலும் அடிப்படைவாத அபாயத்திலும் கவனத்தைத் திருப்பி ஆட்சியாளர்கள் வைரஸை எங்களுக்கெல்லாம் மறக்கச் செய்வர்“ என அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இந்த வகையில் அரசியல் காரணங்களுக்காக மற்றுமொரு 83 கறுப்பு ஜூலையின் தேவை நாட்டில் உருவாகியிருப்பது புலனாகிறது. 83 க்கு முன்னர் அப்போதைய தொழில்துறை அமைச்சர் சிரில் மத்தியுவினால் எடுக்கப்பட்ட முன்னெடுப்புக்கள் மீண்டும் மறுவடிவமெடுத்திருப்பதை களத்தில் காணமுடிகிறது. 1970 முதல் அவர் இதற்கான விதையை ஊன்றியிருந்தார். சிங்ஹலயாகே அதிஸி ஹதுரா (சிங்களவரின் கண்ணுக்குத் தெரியாத எதிரி) எனும் நூலை அவர் 1970 களிலேயே எழுதினார். இந்திய வம்சாவழித் தமிழர்கள் பற்றி அவர் அதில் குறிப்பிடும் பொழுது சிங்களம் பேசத் தெரியாத தமிழ் மட்டுமே தெரிந்த இவர்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் வெளிநாட்டு இந்தியர்கள் பெரும்பான்மை இனமாக மாறி சிங்கள இனத்தை அடிமையாக்கக் கூடும் எனக் குறிப்பிடுகிறார்.

இதே நூலின் நான்காம் அத்தியாயத்தில், இப்போது சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு, சிங்கள பௌத்த கலாச்சாரத்தின் கொடியின் கீ்ழ் சிங்கள மக்கள் அனைவரும் ஒன்றுபடுவதாகும். இந்தியர்களதும் பெடரல்வாதிகளதும் சிங்களவர்க்கெதிரான கோரிக்கைகளை வெளிப்படையாகவும் உண்மையாகவும் எதிர்க்கின்ற கட்சிகளுக்கு, அது ஐதேகவானாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானாலும், ஆதரவளிப்பதாகும் என தனது இனவாதத்தை 70 களிலேயே அரசியலாக மாற்றினார்.

இனவாதத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவதற்காக அதனை தேசபக்தி எனும் பெயரில் தேசியவாதமாக சிரில் மத்தியு மாற்றினார். தேசபக்தியும் தேசியவாதமும் நிறைந்த சிங்கள மக்களே, சிங்கள சமூகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாகத் தாரை வார்த்துக் கொடுத்து தமிழர்களைப் பலப்படுத்துவதற்கு உங்களது பெயரால் நீங்கள தெரிவு செய்த அரசாங்கத்துக்கு அனுமதிப்பது எதிர்காலச் சி்ங்களத் தலைமுறைக்கு நீங்கள் விட்டுச் செல்லும் அழிவு என்பதனை நாங்கள் காண்கிறோம். நீங்களும் அதனை விரைவில் காண்பீர்கள். உங்களின் அரசியல் குருட்டுத்தன்மை விலகி நீங்கள் உண்மையைக் கண்டு கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம் (சிங்ஹலயாகே அதிஸி ஹதுரா – பத்தாம் அத்தியாயம்) என்று அவர் விடுத்த அறைகூவல் தான் ஜேஆரை 1977 இல் பதவியில் அமர்த்தியது.

1977 ஜூலையில் ஜேஆர் ஆட்சி அமைத்து அடுத்த மாதமே தமிழர்களுக்கு எதிரான முதலாவது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆகஸ்ட் 12 இல் தொடங்கி 20 வரை இந்தக் கலவரம் தொடர்ந்தது. இனவாதிகள் உசுப்பி விட்டதனை அறுவடை செய்து ஆட்சி பீடம் ஏறிய ஜயவர்தனா அரசாங்கம் இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் நோக்கில் இதற்கெதிரான எந்த நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்கவில்லை. “நாங்கள் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்த விரும்பவில்லை. அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது என்பது பாராளுமன்றத்தைத் தவிர்த்து வர்த்தமானி மூலம் சட்டமியற்றி மக்களின் கைது, தடுப்புக்காவல் உரிமைகளை மொத்தமாகப் பறிப்பதாகும்“ என ஜனாதிபதி ஜயவர்தன அப்போது தெரிவித்தார். இராணுவத்தினர் தெற்கில் தமிழருக்கெதிரான வன்முறையைத் தூண்டினர். பொலிஸார் தமது வானொலி வலையமைப்பைப் பயன்படுத்தி வதந்திகளைப் பரப்பி வன்முறைக்குத் தூபமிட்டனர். The state against Tamils.” Nancy Murray. Race & Class, XXVI, 1 (1984). p.98.

