Features அரசியல்

இறந்த காலம் எழுதிவைத்த எதிர்காலம் ?

Written by Administrator
  • திஸரணி குணசேகர

37 வருடங்களுக்கு முந்திய இந்நாளில் இலங்கை எரிந்து கொண்டிருந்தது.

கறுப்பு ஜூலையில் சிங்களக் கும்பல்கள் கொன்றது தமிழ் ஆண்கள், பெண்கள், குழந்தைகளை மட்டுமல்ல, நாட்டின் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் தான். அவர்கள் எரித்தது தமிழர்களின் சொத்துக்களை மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புக்களையும் தான்.

சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையின் வரலாற்றில் கறுப்பு ஜூலை இருண்ட அத்தியாயமாகும். இது நெறிமுறை ஒழுக்கங்கள், பண்பாடுகள், நாகரிகங்கள் அனைத்தினதும் தோல்வியாகும். இது நியாயங்களையும் அறிவையும் புத்தியையும் மறுதலிக்கச் செய்வதில் பெரும் பங்குவகித்தது. வன்முறையின் வெறியாட்டம் பிரிவினைவாதத்துக்கும் எல்ரிரிஈயிற்கும் சிறகுகளைப் பெற்றுக் கொடுத்தது. இது யுத்தத்தையும் கிளர்ச்சியையும் மடை திறந்து விட்டது. (ஜேவிபியின் கிளர்ச்சியின் பின்னர், அது ஐதேகவின் அரசாங்கத்துக்கான பலி்க்கடா என வர்ணிக்கப்பட்டது)

1977 இல் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதனால் அது அபிவிருத்தியிலும் வேலைவாய்ப்பு மற்றும் வருமான உற்பத்திகளிலும் பாரியதொரு எழுச்சியை ஏற்படுத்தியது. இது போன்ற அனைத்து தீவிர மாற்றங்களையும் போலவே இதுவும் பாரிய சமூக – பொருளாதாரப் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. 80 களின் முற்பகுதியில் பணவீக்கம் விண்ணை முட்டியது. பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆபத்தான அளவை எட்டியிருந்தது. சிங்களத் தெற்கில் வளர்ந்து வரும் அதிருப்தியை எதிர்கொள்வதற்கு சிறுபான்மையினரைப் பலிக்கடாவாக்கும் பரிசோதனையை அரசு மேற்கொண்டது.

சிங்களவரின் வறுமைக்கு தமிழரின் வியாபாரங்களையும் சிங்களவரின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தமிழரின் தொழில்வாண்மையையும் குற்றம் பிடிப்பது சிரில் மத்தியுவுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டதாக இருக்கவில்லை. இதனுடன் தொடர்புடைய ரொனி டி மெல் போன்ற மிதவாதிகளும் இனவாதத்தை பயன்படுத்தத்தக்க பெறுமதியானதொன்றாகக் கண்டனர். கறுப்பு ஜூலையின் பின்னர் நிதியமைச்சர் (ரொனி டி மெல்) கருத்து வெளியிடுகையில், இலங்கையில் எல்லா விடயங்களிலும் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று கூறினார். இதற்கான தீர்வாக “சிங்களப் பெரும்பான்மையின் உரிமைகளை மீட்டெடுப்பதனை“ அவர் முன்மொழிந்தார். (பொறாமையின் கூலி – The Economist – 20.8.1983)     

குற்றவாளிகளினதும் அதன் பாதுகாவலர்களதும் பார்வையில் கறுப்பு ஜூலை என்பது அரசியல் ரீதியாகத் தண்டிப்பதற்கும் சமூக-பொருளாதார மறுசீரமைப்புக்கும் அவசியமானதாகும். பெரும்பாலான சிங்கள மேலாதிக்கவாதிகளுக்கு இது செல்வந்தர்களாகவும் உயர் இடங்களிலும் உள்ள சிங்களவரல்லாதவர்களை விட பரம ஏழையான மற்றும் ஒடுக்கப்பட்ட சிங்களவர்கள் பலம் பெற்ற கச்சிதமான இலங்கையை வடிவமைப்பதாகும். இதே மனநிலையையே 2000 இன் முற்பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதலிலும் அண்மைக்காலங்களில் முஸ்லிம்களை இலக்கு வைத்த சிறு கலவரங்களிலும் காணமுடிந்தது.

