உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தலுக்காக விஷேட போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு

Written by Administrator

பொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மற்றும் மீண்டும் கொழும்புக்கு திரும்பும் மக்களுக்காக விசேட போக்குவரத்து திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான திட்டம் இன்று தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பொது மக்கள் சிரமமின்றி பயணிக்கும் வகையில் கொழும்பு கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 100 இற்கும் அதிகமான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டிருப்பதாக புறக்கோட்டை பஸ் தரிப்பிட பிரதி முகாமையாளர் ஏ.ஏ.எச்.பண்டுக தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வெளியிடங்களுக்கு பெரும் எண்ணிக்கையிலானோர் செல்வார்கள் என்பதினால் நாளாந்தம் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து மற்றைய பிரதேசங்களுக்கு இடையில் 800 தொடக்கம் 1000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

வாராந்த விடுமுறையை முன்னிட்டும் பொதுத் தேர்தலை முன்னிட்டும் சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் திரும்பவும் கொழும்பு நோக்கி வருவதற்காக இ.போ.ச. பஸ்களை பிரதேசங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.

பதுளை, ஹட்டன், வெலிமடை, கண்டி, கதிர்காமம், மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கு மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதேபோன்று மக்கம்புர, கடவத்த மற்றும் கடுவல ஆகிய அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்லும் பஸ்தரிப்பு நிலையங்களுக்காக மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இதேபோன்று கொழும்பு மாவட்டத்தினுள் பொதுத் தேர்தல் நடைபெறும் 5 ஆம் திகதி வழமை போன்று இ.போ.ச. பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேபோன்று வார இறுதியில் விசேட ரயில் சேவைகள் சிலவும் இடம்பெறவுள்ளன. இதற்கமைவாக கொழும்பு கோட்டையில் இருந்து நான்ஓயா, மஹவ, அநுராதபுரம் மற்றும் வெலிஹத்த வரையில் இந்த ரயில் சேவை இடம்பெறும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

About the author

Administrator

Leave a Comment