தொடர்ந்து 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு 1981 ஆம் ஆண்டின் வன்முறைகள் நடந்தேறின. உலகின் அறிவுப் பொக்கிஷமொன்றான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இனவாதத் தீக்கிரையாகியது. 1981 மே 31 இல் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் பிரச்சாரமொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டை அரச அனுசரணையுடன் நடந்ததாகக் குறிப்பிடும் நான்சி முரே, “உயர்மட்ட சிங்கள பாதுகாப்பு அதிகாரிகளும் இரண்டு அமைச்சரவை அமைச்சர்களான சிரில் மத்தியு மற்றும் காமினி திசாநாயக்கவும் நகரில் வலம் வந்து கொண்டிருக்கையிலேயே சீருடை அணிந்த இராணுவத்தினரும் சாதாரண உடையில் இருந்த குண்டர்களும் இணைந்து நன்கு திட்டமிட்ட அழிவுகளை மேற்கொண்டனர். அவர்கள் 95,000 புத்தகங்களைக் கொண்ட யாழ் பல்கலைக்கழகத்தைத் தீக்கிரையாக்கினர். இந்துக் கோயிலொன்றை எரித்தனர். ஈழநாடு பத்திரிகை அலுவலகத்துக்கு சேதம் விளைவித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை எரித்தனர். யாழ் பாராளுமன்ற உறுப்பினரது வீடும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினது அலுவலகமும் தாக்கப்பட்டது“ எனக் குறிப்பிடுகிறார்.

1981 மே 31 இல் இந்தச் சம்பவங்கள் நடந்த போதும் ஜூன் 02 ஆம் திகதி வரை இனவாதிகளுக்கு அனுசரணை வழங்கும் வகையில் அரசாங்கம் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஜூன் 04 ஆம் திகதியே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 5 நாட்கள் நீடித்தது. உருவாக்கப்பட்ட இந்தச் சூழ்நிலை சாதகமாக இருந்ததால் 1982 ஒக்டோபரில் தேர்தலை நடத்தி ஹெக்டர் கொப்பேகடுவவைத் தோற்கடித்து ஜேஆர் ஜயவர்தன வெற்றி பெற்றார். அந்தச் சூட்டுடன் 1982 டிசம்பரில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி மேலும் ஆறு வருடங்களுக்கு தனது ஆட்சியை நீடித்துக் கொள்வதற்கு ஜயவர்தன அரசாங்கத்தால் முடியுமாக இருந்தது.