இவ்வாறான சிந்தனைக்கு அணிசேருபவர்கள் அரசியல் மற்றும் சமூக எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் வரை அவர்கள் இழைக்கக் கூடிய தீங்கும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். அதுவே மைய நீரோட்டத்தில் நுழைந்தால் வன்முறையும் ஸ்திரமின்மையும் சகஜமாகிவிடும்.

இன்று சிறுபான்மை எதிர்ப்பு வன்முறைகளின் பரிமாணத்தைச் சரியென நம்புபவர்கள் மைய நீரோட்டத்தில் இல்லை. அவர்களது குரல்களும் செயற்பாடுகளும்  அதிகாரங்களின் வாசலிலேயே இருக்கின்றன. தங்களது தீவிரவாத ஆதரவாளர்களின் இனவாத வெறித்தனங்களை ராஜபக்ஷாக்கள் நம்பலாம், நம்பாமலிருக்கலாம். ஆனாலும் (எஸ்டப்ஆர்டி பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, ஜேஆர் ஜயவர்தன போன்று) இந்த வெறித்தனத்தின் விளைவை தமது நன்மைக்காகப் பயன்படுத்துவதில் அவர்களிடையே எந்தத் தடுமாற்றங்களும் இல்லை. அனைத்தையும் தாண்டி உலகளாவிய தொற்று நோயைக் கூட முஸ்லிம் பிரச்சினையாக மாற்றுவதற்கு கோதா-மஹிந்த அரசாங்கம் முயற்சி செய்தது. அதில் சிலகாலம் வெற்றியும் கண்டது.

ஒருவகையில் பெரும்பான்மை – சிறுபான்மை மோதலில் எப்போதும் சிக்கித் தவிக்கும் ஒரு நாடு ஒருபோதும் அமைதியைக் காணவோ, ஸ்திரத்தன்மையைப்  பேணவோ, செழிப்படையவோ முடியாது. கறுப்பு ஜூலை என்பது காட்டுமிராண்டித்தனத்தினதும் அறிவீனத்தினதும் வெடிப்பாகும். அது அழிவைக் கொண்டு வந்தது. தன்னையே அழித்துக் கொண்டது. சகிப்புத்தன்மை மற்றும் நீதியின் அடிப்படையில் சிறுபான்மையினருடன் இருப்புக்கான வழியொன்றை வளர்ப்பதுவே பெரும்பான்மைக்கும் நன்மை பயப்பதாக அமையும். இது கறுப்பு ஜூலையும் அதன் பின்விளைவுகளும் கற்றுத்தரும் அடிப்படைப் பாடமாகும். அதேபோல ராஜபக்ஷாக்கள் கருத்தியல் ரீதியாக கற்றுக் கொள்ள முடியாத பாடமாகும்.

சிரிசேன-விக்கிரமசிங்க நிர்வாகம் இனவாதத்தை எதிர்கொள்ளத் தவறிவிட்டது. அது அவர்கள் செய்த பாவம். ராஜபக்ஷாக்களைப் பொறுத்தவரை இனவாதம் என்பது தேர்ந்தெடுக்கப்படக் கூடிய ஆயுதமாகும். தேவையைப் பொறுத்து இது தந்திராபோயமாகவோ மூலோபாயமாகவோ பயன்படுத்தப்பட முடியும். பொருளாதார நெருக்கடிகள் மோசமடைந்து சிங்கள ஏழைகள் மட்டுமன்றி மத்திய வர்க்கத்தினரும் கஷ்டத்தை அனுபவிப்பதால் இதற்கான தேவை அதிகரிக்கும்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கோதாபய – மஹிந்த கூட்டு பாரிய பெரும்பான்மையைப் பெறுவதில் வெற்றி பெற்றால் இலங்கையின் எதிர்காலம் கும்பல் வன்முறையும் பொருளாதாரச் சரிவும் நிறைந்த அதனது கடந்த கால மோசமான நிலைக்கு ஒப்பானதாக அமையலாம். சிங்கள பௌத்தரல்லாத ஒவ்வொருவரிலும்  மறைந்திருக்கும் எதிரியைக் காணுவதாக அரசின் வழிகாட்டும் கோட்பாடு அமையுமாக இருந்தால் நாட்டில் எப்படி அமைதியையோ ஸ்திரத்தன்மையையோ காண முடியும் ?

