ரிஷாத் கைது செய்யப்படுவதைத் தடுக்க முடியாது

8

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தான் கைது செய்யப்படுவதைத் தடை விதித்து உத்தரவு வழங்குமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது என நேற்று (07) மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவிருப்பதனால் தன்னை அடிக்கடி விசாரணைக்கு அழைப்பதைத் தவிர்ந்து கொள்ளுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் கடந்த 27 ஆம் திகதி விசாரணைக் கமிஷன் முன் ஆஜராகுமாறு மேல் நீதிமன்றம் இவருக்கு உத்தரவிட்டிருந்தது. குறித்த திகதியில் இவர் விசாரணைக்காக சமுகம் தந்தபோது தன்னைக் கைது செய்வதைத் தடை செய்யுமாறு அவர் முன்வைத்த அடிப்படை உரிமை மீறல் மனு பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போதும் நீதிபதி பிரியந்த ஜயவர்தன தனிப்பட்ட காரணங்களினால் பிரசன்னமாகாத காரணத்தினால் இந்த விடயம் நேற்றைய தினம் வரை ஒத்திப் போடப்பட்டிருந்தது.

நேற்று இந்த மனுவை ஆராய்ந்த புவனேக அலுவிகாரே, எஸ்டிபி தெஹிதெனிய, எஸ் துரைராஜா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினர் இந்த மனுவை நிராகரித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் நூற்றுக்கும் அதிகமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொருவராக தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு இடைக்காலத் தடையுத்தரவு கோரி நீதிமன்றத்தை நாடுவது அடுத்த கட்ட விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் என சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மெரின் புள்ளே நீதிமன்றத்துக்குச் சுட்டிக் காட்டினார்.

மனுதாரராகிய முன்னாள் அமைச்சர் அவருக்கெதிராக சாட்சியங்கள் காணப்பட்டால் மாத்திரமே சட்டரீதியாகக் கைது செய்யப்படுவார் எனவும் அவர் நீதிமன்றுக்குத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ரிஷாதின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.