1982 டிசம்பரில் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஆட்சியை நீடித்த கையுடன் 1983 ஜூலைக் கலவரம் திட்டமிட்ட ரீதியில் நடத்தப்பட்டது. வரலாற்றில் கறை படிந்த அத்தியாயமாகப் பதியப்பட்டுள்ள இந்தக் கறுப்பு ஜூலையில் நடந்த அக்கிரமங்களை ஜனாதிபதி ஜயவர்தன தனது மௌனத்தினால் அங்கீகரித்துக் கொண்டிருந்தார். ஜூலை 24 இல் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகள் இனவாதிகளின் இச்சைகள் அடங்கும் வரை 28 ஆம் திகதி வரை தொடர்வதற்கு ஜேஆர் அனுமதித்தார். “தமிழர்கள் தாக்கப்படும் போது அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பை வழங்கவோ அல்லது அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யவோ ஜயவர்தன அரசாங்கம் தவறிவிட்டது. வன்முறையின் முதல் நான்கு நாட்களில் ஜனாதிபதியே விபரிக்க முடியாத மௌனத்தைக் கடைப்பிடித்தார். நான்கு நாட்களின் பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது கலவரம் தொடர்பிலான எந்தவித வருத்தத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. கலவரத்துக்கு இரு வாரங்களுக்கு முன்னர் ஜூலை 11 இல் ஜனாதிபதி ஜயவர்தன லண்டன் டெய்லி டெலிகிராபின் இயன் வார்டுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ் மக்கள் மீதான அவரது அணுகுமுறையை தெளிவாக கண்டு கொள்ளலாம். “நான் இப்போது யாழ்ப்பாண மக்களின் கருத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. நாம் இப்போது அவர்களைப் பற்றியோ, அவர்களது வாழ்க்கையைப் பற்றியோ, எங்களைப் பற்றிய அவர்களது அபிப்பிராயங்களைப் பற்றியோ சிந்திக்க முடியாது“ என அவர் கூறியிருந்தார்.“ Human rights violations in Sri Lanka.” Race & Class, XXVI, 1 (1984). p.126.  கலவரத்துக்குப் பின்னர் 1984 இல் இந்தியா டுடேக்கு அவர் வழங்கிய பேட்டியில், இந்தியாவுக்குச் செய்ய முடியுமான மோசமான நடவடிக்கை எம்மை ஆக்கிரமிப்பது தான். அது மட்டும் நடந்தால் எமது நாட்டில் அது தமிழரின் முடிவாக இருக்கும் எனக் கூறியிருந்தார்.

அவர் அப்படிச் சொல்வதற்குக் காரணம் இருந்தது. இந்தியத் தேசியவாதத்தைக் கட்டியெழுப்புவதற்கு பாகிஸ்தானுடைய ஆக்கிரமிப்பு தொடர்பான அச்சத்தை ஊட்டி இந்தியா எப்படி அரசியல் செய்கிறதோ அதே பாணியில் தமிழர்கள் ஊடாக இந்திய ஆக்கிரமிப்பு தொடர்பான அச்சத்தை ஊட்டி இலங்கையில் அரசியல் செய்யும் பாணியை ஜயவர்தன அரசாங்கம் முன்னெடுத்து வந்தது. தமிழர்கள் மீதான வெறுப்பை வளர்ப்பதற்கு இதனையே ஜேஆர் அரசாங்கம் பயன்படுத்தியது.  

“வயதானவர்களால் முன்னெடுக்கப்பட்டு இளைஞர்கள் செத்து மடியும் ஒரு யுத்தத்தின் முடிவிலேயே அரசியல் இருப்புக்கள் நீண்டு செல்கின்றன. இது எப்போதும் போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முன்னைய சிரில் மத்திவ் ஞானசார தேரராலும் ஜேஆர் ஜயவர்தன கோதபாய ராஜபக்ஷவினாலும் பதிலீடு செய்யப்பட்டிருக்கிறார்கள்“ எனும் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவின் வாசகங்களை 83 ஜூலைக் கலவரத்தின் 37 ஆவது வருடத்தில் மீண்டும் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.