மூன்றிலிரண்டுப் பித்து. 82 சர்வஜன வாக்கெடுப்பு முதல் 2020 தேர்தல் வரை

கறுப்பு ஜூலைக்கு முன்னர் இலங்கை மீது நீண்ட கறையைப் படியவைத்த முட்டாள்தனத்தின் அடையாளமான குற்றமொன்று நிகழ்ந்தது – 1982 சர்வஜன வாக்கெடுப்பு.

புதிய விகிதாசாரத் தேர்தல் முறை 1977 இல் பெற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பறித்து விடும் என்பதை அறிந்த ஜயவர்தன நிர்வாகம் சர்வஜன வாக்கெடுப்பொன்றினூடாக பாராளுமன்றத் தேர்தலைத் தவிர்க்க முடிவு செய்தது. அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. முழுமையான அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொண்டது. ஆனால் அது முறைமையை கீழ்த்தரமாக்கியது.

ஜயவர்தன அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பித்துப் பிடித்திருக்காவிட்டால், 82 இல் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்காவிட்டால், 83 இல் சாதாரண பாராளுமன்றத் தேர்தலொன்று நடந்திருந்தால் இலங்கை இப்போதிருக்கும் நிலையை விட பெரும்பாலும் நல்லதொரு நிலையில் மாறுபட்டிருந்திருக்கும். ஆனால் முழுமையான அதிகாரத்தை விரட்டிச் செல்வது முழுமையான முட்டாள்தனமாகும். சந்தேகத்துக்கிடமின்றி ஜேஆர் ஜயவர்தன போன்ற புத்திசாலிகளாக இருந்தாலும்.

இன்று நாங்கள் அதேவிதமானதொரு தொடுபுள்ளியில் இருக்கிறோம்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று பொதுஜன பெரமுன என்ன செய்யும் ? புதியவர்களுக்காக 19 ஐ நீக்கிக் கொடுக்குமா ? நடைமுறையில் இது நாட்டுக்கும் மக்களுக்கும் எதனைக் கொண்டு சேர்க்கப் போகிறது ?

19 ஆம் திருத்தம் ஒரு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவை நிறுவும் வரை இலங்கையில் தேர்தல்கள் கொலைக்களமாக மாறுவது சகஜமாக இருந்தது. அன்றிலிருந்து மூன்று தேர்தல்கள் எந்த மரணமும் சம்பவிக்காமல் நடந்தேறியிருக்கிறது. இது நான்காவது தேர்தல். இதுவரை யாரும் கொல்லப்படவுமில்லை, கடுமையாகக் காயப்படவுமில்லை. பொதுஜன பெரமுனவின் புத்தளம் வேட்பாளர் சனத் நிஷாந்த நடத்திய வாகனப் பேரணியில் அவர் இலக்கத்தகடில்லாத மோட்டார் சைக்கிளை ஹெல்மட் இல்லாமல் ஓட்டினார் என்பது ஒரு செய்தியாக மாறியது. காரணம் தேர்தல் சட்டங்களை வெளிப்படையாக மீறுவது இப்போது சகஜமானது என்ற நிலையில் இருந்து அசாதாரணமானதாக மாறியிருக்கிறது.

19 ஆவது திருத்தத்தை இல்லாமலாக்க முயற்சிப்பவர்கள் தேர்தல் அமைதியான போட்டியாகவல்லாமல் கடந்த காலங்களைப் போலவே சிறிய யுத்தமாக நடைபெறுவதற்குத் திரும்பிச் செல்ல ஆசைப்படுகிறார்கள். இது தான் நாம் விரும்பும் எதிர்காலமா ?

