பிரதமர் வரலாற்று வெற்றி. ஐதேகவுக்கு வரலாறு காணாத தோல்வி

16

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுச் சாதனை புரிந்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து குருநாகலை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டிருந்தார். இங்கு அவர் இம்முறை 527,364 வாக்குகளைப் பெற்று இலங்கை வரலாற்றில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவராகப் பதிவாகியுள்ளார். முன்னதாக இந்தச் சாதனையை கடந்த 2015 தேர்தலில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிலைநாட்டியிருந்தார்.

அதுவரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பெற்றிருந்த அதி கூடிய விருப்பு வாக்கான 423,529 வாக்குகளைத் தாண்டி ரணில் விக்கிரமசிங்க 500,566 வாக்குகளை கடந்த தேர்தலில் பெற்றிருந்தார். இருந்த போதும் ஐந்து வருட இடைவெளியில் நடந்த இம்முறைய தேர்தலில் அவருக்கு பாராளுமன்றம் செல்வதற்குத் தகுதியான அளவு வாக்குகள் கூடக் கிடைக்கவி்ல்லை.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆளும் தரப்பில் இருந்த ஐதேகட்சிக்கு இந்த முறை பாராளுமன்றத்தில் ஒரு ஆசனமேனும் தேர்தலுக்கூடாகக் கிடைக்காமல் துடைத்தெறியப்பட்டமை இலங்கை அரசியல் வரலாற்றில் நடைபெற்ற மாபெரும் சோகமாக வர்ணிக்கப்படுகிறது. கட்சிக்குள் ஜனநாயகம் பேணாமையினால் கட்சி சிதைவடையக் காரணமாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்படும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் அனைத்து 22 மாவட்டங்களிலும் போட்டியிட்டு 249,435 வாக்குகளையே (2.15 வீதம்) மொத்தமாகப் பெற்றுள்ளது.