தமது அரசியலைக் கொண்டு செல்வதற்கு 37 வருடங்களுக்கு முன்னர் தமிழர் பயன்படுத்தப்பட்டது போல தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வங்குரோத்தாகியுள்ள அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கான வாகனமாக மற்றொரு சிறுபான்மையான முஸ்லிம் சமூகம் பலிக்கடாவாக்கப்படுவது வரலாற்றின் ஓட்டத்தில் தெளிவாகத் தெரிகிறது. தமிழர்களை மொழி ரீதியாக அடக்கியது போல முஸ்லிம்களை அடக்குவதற்கான ஆயுதமாக மதம் பயன்படுத்தப்படுகிறது. தமிழர்கள் தொடர்பில் காட்டப்பட்ட இந்திய ஆக்கிரமிப்பு என்ற பூச்சாண்டி முஸ்லிம்களுக்கென்று மாறும் போது இஸ்லாமிய அரசாங்கத்தின் படையெடுப்பாகத் தோற்றம் பெற்றிருக்கிறது. ஞானசார தேரர் தலைமையிலான மத அடிப்படைவாதக் குழுக்கள் இது தொடர்பான பிரச்சாரங்களை வரலாற்றை மறந்து போன சிங்களவர்கள் மத்தியில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். 2009 இல் தமிழர்கள் யுத்த முனையில் தோற்கடிக்கப்பட்டவுடனேயே அடுத்த எதிரியாக முஸ்லிம்களைக் காட்டுவதற்கான ஏற்பாடுகள் கச்சிதமாக நடந்து வந்தன. இந்த வேலைத்திட்டம் தொடங்கி ஐந்து வருடங்களுக்குள்ளேயே இன மேலாதிக்கச் சக்திகளினால் அளுத்கமை வன்முறையை நடத்திக் காட்ட முடிந்திருக்கிறது. தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத் தாக்குதல் நடந்தது போல இராணுவத்தினதும் பொலிசாரினதும் உதவியுடன் 2018 மார்ச்சில் முஸ்லிம்களுக்கெதிரான திகன கலவரம் நடந்தேறியது. 37 வருடங்களுக்கு முந்தியது போலவே அரசாங்கம் இதனைத் தடுப்பதற்கு எதுவும் செய்யவில்லை. வெகு அண்மையிலேயே இராணுவ முகாம் இருந்தும், தீயணைப்புப் படை இருந்தும் யாரும் உதவிக்கு வரவில்லை எனவும், இராணுவத்தினரும் பொலிசாரும் நேரடியாகக் களத்தில் இருந்ததை தாம் பார்த்ததாகவும் பலரும் உள்ளுர் சர்வதேச அறிக்கையாளர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாடு மீண்டும் 1983 ஐ நோக்கி பின்தள்ளப்படுவதாக அவதானிகள் பலரும் எடுத்துக் கூறி வருகின்றனர். “அனைத்து வழிகளிலும் இனவாதமும் தீவிரவாதமும் வளர்க்கப்படும் பின்னணியில் அரச தரப்பும் மௌனம் சாதித்து வருகிறது. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ தான் சிங்கள பௌத்த வாக்குகளால் வெற்றி பெற்ற ஜனாதிபதி என அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் ஏனைய இனங்களுக்கும் மதங்களுக்கும் வேறுபாடு காட்டப் போவதில்லை எனவும் அவர் கூறுகிறார். ஆனாலும் பெருவாரியான பிரச்சினைகளின் போது விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி இந்த (முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரங்கள்) விடயத்தை எப்படித் தவறவிட்டார் என்பது கேள்விக்குறியதே. உண்மையில் இந்த விடயத்தை விசாரித்து நாட்டின் இனங்களுக்கிடையேயான நீண்ட கால நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடொன்று அரச தலையீட்டில் தாமதிக்காது முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அதிக காலம் செல்வதற்கு முன்பே தமிழர்களுக்கு நடந்த 83 கறுப்பு ஜூலை போன்ற வரலாற்றுத் தவறு மீண்டும் முஸ்லிம்கள் தொடர்பில் நடப்பதற்கு இடமிருக்கிறது. இதுவரைக்கும் அந்த நெருப்பை மூட்டுவதற்குத் தேவையான வைக்கோல் அளவுக்கதிகமாகவே திரட்டி வைக்கப்பட்டிருக்கிறது. என ராவய பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையொன்றில் ஸ்ரீலால் செனவிரத்ன குறிப்பிடுகின்றார்.

83 ஜூலைக் கலவரம் அரசியல்வாதிகளின் இருப்புக்கு உரமூட்டியதைத் தவிர நாட்டுக்கு எந்த நன்மையையும் கொண்டு வந்து சேர்க்கவில்லை. மாறாக முப்பது வருட யுத்தமொன்றை நாட்டுக்குத் திணித்து நாட்டை பல தசாப்தங்கள் பின்னோக்கித் தள்ளியது. இப்பொழுது மீண்டும் அதே குழியில் மக்களைத் தள்ளி அராஜகம் நடத்துவதற்கு இனமேலாதிக்கச் சக்திகள் முயற்சித்து வருகின்றன. இதுவும் நாட்டுக்கு எந்த நன்மையையும் விளைவிக்கப் போவதில்லை என்பதை தேசப்பற்றாளர்களாகத் தம்மைக் கூறிக் கொள்ளும் அனைவரும் விளங்கிக் கொள்வது முக்கியமானது.