2014 இல் மதமுலனவில் சிங்களப் புத்தாண்டைக் கொண்டாட அப்போதைய ஜனாதிபதி அழைத்துச் சென்ற உறவுகளில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸும் இருந்தார். (http://www.adaderana.lk/news.php?mode=head&nid=1829) பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை சட்டவிரோதமான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் வேட்டையாடியதை அடுத்து உயர்நீதிமன்றத்துக்குத் தலைமை தாங்க ராஜபக்ஷ சகோதரர்களால் பீரிஸ் நியமிக்கப்பட்டிருந்தார். ராஜபக்ஷக்களுக்கான அவரது கீழ்ப்பணிவுக்குக் கிடைத்த வெகுமதியையிட்டு அவர் பெருமிதமடைந்தார்.

19 ஆவது திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்தை பெருமளவில் மீட்டெடுத்தது. ஜனநாயகத்தின் அந்தத் தூண் இன்னும் முழுமையாக இடிந்துவிடவில்லை. எடுத்துக்காட்டாக இந்த மாதம் மணல் போக்குவரத்துக்கான பெர்மிட் தேவையை இல்லாமலாக்குவதற்கான மஹிந்த – கோதா அமைச்சரவையின் சட்டவிரோத முடிவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிறுத்தியது. பெர்மிட் பெறுவதற்கான தேவையை இல்லாமலாக்குவதனால் சுற்றாடல் அழிவை எதிர் நோக்கியது. இது சுரங்கம் மற்றும் கனியுப்புக்கள் சட்டத்தை மீறுவதாக அமைவதாகவும்  சட்டமாஅதிபர் சுட்டிக் காட்டியிருந்தார்.

19 ஆவது திருத்தம் நடைமுறையில் இல்லாமலிருந்தால் இந்தச் சட்டவிரோதமான அழிவு தரும் முடிவினை அரசாங்கம் தாண்டிச் சென்றிருக்க முடியும். இந்தக் கடந்த காலத்துக்கா நாம் திரும்பிச் செல்ல விரும்புகிறோம் ?

இந்த மாதம் பொதுஜன பெரமுனவின் மேயரின் உத்தரவின் பேரில் குருநாகலில் ஒரு தொல்பொருள் கட்டடம் அழிக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரை ராஜபக்ஷாக்கள் பாதுகாக்கின்றார்கள். புராதனச் சின்னங்களைச் சேதப்படுத்தும் இந்த முயற்சியை நியாயப்படுத்த மஹிந்த ராஜபக்ஷ இனவாதத்தைப் பயன்படுத்த முனைந்தார். இரண்டாம் புவனேகபாகு மன்னருக்கு ஒரு முஸ்லிம் மனைவி இருப்பதாகக் கூறினார். அவர் தேர்தல் பிரச்சாரத்தில் செல்லும் போது கோதாபய ராஜபக்ஷவிடம் இது தொடர்பில் கேட்கப்பட்டபோது, தனக்கேயுரிய சிரிப்பினாலும் பொருத்தமற்ற சில வார்த்தைகளாலும் அதனை மறுத்தார். இந்த விவகாரத்தை அமைச்சரவையும் விவாதிக்கவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ நியமித்த நிபுணர் குழுவினர் பரிந்துரைத்த போதும் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிக்கு எதிராக காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

கோதாபய – மஹிந்த கூட்டு மிகப் பெரிய பெரும்பான்மையை வென்றால் எதிர்காலம் எப்படி அமையும் என்பதனை இந்தச் சம்பவம் தெளிவாக நிரூபிக்கிறது. இத்தகைய அதிகாரம் ஆளும் உடன்பிறப்பினருக்கும் அவர்களது குடும்பத்துக்கும் மட்டுமன்றி மிக மோசமானவர்கள் உள்ளிட்ட அவர்களின் ஆதரவாளர்களுக்கும் கடிவாளத்தைக் கையில் கொடுத்ததாக அமையும். பொலிசார் அநாதரவாக ஓரங்கட்டப்பட்டு ஆட்சியாளர்களும் அவர்களது பக்தர்களும் செய்யும் குற்றங்களும் துஷ்பிரயோகங்களும் மீண்டும் வழமைக்குத் திரும்பி விடும்.

இத்தகையதொரு நாட்டுக்கா நாங்கள் திரும்பிச் செல்ல விரும்புகிறோம் ?

