பாங்கும் மனப்பாங்கும்

226
  • அபூ ஷாமில்

தேர்தலில் முஸ்லிம் சமூகம் ஆரோக்கியமாகத் தொழிற்பட்டிருக்கிறது என்பதை கிடைத்திருக்கின்ற 20 ஆசனங்களும் வெளிப்படுத்துகின்றன. முட்டையை ஒரே கூடையில் போடக் கூடாது என்ற முன்னோர்கள் கற்றுத் தந்த மந்திரத்தை சமூகம் உரக்க உச்சரித்திருக்கிறது. பல கட்சிகளில் இருந்தும் முஸ்லிம் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியிருக்கிறார்கள்.

ஆனால் பாராளுமன்றத்துக்குத் தெரிவானவர்கள் சுத்தமானவர்களா ? தேர்தலில் வாக்களித்து விட்டு வந்த ஒருவர், கைகளைச் சுத்தமாகக் கழுவி கைகழுவிப் போட்ட சுத்தமில்லாதவர்களைத் தெரிவு செய்து விட்டு வந்திருக்கிறோம் என ஒருவர் பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டிருந்தார். நாம் தெரிவு செய்தவர்கள் சுத்தமானவர்களா என்பதை ஒரு முறை மீட்டிப் பார்ப்பது தகும். ஏனென்றால் கொலைக் குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கபட்டவர் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியிருக்கிறார். மற்றுமொருவர் கொலைக் குற்றத்துக்காக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக சிறைவாசம் அனுபவித்து ஜனாதிபதி மன்னிப்பில் வெளியே வந்த மதகுரு பாராளுமன்றம் செல்லவிருக்கிறார்.

இப்படியானவர்களையெல்லாம் பொறுப்பான இடங்களுக்கு அனுப்பும் அளவுக்கு மக்களுடைய மனப்பாங்கு மாறியிருக்கிறது. மக்கள் அநியாயத்தையும் அராஜகத்தையும் சகித்துக் கொள்ளப் பழகினால் அதற்கு எதிராகக் கிளர்ந்தெழாமல் அதனை அங்கீகரிக்கப் பழகினால் அந்த சமூகத்துக்குப் பொறுப்பானவர்களா அநியாயக் காரர்களைத் தெரிவு செய்வதைத் தவிர வேறு மாற்றீடு இருக்காது. இது இவ்வாறான சமூகங்களின் அழிவின் ஆரம்பமாகவும் இருக்கலாம்.

அநியாயத்தைக் கண்டால் அதனை பலத்தைப் பிரயோகித்து அடக்க வேண்டும். அல்லது உபதேசிக்க வேண்டும். அல்லது மனதால் வெறுக்க வேண்டும். இந்த நிலைமையும் அற்றுப் போனால் சமூகம் அநியாயத்தை அங்கீகரித்து வாழப் பழகிவிடும். இது சமூக வீழ்ச்சிக்குக் காரணமாக அமையும் என்று போதிக்கும் பாங்கு சொல்லும் இடங்களின் மனப்பாங்குகளும் இதற்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும்.

அநியாயத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கான பழக்கம் முஸ்லிம் சமூகத்தின் ஆரம்ப மையங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் முதன்மைத் தலமாக பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இவைகள் எல்லாம் தூய்மையானவைகளாக இருக்கின்றனவா ? அரசியலில் ஜனநாயகம் வேண்டும் என்று முழங்குகின்ற எத்தனை பேரிடம் பள்ளிவாசல்கள் ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது ?

பலதரப்பட்ட பிரிவுகளையும் கருத்துக்களையும் உடையவர்கள் பள்ளிவாசலின் உறுப்பினர்களாக இருக்கும் இடங்களில் ஜனநாயக ரீதியாக அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள். தமது கொள்கையை அடுத்தவர் மீது திணிக்கும் சர்வாதிகாரப் பீடங்களாக நாட்டில் எவ்வளவோ பள்ளிவாசல்கள் இயங்கி வருகின்றன. தேர்தலே நடத்தாமல் அதிகாரத்தை நடத்தி செல்கின்ற எத்தனையோ டிரஸ்டி போர்டுகள் நாட்டிலே இருக்கின்றன. கொலைகாரனும் அநியாயக்காரனும் போக்கிரிகளும் வம்பர்களும் நிர்வாகத்திலே இருந்து கொண்டு சமூகத்தை அரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அநியாயங்களையெல்லாம் பார்த்துச் சகித்துப் பழகிய சமூகம் அநியாயத்துக்குப் பழக்கப்பட்டுப் போய் தற்போதைய பாராளுமன்றமாக புனித பள்ளிவாசல்களையும் விட்டு வைக்குமானால் இந்தச் சமூகம் இந்த நாட்டில் இருப்பதால் என்ன பயன் ? நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கின்ற ஒரு கூட்டம் உலகில் இருக்க வேண்டும் என்பது உலகம் இயங்குவதற்கான நியதியாக வரையறுக்கப்பட்டிருக்குமானால் அந்தப் பணி நடக்காவிட்டால் உலக இயக்கம் எப்படி அமையும் ?

சகிப்புத் தன்மை என்பது அநியாயங்களைச் சகித்துக் கொண்டு வாழ்வதல்ல. அநியாயத்துக்கு எதிராக வாயைத் திறந்து குரல் கூட எழுப்ப முடியாத நிலை ஈமானுள்ள முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டு விட முடியாது. அதனால் முதலில் அவர்களுக்கு அநியாயத்தை வெறுக்கப் பழக்க வேண்டும். எது அநியாயம் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அநியாயத்தைக் கூட மார்க்கத்தின் பெயரால் செய்கின்ற மதபோதகர்களே நம்மிடம் இருக்கையில் இந்தப் பணி கவனமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

உலகில் அநியாயத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்களின் எண்ணி்க்கை தான் அதிகமாக இருக்கிறது. சொல்லப் போனால் எல்லா இடங்களிலும் அநியாயம் தான் ஆட்சி செய்கிறது. இந்த நிலையை மாற்றாவிட்டால் ஒரு ஜாஹிலிய்ய சமூகத்தில் வாழ வேண்டிய நிலை தவிர்க்க முடியாமல் போய்விடும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்றம், வஞ்சகம் எல்லாம் அந்தச் சமூகத்தின் பண்பாடாக மாறிவிடும்.

இலங்கையில் முஸ்லிம் சமூகம் இந்த நிலைக்குத் தள்ளப்படுவதற்கு முன்னர் அந்தச் சமூகத்தில் அநியாயம் நடப்பதை வெறுப்பதற்கான, அதற்கெதிராக முயற்சிப்பதற்கான, அதற்கெதிராகத் துணிச்சலுடன் செயற்படுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அநியாயத்தை மனதால் வெறுப்பது ஈமானின் பலவீனமான இறுதி நிலை. பலமில்லாத ஈமானைக் பலமடையச் செய்யும் பணியை எல்லோரும் சேர்ந்து முன்னெடுக்க முடியுமாக இருந்தால் நாட்டுக்குச் சிறந்த முன்மாதிரியுள்ள சமூகத்தைத் தந்த பெருமை இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் கிடைக்கும்.

அதைவிடுத்து அல்லாஹும்ம அஇஸ்ஸல் இஸ்லாம வல் முஸ்லிமீனுக்கு ஆமீன் சொல்வதால் மட்டும் எதுவும் விளையப் போவதில்லை.