மூன்றில் இரண்டு பெரும்பான்மை சிங்கள ஆதிக்கத்தைப் பலப்படுத்தும் எனவும் சிறுபான்மையினரை அதே இடத்தில் தக்க வைக்க உதவும் எனவும் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் தங்கள் எஜமானர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றனர். அபரிமிதமான அதிகாரத்தைப் பெறும் ராஜபக்ஷ அரசாங்கம் உண்மையில் சிறுபான்மை வாழ்க்கையை பாதுகாப்பற்றதாகவும் ஆபத்தானதாகவும் ஆக்கிவிடும். ஆனால் அவர்கள் வரம்பை மீறும் போது அதே வன்முறை பெரும்பான்மை மக்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்படும். ரதுபஸ்வெல உதாரணம் இதனை நிரூபிக்கிறது.

ரதுபஸ்வெலவில் மூன்று சிங்களவர் கொல்லப்பட்ட வேளையில் ஒரு கிராமவாசி படையினர் ஒருவரிடம் ஏன் நீங்கள் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தவில்லை எனக் கேட்டபோது, ரப்பர் தோட்டாக்களை வைத்துக் கொண்டு நாங்கள் செல்லம் கொஞ்ச முடியாது என அவர் பதிலளித்தார். ((The Sunday Times – 11.8.2013) வெள்ளைக் கொடி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 58 ஆவது பிரிவை ராஜபக்ஷ பரிவாரம் அங்கு அனுப்பி வைத்தது தற்செயலாகவல்ல. ரதுபஸ்வெலவின் சிங்கள மக்களுக்கு கீழ்ப்படிதலின் பாடமொன்றைக் கற்பிப்பதற்கே அவ்வாறு செய்யப்பட்டது. நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு படையினருக்கு உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கட்டளை அதிகாரி பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன ஜனாதிபதி கோதாபயவினால் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இது சொல்ல வரும் செய்தி தெளிவானது. ராஜபக்ஷக்களுக்கு வழங்கப்படும் அபரிமிதமான பெரும்பான்மை பூமரங்காக சிங்கள மக்களை நோக்கியே என்றோ ஒருநாள் திரும்பி வரப் போகிறது.

பொருளாதார ஸ்திரமின்மை

ஸ்ரீலங்கா ரயில்வேக்கு ஸ்மார்ட் கார்ட் முறையொன்றை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவல் தொடர்புச் சேவை உயர்ந்த நிலையில் இருக்கின்ற ஒரு நாட்டிலேயே இது நடக்கிறது.

அரசாங்கத்துக்குச் சொந்தமான ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத்தளத்தின்படி நாட்டின் நான்காவது பெரிய ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுத் தரும் துறையாக தகவல் தொடர்பாடல் சேவைகள் உள்ளன. ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து சர்வதேச பங்குச் சந்தைகள், போக்குவரத்து, தொலைத்தொடர்பு முறைகளுக்குப் பலம் சேர்க்கும் கண்டுபிடிப்புக்களுக்குப் பின்னணியில் இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் உள்ளது. உலகின் தகவல் தொழில்நுட்பத்துக்கான தெரிவாக இலங்கை மாறி வருகிறது. திறமை எனும் உலகின் மிக அருமையான வளம் இங்கு கிடைப்பதன் பேறாக ஆசியாவில் மிக விரும்பப்படும் தகவல் தொழில்நுட்ப மையமாக இலங்கை பலமாக உருமாறி வருகின்றது.

உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நமது திறமை கோதாபய – மஹிந்த அரசாங்கத்துக்குப் போதுமானதாக இல்லை என்பது தெளிவாகிறது. அதனால் தான் எமது ரயில்வேக்கான தகவல் தொழில்நுட்ப சேவைகளைப் பெறுவதற்காக சீன நிறுவனத்தை நாடுகிறோம். நமது தகுதியிலும் தொழில்நுட்பத்திலும் கோதாபய ராஜபக்ஷவுக்குள்ள விசுவாசம் அவ்வளவுதான்.

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத்தளத்தின்படி, 2017 ல் எமது தகவல் தொழில்நுட்பத் துறை 85,000 க்கும் அதிகமானவர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தது. பொருளாதாரம் தேக்கமடைந்து வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் சூழ்நிலையில் முழுத் திறமை வாய்ந்த இலங்கை நிறுவனமொன்றுக்கு ரயில்வே ஒப்பந்தத்தை வழங்குவது பொருளியல் அறிவை  வழமையை விட அதிகமாக வெளிப்படுத்துவதாக அமையும். ராஜபக்ஷாக்கள் இன்னும் அதனைச் செய்யவில்லை என்றே சொல்லப்படுகிறது. நமது பொருளாதாரம் சீனா மீது தங்கியிருப்பதை இது காட்டுகிறதா ?

நாட்டின் வருமானத் தளத்துக்கு பேரழிவைத் தரும் முறையைக் கையாண்டு தனது புத்திசாலித்தனமான வரிக்குறைப்புக்களால் கோதாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலத்தைத் தொடங்கினார். 2020 மார்ச் ஆகும் போதே நமது நாட்டில் மிகப் பெரியது எனச் சொல்லப்படும் பணம் அச்சிடும் களியாட்டத்தை மேற்கொள்ள மத்திய வங்கி நிர்ப்பந்திக்கப்பட்டது. விளைவாக ரூபாய் கடும் அழுத்தத்துக்கு உள்ளாகி நாடு 1.3 பில்லியன் டொலர் இருப்பை இழந்தது. நாணயத் தாள்களை அச்சிடுவதில் ஆட்சியாளர்கள் எந்தத் தீங்கையும் காணவில்லை. மத்திய வங்கியும் அதற்கு எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. எனவே எதிர்காலத்தில் மிக மோசமான நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்பையும் தட்டிக் கழிக்க முடியாது.

நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி முன்னணிச் சுகாதார ஊழியர்களுக்குரியதைக் கொடுக்காமல் தப்பிக்க அரசாங்கம் முயல்கிறது. அதே அரசாங்கம் பைத்தியக்காரத்தனம் என்று மட்டுமே அழைக்கப்பட முடியுமான சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் “ராவணனும் விமானப் போக்குவரத்துத் துறையில் இழந்து போன அவரது ஆதிக்கமும்“ போன்ற செயற்திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கிறது.   சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஒரு காலத்தில் ஜனாதிபதி கோதாபயவின் பயண முகவராக இருந்தார் என்பது எதேச்சையானதும் அல்ல.

கோதாபய – மஹிந்த கூட்டுக்கு மிகப் பெரிய பெரும்பான்மை வழங்கப்பட்டால், ஹோமாகம கிரிக்கட் மைதானம் (26 ஏக்கர், 60,000 பார்வையாளர்கள், 30-40 மில்லியன் டொலர்) போன்ற திட்டங்கள் மீண்டும் உயிர்த்தெழும். அதனுடைய முக்கியமான ஒப்பந்தங்கள் சீன நிறுவனங்களைப் போய்ச் சேரும். இது போன்ற வீணான திட்டங்களுக்கு சீனர்களைத் தவிர வேறு யார் எங்களுக்குப் பெரும் தொகைப் பணம் தரப் போகிறார்கள் ?

ராஜபக்ஷாக்களின் கனவுப்படி அவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் பொருளியல் அறிவீனம் அரசியல் அறிவீனத்தை மிஞ்சும். பொருளாதாரச் சீர்கேடுகள் மோசமடைந்து அதன் விளைவாக அரசியல் அதிருப்திகள் அதிகரிக்கும் போது அரசாங்கம் இன மத வெறியை அடிபணிவதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான ஆயுதமாகப் பாவிப்பது அதிகரிக்கும். வன்முறையும் அதற்கெதிரான வன்முறையுமாக ஒரு நச்சு வளையம் தோற்றம் பெறும். இது 80 களின் நஷ்டமான தசாப்தத்தைப் போல அமைதி, ஸ்திரத்தன்மை, அபிவிருத்தி அனைத்தினதும் வாய்ப்புக்களை மொத்தமாக அழிக்கும்.

ஆகஸ்ட் 05 ஆம் திகதி நாங்கள் இறந்த காலத்தையா தெரிவு செய்யப் போகிறோம் ?

About the author

Administrator

Leave a Comment